10.19.2007

அன்பை பற்றிடடா!



நாலு பேரின் நடிப்பிலே
நாடக மேறியது மேடையில்
இன்று நாலாப் பக்கமும் நடிப்பிலே
மேடையின்றி நாடகமே
முறையோடு வாழ்பவர்க்கு
முதுகுக்கு பின்னே கண் வேண்டாம்
குறையை முறையாக்கி க் கொள்பவர்க்கு
கால் பாதத்திலும் கண் வேண்டும்
சாக்கடையும் சந்தன சாயம் பூசி
சமுதாய வீதியில் வலம் வரவே
வேசித் தொழிலும் நாசமாகும்
இந்த வீண் கெட்ட நாட்டினிலே
தாயும், தந்தையும் ரெண்டாகவே
தாரங்கள் மகனின் மனதினிலே
இந்த கோரங்கள் இங்கு நிலைத்திடவே
பதிகள் கோர்ட்டின் வாசலிலே
போலிகள் நிறைந்த சமூகத்திலே
புன்னகை பொலிவு கடை வீதியிலே
தாலிகள் சேலையின் மறைவினிலே
சில வேசியும் பத்தினி வடிவினிலே
தோழிகள் தொட்டில் சுமக்கையிலே
கட்டின மனைவி மலடியாய் வீட்டினிலே
பாவிகள் காவிகள் போர்வையிலே
பரம்பொருளும் பாவியாய் வீதியிலே
பெண்மையின் சாரம் நகைக்கையிலே
பொம்மையும் தாய்மை அடையுதடா!
ஆண்மை வேடம் தரிக்கையிலே
இயந்திரம் தந்தை ஆனதடா!
தூக்க மாத்திரை உண்டிடவே
உனக்கு வாழ்க்கை தேவையா என்னிடடா!
சொர்க்கம் ஒன்று உண்டென்றால்
புவி வாழ்வில் அன்பை பற்றிடடா!

10.18.2007

பேசாத விட்ட நொடிகள்


பேசுவோம் பேசுவோமென்று நாம்
பேசாத விட்ட நொடிகள் தான்
நம் நட்பை இன்றும் பேசுகிறது.....
சிரிப்போமென்று தெரியாமல்
சிரித்த கணங்கள் தான்
நெஞ்சில் இன்றும்
பசுமையாக நிற்கிறது................
கவிதையாய் நினைவுகளும்
புதினமாய் நிகழ்வுகளும்
ஓவியமாய் சந்திப்புகளும்
புதைந்திருக்கும் நெஞ்சுக்குள்
எப்பொழுதாவது நிகழும் சந்திப்பு
நமக்குள்ளிருக்கும் நினைவுகளை
விழிக்கச் செய்யுமென்றால்
நம் நட்பின் அந்த நொடிகள்
லேசான ஈரத்துடனே பதிவாகும்
நெஞ்சுக்குள் ஆழமாய்.............................

10.17.2007

பொது மகளீர்.......................


இது வரை குப்பைத் தொட்டிக்கு
செல்லாத காகிதங்களால் ,நாங்கள்
குப்பையாகிறோம்

.......................................................................................


குப்பைத் தொட்டிக்கு
சென்ற பின்னும்
மீண்டும் பூஜைக்கு வரும்
மலர்கள் நாங்கள்

.........................................................................................


வெற்றுக் காகிதங்கள் நாங்கள்
இது வரை எங்களின் மேல்
எந்த ஓவியமும் வரையப்படவில்லை
எந்த கவிதையும் எழுதப்படவில்லை
கிறுக்களுக்கும் கிழிசலுக்குமே
எங்களின் சதைகள் தேவைப்படுகின்றன
வெற்றுக் காகிதங்கள் நாங்கள் .................................

10.16.2007

நினைவெனும் மெல்லியநூலிழை


எனது வெட்க்கத்தின் வேர்களில்
தண்ணீர் ஊற்றியவன் நீ
எனது இரவுகளின் ரகசியநொடிகளை
நீளச் செய்தவன் நீ
என் மனதின் ஒவ்வொரு அசைவும்
உன் நினைவெனும் மெல்லியநூலிழையால்
பிணைக்கப்பட்டிருக்கிறது
அன்பை வெளிக்காட்டுவதில்
உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான்
இருப்பினும் அன்பில் வறுமை
இல்லை என்னிடம்
மூடிய பின்னும் எனது விழிகளில்
பார்வை மறைவதிலலை
உன் முகம் மட்டுமே
எனது மௌனங்களில் வெளிப்படும்
அன்பை உன்னால் உணர முடியவில்லை
எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன்
என் வார்த்தைகளை விட
என் மௌனத்தை அல்லவா
நீ எளிதில் புரிந்துக் கொள்வதாக
எண்ணியிருந்தேன் இது வரை................
போகட்டும் எப்பொழுதுமே
உன் வார்த்தைகளும் என் மௌனங்களும்
தானே உறவாடிக் கொண்டிருந்தது
இப்பொழுது மட்டும் என்னிடம்
வார்த்தையை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம்
சொல்!
பேசிக் கொண்டிருப்பவன் நீ
கேட்டுக் கொண்டிருப்பவள் நான்
எனவே நீயே பேசிவிடு !
நம் நேசத்தைப் பற்றி அதில்
நம்முடனே தவழ்ந்து வந்த நாட்களைப் பற்றி
பேசாமல் மட்டும் இருந்து விடாதே!
உனது நேசங்க்களின் தொகுப்புக்கு
தோல்வி என்ற தலைப்பை
மட்டும் வைத்துவிடாதே!
தயவு செய்து பேசிவிடு!
என் சுவாசத்தினுள் உனது
நேசக் காற்றினை வரவேற்க
காத்திருக்கிறேன்......
உனது வார்த்தைகளில் சில
என்னை கோபப்படுத்தியதுண்டு
அப்பொழுதெல்லாம் எனது
கோபத்தை ரசிப்பதற்க்காகவே
பேசினேன் என்பாயே.....
இப்பொழுது என் காதலை
ரசிக்க கொஞ்சம் பேசேன்!
நான் நிச்சயம் கோபம்கொள்ள மாட்டேன்

உனக்கு ஒரு கும்பிடு

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது.........
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று.......................



அனுமதிப்பதில்லை


கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய.................




என்னைப் பார்த்து நீ......


துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ........
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ......
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது

Popular Posts