12.16.2012

திரைவிமர்சனம் : கும்கி அழகான குழப்பம்



        சிவாஜியின் பேரன்,பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகன்,இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் சுந்தரபாண்டியனில் முதலில் காட்சி தந்து  மக்களின் மனதில் இடம் பிடித்த கதாநாயகி லட்சுமி மேனன்,இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்குனர் பிரபுசாலமனின் மைனாவின் பிரம்மாண்டமான வெற்றி, யானைகள் பற்றிய கதை,இப்படி நிறைய எதிர்ப்பார்ப்பை மக்களுக்கு இந்த படம் திரைக்கு வருவதற்கு முன் தந்திருந்தாலும். இந்த படத்தின் இசை வெளியீட்டுக்குப் பின் தான் இந்தப் படத்தைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு மேலும் பன்மடங்கானது.
         உண்மையில் இந்தப் படம் அந்த எதிர்ப்பார்ப்பையெல்லாம் பூர்த்தி செய்ததா…?
        ஒரு சாதாரண கோயில் யானை காட்டில் மதம் பிடித்து ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்துக் கொண்டிருக்கும் ஒரு ராட்சச யானையை எப்படி துவம்சம் செய்கிறது என்பதே கதை. இது சாதாரண செயலல்ல என்பதை கதையின் போக்கு நமக்கு கொஞ்சகொஞசமாக விளக்குகிறது. இந்த இரண்டு யானைகளின் போருக்கு நடுவில் ஒரு காதலை சொருகி பாடல்களை நிரப்பி நகைச்சுவையை தூவி, கண்ணுக்கு குளிர்ச்சித் தரும் காட்சிகளுடன் ஒரு படத்தை நமக்குத் தந்திருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன்.
       மலைக்காட்டில் நிகழும் ஒரு பிரச்சினை, விளைச்சலின் போது யானைகள் வந்து அட்டகாசம் செய்து பயிரை நாசம் செய்துவிட்டு மக்களை கொன்றுவிட்டுப் போகிறது. அந்த மலைஊருக்கு அரசாங்கத்தின் உதவி எதுவும் கிடைக்காததினால் அந்த ஊர் மக்களே ஒரு முடிவு செய்து கும்கி யானையை வரவழைத்து மதயானையை விரட்ட முடிவு எடுக்கின்றனர். (முதலில் இந்தப் படத்திற்கு மதயானையின் பெயரை வைப்பதாக தான் ஒரு தகவல் ”கொம்பன்.” பிறகு மதயானையை விரட்ட வரும் யானையின் பெயரையே ”கும்கி” வைத்துவிட்டனர்.) ஊர் மக்கள் தங்களின் சேமிப்பையெல்லாம் கொடுத்து ஒரு நபரிடம் கும்கியை அழைத்து வருமாறு சொல்கின்றனர். அந்த நபர் அவர் சொன்ன நேரத்திற்கு கும்கியை அனுப்ப முடியாமல் திணறுகிறார். அங்கு தான் நம் கதாநாயகன் தன்னுடைய கோயில் யானையை கும்கி என்று இரண்டு நாள் சமாளிப்பதாகச் சொல்லி அந்த மலைக்கிராமத்திற்கு வருகிறான்.
          அந்தக் கிராமத்தில் தலைவர் பெண்ணான கதாநாயகி அல்லியைப் பார்த்ததும், அங்கையே தங்க முடிவு எடுக்கிறான். தன் சுயநலத்திற்காக தன் தம்பிப் போல் பழகிய யானையையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் சேர்த்து பணயம் வைக்கிறான். இறுதியில் இவனுடைய சுயநலத்தால் என்ன நிகழ்ந்தது என்பது தான் முடிவு. 
         படத்தில் விக்ரம் பிரபு அறிமுகம் என்றாலும் தன் கடமையை நன்றாகவே செய்திருக்கிறார். நாயகி லட்சுமி மேனனைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. என்ன இவர்களுக்கு பாதி நேரம் பாடல்களில் மட்டுமே வாய்ப்பு தந்தது தான் வருத்தம். தம்பி ராமையாவை மட்டுமே நம்பி படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பது, அவரை யானைக்கு முன் நிற்க வைத்து நகைச்சுவை செய்வதில் அப்பட்டமாகத் தெரிகிறது. விக்ரம் பிரபுவின் காதலுக்கு தூபம் போடும் கதாப்பாத்திரமாக அஸ்வின்ராஜா அருமையாகப் பொருந்தியிருக்கிறார். அவரை சகட்டு மேனிக்கு கலாய்க்கும் கதாப்பாத்திரமாக படம் நெடுக மைண்ட் வாய்ஸில் பேசி நம்மை தம்பி ராமையா சலிப்பூட்டுவதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.
         இதை ஏன் சொல்கிறேன் என்றால் படத்தில் தம்பி ராமையாவும்,ஒளிப்பதிவாளர் சுகுமாரும், இசையமைப்பாளர் இமானும் தான் நம் கண்ணில் படுகிறார்கள். இயக்குனர் பிரபு சாலமனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இன்னும் அவர் மைனாப் படத்தின் டி.வி.டியையேப் போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை.
        இருப்பினும் சில வசனங்களில் கைத்தட்டல்கள் காதை கிழிக்கும் பொழுது இயக்குனர் நம் பல்ஸ் சரியாகப் புரிந்து வைத்திருப்பதை உணர முடிகிறது.
     (எ.க) ஏய் ஒரு சேலை கேட்டா உடனே உன்னால வாங்கிக் கொடுக்க முடியுமா..? என்று தம்பி ராமையா கேட்க
      அதற்கு அஸ்வின்ராஜா “ அப்டில்லாம் கேட்காது. உண்மையா லவ் பண்ற புள்ளைங்க அப்டில்லாம் கேட்காது. சும்மா ஏமாத்தறதுங்க தான் அது வேணும் இதுவேணும்னு கேட்கும் “ என்ற வசனத்தை சரியாக கூட கேட்க முடியாதபடி கைத்தட்டல்.
      இருப்பினும் கும்பி என்றதும் யானைகளின் கதையைத் தான் சொல்லப் போகிறார் என்றால் ஒவ்வொரு காட்சியிலும் யானையின் கால்,துதிக்கை,கண் என்று ஒவ்வொரு பாகமாகத் தான் காட்டுகிறாரேத் தவிர நம் மனதில் பதியும் அளவு மாணிக்கம் கண்ணில் படவே இல்லை. ஒளிப்பதிவு யானையைத் தவிர்த்து பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது.
       ஒரு மலைகிராமத்தின் வாழ்க்கையைச் சொல்ல வாய்ப்பு இருந்தும் படத்தில் அது சொல்லப்படவில்லை. ஒரு சாதாரண யானை பலம் வாய்ந்த கும்கியாக மாற எப்படியெல்லாம் பயிற்சித் தரப்படுகிறது என்பதையும் படத்தில் சரியாக சொல்லவில்லை. அது மட்டுமின்றி ஒரு ஆழமான காதலைச் சொல்ல படத்தில் வாய்ப்பு இருந்தும் கதைக்கு தேவையில்லாத நகைச்சுவையிலேயே படத்தை நகர்த்தியிருப்பது இயக்குனர் மைனாவின் கதையில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்பதை காட்டுகிறது.
      இந்த கதையை எடுக்க மிகுந்த மெனக்கெடல் நிகழ்ந்திருப்பதை படம் பார்த்தவர்கள் அத்தனைப் பேரும் உணர்ந்திருப்பார்கள். இருப்பினும் யானைகளின் வாழ்வாதாரத்தையும், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும்  மையமாக பின்னப்பட்ட இந்தக் கதைக்கு இவர்களின் மெனக்கெடல் எந்த வகையிலும் பொருந்தவில்லை என்பது இறுதிக் காட்சியில் அப்பட்டமாகத் தெரிகிறது. திரைக்கதையை  எங்கெங்கோ அலையவிட்டுவிட்டு  இறுதியில் மட்டும் சரியான இடத்தில் கொண்டு வர முயன்றால் என்னக் குழப்பம் நிலவும் என்பதை படம் முடிந்து வெளியேறும் பொழுது பார்த்தவர்கள் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் வெளிவரும் கற்பனையான முடிவு சொல்கிறது.
      திரையில் அழகான கவிதையாக விரியும் காட்சிகளும், அதற்கு ஏற்றாற்ப் போல் மென்மையாக மனதை வருடும் இசையும், அதற்கு பொருத்தமாக மனதை தைத்து உள்ளுக்குள் பயணிக்கும் வார்த்தைகளும் தான் கும்கியின் பலம். ஒரு முறை அவசியம் தமிழ் ரசிகர்கள்  பார்க்க வேண்டியப் படம்.
      ”சொல்லிட்டாளே அவ காதல” பாடலின் காட்சியமைப்பைப் பார்க்கவாவது திரையரங்கிற்கு ஒரு முறை செல்லலாம். மற்றபடி சொய் சொய் பாடலின் காட்சியமைப்பு மனதில் நிற்கவில்லை. நடனத்திற்கும் இசைக்கும் சம்மந்தமே இல்லை. கும்கி அழகான குழப்பம்.
     

நட்புடன் 

தமிழ்ராஜா

6 comments:

  1. Replies
    1. அவசியம் பார்க்கணும் நண்பரே

      Delete
  2. படம் பாருங்க என்று சொல்லுகிறீர்களா ? பார்க்க வேண்டாம் என்று சொல்லுகிறீர்கள ? குழப்பமா இருக்கு நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஒரு முறையேனும் அவசியம் பார்க்க வேண்டிய படம் தான் தோழி. கண்ணை கவரும் காட்சிகளுக்காகவும்,காதுகளுக்கும் மனதிற்கும் விருந்தளிக்கும் இசைக்காகவும் அவசியம் பாருங்கள்

      Delete
  3. ஹா.. அழகான விமர்சனம்.. மோகன் சார் விமர்சனம் படித்தேன். கொஞ்சம் உங்கள மாதிரி தான் அவரும் குறிப்பிட்டு இருக்கிறார்.
    ஆனால் கும்கி யானைக்கு பதில் சாதாரண யானை இருபதாக அவர் குறிப்பிட்டு இருந்ததற்கு விளக்கம் உங்களிடம் கிடைத்து விட்டது..

    எனக்கு அந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு: சொல்லிட்டாலே...

    நன்றி தமிழ்

    ReplyDelete
    Replies
    1. விளக்கம் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அந்தப் பாடல் கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கும். அருமையான காட்சியமைப்பு.அவசியம் திரையரங்கிறகு சென்றுப் பாருங்கள்

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts