11.13.2012

தீபாவளி ஞாபகங்கள்





தீபாவளி என்றதும் எல்லோருக்கும் பல ஞாபகங்கள் வரும். முதலில் பட்டாசு.புது சினிமா,பலகாரம்,இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது என் பாட்டி வீடு தான்.

         தீபாவளி என்றதும் என் பாட்டி வீட்டிற்கு குடும்பமாக சென்று விடுவோம். அங்கு பாட்டி,தாத்தா சித்தப்பா,சித்தி,அத்தை,மாமா என்று சொந்தங்களுடன் பட்டாசையும் பலகாரங்களையும் பகிர்ந்துக் கொண்ட நாட்கள் அப்படியே பசுமையாக மனதில் நிற்கிறது. இன்று அந்த நாட்கள் நினைவுகளாக மட்டுமே மனதில் இருக்கிறது. இன்று இருக்கும் பணிச்சுமையில் இதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். பாட்டி சுடும்  அதிரசம்,முறுக்கு என்று அதை அவர்கள் அடுப்பிலிருந்து எடுக்கும் பொழுதே காலி செய்துவிடும் சேட்டையெல்லாம் இன்று எத்தனை வீடுகளில் பார்க்க முடிகிறதோ தெரியவில்லை.
      பட்டாசு என்பது ஒரு மறக்க முடியாத நியாபகம்.இப்பொழுதெல்லாம் வெடிக்காமல் பார்த்து ரசிப்பதால் அது நியாபகமாக மட்டுமே இருக்கிறது. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே, பள்ளிச் சென்று வரும் பொழுது தென்படும் பட்டாசுக் கடைகள் ஒவ்வொன்றிலும் அரை மணி நேரம் நின்று நண்பர்களுடன் கதை அளந்துவிட்டு வீட்டிற்கு தாமதமாக வந்து அடி வாங்கும் நாட்கள். இன்று எந்த சிறுவர்களிடமும் அப்படி ஒரு அனுபவத்தைப் பார்க்க முடியாது. ஏனெனில் பட்டாசுக் கடையே ஒரு வாரத்திற்கு முன்னர் தான் திறக்கிறார்கள். ஒவ்வொரு வெடியாக தீபாவளிக்கு வாங்க வேண்டும் என்று எத்தனைப் பட்டியல் போட்டாலும் அப்பா வாங்கி வரும் பட்டாசில் திருப்தி அடையாத அந்த மனதை இப்பொழுது நினைக்கையில் லேசாக சிரிக்கத் தோன்றுகிறது.
         எங்கள் வீட்டில் பலகாரம் செய்ய எதிர்வீட்டில் இருந்து வந்து உதவி செய்வதும், என் அம்மா நாலு வீடு தள்ளிச் சென்று அவர்கள் வீட்டில் சென்று முறுக்கு பிழிந்துக் கொடுத்துவிட்டு வருவதும் இன்று என்னால் எங்கும் காண முடிவதில்லை
       எல்லாவற்றிற்கும் மேல் தீபாவளியன்று மாலை நெருங்க, பட்டுப்பாவாடையிலும், தாவணியிலும்,  வெடிக்கு பயந்துக் கொண்டு பூந்தொட்டியும், சங்குசக்கரத்தையும் மட்டும் கொளுத்த காத்திருக்கும் அழகு தேவதைகள். அந்த பூந்தொட்டியைக் கொளுத்திவிட்டு அது மேலே ஒளியெழுப்பும் சமயத்தில் கைகளில் மத்தாப்புடன் தூரே வந்து அதை கண்டு பரவசமடையும் பொழுது, அந்த மத்தாப்பின் ஒளியும்,பூந்தொட்டியின் ஒளியும் அவர்களின் முகத்தில் பட்டு பிரகாசிக்கும் பொழுது ஒரு அழகு அவர்களின் முகத்தில் தெரியும் பாருங்கள் .அது தீபாவளி. அந்த அழகை, வீட்டு வாசல்களில் இப்பொழுது  காண முடிவதில்லை என்று நினைக்கிறேன். இன்றைய விடலைப் பையன்களுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.
       மேலும் வெடிக்காத பட்டாசுகளின் நியாபகங்கள் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்றுத் தெரியாது. ஆனால் எனக்கு நிறையவே இருக்கிறது. எல்லா பட்டாசும் தீர்ந்தப் பிறகு ரோட்டில் குப்பையாக கிடக்கும் பட்டாசுகளில் வெடிக்காத பட்டாசினைத் தேடிக் கண்டுப்பிடித்து அதை பிரித்து, அதில் தீக்குச்சியைப் பற்ற வைத்து ரசிப்பதில் ஒரு சுகம். ஆனால் இது வரை இந்த முயற்சியில் தீக்காயம் இன்றி தப்பித்தவர்கள் மிகக் குறைவு. தெருவுக்கு தெரு இந்த முயற்சியால் ஒரு பையன் தீக்காயத்துடன் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். இது மட்டும் இப்பொழுது இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.
        மொத்தத்தில் தீபாவளி என்பது நினைவுகளின் இருப்பிடமாகவே எனக்கு இன்றும் இருக்கிறது. ஏனெனில் இன்றைய பணிச் சுமைகளில் கடைகளில் பலகாரங்களும், ஒரிருவருடன் மட்டும் பகிர்ந்துக் கொள்ளும் பட்டாசு ஒளியின் மகிழ்ச்சியும்,தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஆக்கரமிப்பும் பெருகி வரும் இடங்களில் நான் வசிப்பதால் எனக்கு பழைய நினைவுகள் தான் தீபாவளியாகத் தெரிகிறது. 

       இந்தப் பதிவில் நான் நண்பர் மயிலனை முதலிலேயே நினைவுப்படுத்த வேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன். தலைத் தீபாவளி கொண்டாடும் மயிலனுக்கும், மற்றும் அனைத்துப் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் இனிய தீபாவளித் திரு நாள் வாழ்த்துக்கள்.
நட்புடன் 
தமிழ்ராஜா



3 comments:

  1. //பார்த்து ரசிப்பதால் அது நியாபகமாக மட்டுமே இருக்கிறது// அருமை

    நியபகங்களின் அணிவகுப்பு என் நியபகங்களையும் கிளர்கிறது

    ReplyDelete
  2. சொல்ல மறந்து விட்டேன் உங்கலுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts