3.08.2012

அரவான் – அறத்தைச் சொல்லும் ஒரு முயற்சியில் குழப்பம்


      
     அரவான் இந்தத தலைப்பை முதன்முதலில் சுவரொட்டிகளில் பார்த்த அனைவரின் மனதிலும் இந்தப் படத்தின் தலைப்பு ஒரு சலனத்தை ஏற்படுத்தியது. அரவானின் பொருள் என்ன என்ற தேடலில் தலைப்பைப் பார்த்த அனைவரும் ஈடுபட்டிருப்பர். பாம்பு என்று ஒரு சாரார் சொன்னார்கள். மகாபாரதத்திற்கு ஒரு சாரார் நம்மை அழைத்துச் சென்றார்கள்.

     மொத்தத்தில் ஆதி, காளைகளின் கூட்டத்தில் ஒரு காளையின் மீது ஏறி வருவது போல் ஒரு சுவரொட்டி தான் படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பைத் தந்தது எனலாம். அரவானின் பொருள் மிகச் சிறந்த வீரன் என்பதாக இறுதியில் எல்லோராலும் திரையில் காண்பதற்கு முன்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
     திரைக்கு வரும் முன்னரே அப்போகலிப்டோ, காவல் கோட்டம், மகாபாரதக் கதாப்பாத்திரம் என்று மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது அரவான். அது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் திரையுலகத்தினரிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது அரவான். ப்லிம் கேமராவை விடுத்து டிஜிட்டலில் முயற்சித்திருக்கிறார்கள்.
     ஒரு மிகப் பெரிய வீரனின் கதையைப் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வில் தான் இந்த தலைப்பு எல்லோர் மனதிலும் உலா வந்தது.
     திரைப்படம் வந்து மூன்றாவது நாள் படத்திற்கு சென்றால், திரையரங்கில் நான்கில் ஒரு பங்கு கூட்டம் தான் இருந்தது வருத்தம் தான்.
     18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு பெரும் பிரிவினர்களை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். ஒன்று களவுத் தொழில் புரிபவர்களின் வாழ்க்கை இன்னொன்று காவல் புரிபவர்களின் வாழ்க்கை.
     சுற்றியுள்ள ஊர்கள் அனைத்துக்கும் காவலுக்குப் போகும் ஊரைச் சேர்ந்தவன் ஆதி(சின்னா). அவர்கள் ஊரிலேயே பக்கத்து ஊர்க்காரனான பரத்தைக் கொன்றுப் போட்டுவிடுகிறார்கள். பரத் இவர்கள் ஊரின் பரம எதிரி ஊர்காரர்களான கரிகாலனின ஊர். எனவே பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது.
     உயிருக்கு உயிர் என்ற கணக்கில் பாளையத்துக்காரர் இரு ஊர்களுக்கும் சுமுகமாக பஞ்சாயத்து சொல்கிறார். அந்த கணக்கில் சின்னா பலியாளாகிவிடுகிறான். இறப்பதற்குள் கொலையாளியைக் கண்டுப்பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் துப்புத் தேடி சின்னா செல்கிறான். பலி நாளுக்குள் அவனால் வர முடியாமல் போகவே அவனுக்குப் பதில் அவன் நண்பனைக் கொன்றுவிடுகிறார்கள். இதனால் ஊர் மக்கள் சின்னா மேல் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள்.
     சின்னா அதன் பிறகு அந்த ஊருக்கு வருகிறான். தன் குடும்பத்தாரிடம் நடந்த விஷயங்களையெல்லாம் சொல்கிறான். அவர்கள் ஊர் மக்களிடமிருந்து 10 வருடம் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்துவிடுஅதன் பிறகு வந்தால் ஊர் மக்கள் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள் என்று குடும்பத்தார் சொல்கிறார்கள்.
     சின்னா 10 வருடம் கழித்து வந்தானா...? இல்லை இடையில் மாட்டிக் கொண்டானா...? இதற்கிடையில் பசுபதியின் நட்பு, என்று கதையில் நிறைய கிளைகள்.
     ஆதி தன் பொறுப்பை சரியாக செய்திருக்கிறார். பசுபதி பாதி படம் வரை அவர் தான் தெரிகிறார். தன்ஷிகா சில காட்சிகளில் வந்து மனதை அள்ளுகிறார். கரிகாலன் நிறைய இடங்களில் வந்து மிரட்டுகிறார். பரத் சில காட்சிகளில் வந்தாலும் அவர் தான் கதையின் மையமாக இருக்கிறார். அஞ்சலி அங்காடித்தெருவுக்காகக் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திரையில் வந்துப் போகிறார். 

     மற்றபடி இந்த கதையில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் பிரம்மிக்க வைக்கிறது. அதற்காகவே இயக்குனருக்கு ஒரு சல்யூட். ஒவ்வொருவரும் அருமையாக பொருந்தியிருக்கிறார்கள்.
     இதற்கு முன் “ ஆயிரத்தில் ஒருவன், 7 ஆம் அறிவில்”’” “ ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் மட்டுமே நிறைய கலைஞர்களை பயன்படுத்தியிருப்பார்கள். இந்தப் படத்தில் இயக்குனர் இதை நிறைய இடங்களில் முயற்சித்திருக்கிறார்.
     கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் சேர்ந்து நிறைய முயற்சி எடுத்திருக்கிறார்கள். களவாடும் யுக்தி, விண்ணைப் பார்த்து களவுக்கு நேரம் குறிக்கும் திறமை, குறிச் சொல்லப் போய் வேவுப் பார்த்து வரும் முறை, அன்றே இருந்திருக்கிறது என்பது இதைப் பார்க்கையில் தான் தெரிந்தது. மேலும் களவுக்கு ஆள் எடுக்கையில் அவனுக்கு வைக்கும் போட்டி, என்று இன்னும் நிறைய மனதில் நிற்கும் கதையின் நுணுக்கங்கள்.  கதை நகரும் இடங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்கிறது. கதையில் வரும் வீடுகளும் அருமை. இருப்பினும் கதை நெடுக சிலக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தால் நன்றாக இருக்குமோ, இல்லை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருந்தால் நன்றாகயிருக்குமோ என்ற உணர்வைத் தருவதை மறுக்க முடியவில்லை.
     வசனம் சில இடங்களில் புரியவில்லை என்று நிறையப் பேர் சொன்னார்கள். இசை மனதை கொஞ்சம் கூடத் தொடவில்லை.
     இயக்குனர் கள்வர்களின் வாழ்க்கையை பசுபதியை வைத்து அழகாக நம் கண் முன் காட்டுகிறார். இருப்பினும் இந்த அழுத்தம் மையக் கதையான காவலர்களின் வாழ்க்கையில் இல்லை என்று தான் தோன்றுகிறது. கதை காவலர்களை மையாக வைத்து சுழலும் பொழுது, முதல் பாதி முழுவதும் பசுபதியை மையப்படுத்தியே கதை நகர்வதால் இரண்டாம் பாதியில் கதையைச் சொல்ல மிகவும் சிரமப்படுவது தெரிகிறது. திரைக்கதை அமைத்தவிதத்தில் எங்கோ தொய்வு இருப்பதை இயக்குனர் ஏன் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.
     இருப்பினும் 18 நூற்றாண்டை களவு, காவல் மூலம் நம் கண் முன்னே காட்டிய இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இந்த முயற்சி தமிழர்களுக்கு ஒரு புது அனுபவம்.
     நிறைக் குறைகளைத் தாண்டி இந்தப் படத்தை ஒரு முன்னோடியாக நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆயிரத்தில் ஒருவன், 7 ஆம் அறிவு போன்ற தரமற்ற படங்களின் மத்தியில் இதன் தரம் எங்கேயோ இருக்கிறது.
     அந்த அரவான் அன்று போர் நடக்கத் தன்னைப் பலிக் கொடுத்தான். இந்த அரவான் போர் நடக்கக்கூடாதென்று தன்னையே பலிக் கொடுக்கிறான். இருப்பினும் சொல்லும் விதத்தில் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு  இருப்பதால் இந்த அரவான் சற்றே சறுக்கல் .




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

9 comments:

  1. //களவாடும் யுக்தி, விண்ணைப் பார்த்து களவுக்கு நேரம் குறிக்கும் திறமை, குறிச் சொல்லப் போய் வேவுப் பார்த்து வரும் முறை, அன்றே இருந்திருக்கிறது என்பது இதைப் பார்க்கையில் தான் தெரிந்தது. மேலும் களவுக்கு ஆள் எடுக்கையில் அவனுக்கு வைக்கும் போட்டி, என்று இன்னும் நிறைய மனதில் நிற்கும் கதையின் நுணுக்கங்கள். கதை நகரும் இடங்கள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவர்கிறது.//

    அருமையான வரிகள்!

    ReplyDelete
  2. ஆனாலும் படம் எனக்கு பிடித்துள்ளது நண்பா

    ReplyDelete
  3. Replies
    1. ராஜா இந்தப் படம் என்னை பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்பதை தாண்டி நிறைய சிந்திக்க வைத்துவிட்டது. அதை ஒரு விவாதமாக இன்னொரு பதிவில் கூட எழுத நினைக்கிறேன். இருப்பினும் கலை என்பது ரசிகர்களின் சுயத்தை மறக்கடித்து தன்னுள் ஆட்க்கொண்டு ஒரேப் புள்ளியாகப் பயணிக்க வேண்டும். அது இந்த படத்தில் சிறிது விலகியிருக்கிறது.

      Delete
  4. விமர்சனம் அருமை...எனக்கு இந்த படம் பிடித்து இருக்கிறது...ஆயிரத்தில் ஒருவன், 7 ஆம் அறிவு போன்ற மொக்கை களுக்கு இது எவ்வளவோ தேவலை

    ReplyDelete
  5. ஒரு நாவலை படமாக்கும் போது உள்ள நடைமுறை சிக்கல் இப்படத்தின் திரைக்கதையில் நன்றாகவே தெரிகிறது ... நல்ல முயற்சி என்று சொல்ல முடிகிறதே ஒழிய சிறந்த படம் என்று சொல்ல முடியவில்லை ...உங்களின் நடுநிலையான விமர்சனம் நன்றாக உள்ளது ...

    ReplyDelete
  6. ஒவ்வொரு காட்சியையும் நான்றாக உள்வாங்கி, ஒரு தேர்ந்த விமர்சனத்திலேயே
    முழுப் படம் பார்த்த திருப்தி....

    வாழ்த்துக்கள் தமிழ்ராஜா...

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி.பாதி படம் பார்த்த திருப்தி மீதி படம் பார்த்துவிட்டு கருத்துரை இடுகிறேன்...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts