11.03.2011

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு தமிழில் தான் இந்த பழமொழி தோன்றியிருக்கிறது


இது நம் தமிழகத்தில் வெகு காலமாக உலவிக் கொண்டிருக்கும் பழமொழி. பழமொழி என்பதால் நிச்சயம் இது தோன்றிய காலகட்டத்தை நாம் அறுதியிட்டு கூறிட முடியாது. இருப்பினும் நம் தமிழகம் இன்று அந்த பழமொழியை எந்தளவு பின்பற்றுகிறது என்று தெரியவில்லை.

     எத்தனை தான் பட்டாலும் மக்கள் திருந்தப் போவதில்லை என்பதை இந்த தேர்தலிலும் காட்டிவிட்டனர்.இது நாள் வரை யார் வந்தாலும் எதுவும் செய்யவில்லை என்பதே குறையாக சொல்லிக் கொண்டிருந்த தமிழக மக்கள், இப்பொழுது யார் வந்தாலும் எனக்கு எவ்வளவு கொடுப்பாய் என்று கேட்கும் அளவுக்கு கீழ்த் தனமாக இறங்கிவிட்டனர். இப்படியிருக்க ஊழலை எதிர்த்து நாம் கொடிப் பிடிப்பதில் எந்த பயனும் இல்லை.

     இப்படி கை நீட்டி பணம் பெற்று ஓட்டு போடும் மக்களுக்கு ””’நமக்கு சேவை செய்ய நமக்கு எதுக்கு பணம் தருகிறார்கள் வேட்பாளார்கள் என்ற உண்மை அவர்களுக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்து தான் போடுகிறார்களா?
     இந்திய  அரசியல் சட்டம் இயற்றி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உண்மையில் இந்திய அரசியலைப்  பற்றிய அறிவும்,தெளிவும் மக்களிடையே இருக்கிறதா? இப்படி ஒரு கேள்வியை அரசியல்வாதிகளிடம் கேட்டாலே இல்லை என்ற பதில் தான் வரும. அப்படி இருக்க சாதாரண மக்க்ளுக்கு எப்படி இதெல்லாம் புரிய வாய்பிருக்கிறது. அரசியல் என்றால் ஏமாற்றுவது என்பதாக தான் மக்கள் அதனை புரிந்துக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் ஏமாற்ற போகிறார்கள் , நமக்கு ஏதாவது அதில் கிடைத்தால் போதும் என்றே நினைக்கிறார்கள்

            இல்லையென்றால் இன்று தெருவில் குடியிருக்கும் மனிதர்களெல்லாம் அரசியல் வாதிகளின் சட்டையை எப்பொழுதுதோ பிடித்து எனக்கெங்கே வீடு  என்று போராடியிருப்பார்கள். ஆனால் படித்து பட்டம் வாங்கியவர்களுக்கே அரசியலின் உண்மையான திட்டங்கள், கொள்கைகள் தெரியவில்லை. ஏனெனில் அந்த பணியை செய்ய வேண்டிய அரசியல்வாதிகள் அதை சரியாக செய்வதில்லை. எனவே தான் பலருக்கும் தேசத்தின் மீதுள்ள பற்று பேச்சளவிலேயே இருக்கிறது.
     ஒரு வகுப்பில் எத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், அதில் பாடத்தை நன்கு புரிய வைக்கக் கூடிய ஆசிரியர் மட்டுமே மாணவர்கள் மத்தியில் பேசப்படுவார். அவரைப் போன்றவர் மூலமே சிறந்த மாணவர்கள் உருவாகிறார்கள். இந்த நாட்டில் கல்வி முறையே சரியில்லாத பொழுது அதற்கும் வழியில்லை என்று தான் சொல்ல முடியும். உண்மையில் இது தமிழகம், இந்தியா தாண்டி உலக அளவிலான பிரச்சினை.
     வரலாற்றை எடுத்துக் கொண்டால் கடந்த 50 ஆண்டுகளில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் நாட்டிற்கான திட்டங்களை வகுத்து வளர்க்கும் தருவாயில் ,விஞ்ஞானத் தொழில் நுட்பம் மட்டும் அதை தாண்டிய வளர்ச்சியை பெற்றதால் , உலக கலாசாரமே ஒட்டு மொத்த மாற்றத்தை அடைந்துள்ளது.
     மனிதன் தன்னை சுற்றியுள்ள இயற்கையான சூழலை தன் விஞ்ஞானத் தொழில்நுட்பத்தால் செயற்கையாக் மாற்றிக் கொண்டான். இருப்பினும் இந்த வளர்ச்சியும், மாற்றங்களும் பரவலாக நிகழாமல் வசதிப் படைத்தவர்களிடையே மட்டுமே பெருமளவில் பெருகியிருக்கிறது. இந்த ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்காகவே உலகம் முழுதும் பல அரசியல் கொள்கைகள் தோன்றி இன்றும் அதைக் கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருக்கிறது.
     ஒவ்வொரு நாட்டின் வாழ்க்கைமுறைப்படியும்,சமூக சூழலின்படியும் அதன் நிறை குறைகள் மிகுந்தும் குறைந்தும் காணப்படுகிறது. இந்த கொள்கைகள் என்றுமே நிரந்தமல்ல என்பதை எல்லா நாடுகளுமே புரிந்துக் கொள்ள வேண்டும். அந்த மனநிலை இருக்கும் நாடுகள் ஓரளவு தங்களுடைய  சமூகத்தில் சம நிலையை தக்கவைத்திருக்கிறது.
     ஒரு நாட்டின் சம நிலை அந்த நாட்டின் சட்ட ஒழுங்கைப் பொருத்தே அமைகிறது. மக்களுக்கான பொறுப்பை அவர்கள் உணரா வண்ணம் செய்யும் நாடுகள் சம நிலையின்றி தத்தளிக்கிறது.
     நம்முடைய நாட்டில் மக்களுக்கான பொறுப்பை அவர்கள் உணரா வண்ணம் அரசியல்வாதிகளே தடுத்துவிடுகின்றனர். காரணம் மக்களை அறியாமையில் வைத்திருப்பதால் அவர்கள் அடையும் பதவி,பணம் இன்னும் சில ஆதாயம்.
     ஒரு நாட்டிற்காக கிரிக்கெட்டில் ஒரு வீரர் சதம் அடித்தால் கைத் தட்டுகிறோம். வெற்றிப் பெற்றால் மகிழ்கிறோம்.தோல்வியடைந்தால் அந்த கோபத்தை அவர்களிடமே காட்டுகிறோம். இது நாகரிகமற்ற செயல் என்றாலும், அந்த கோபம் தேவை தான்.
     ஆனால் வேறு இடத்தில், நம் மக்கள், வாழும்,வாழ்ந்து கொண்டிருக்கும், நாளை வாழப் போகும் நாட்டை சில மனிதர்கள் குப்பையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைக் கேட்காமல் எத்தனையே கோடிகளுக்கு நம் தலையை அடமானம் வைத்திருக்கிறார்கள் நம் அரசியல் பிரதிநிதிகள். அந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் சட்டையை பிடித்து கேட்க நமக்குத் துணிவில்லையென்றாலும், அவர்களை அரசியலை விட்டே விரட்டவாவது ஏன் நமக்கு மனமில்லை.

     கிரிக்கெட் சூதாட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வீரர்கள் சிக்கினார்கள். அதன் பிறகு அவர்கள் கிரிகெட்டிலே இல்லை. அது மட்டும் எப்படி நிகழ்கிறது.
     இந்த முறை ஏன் அரசியலில் நிகழவில்லை. காரணத்தை நீதி மன்றங்களின் மேல் போடாதீர்கள். கிரிக்கெட் மீது உள்ள ஆர்வம் நம்மை தரமான நேர்மையான வீரர்களை உருவாக்க வைத்தது. அதன் பலனாக 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையையும் நாம் வாங்கி விட்டோம்.
     இந்த ஆர்வமும், வேகமும் எதிர்ப்பார்ப்பும் ஏன் அரசியலில் இல்லை. எப்படி உலகக் கோப்பை வாங்க வேண்டுமென்பது இந்தியாவின் ஒட்டு மொத்த மக்களின் வேண்டுதலாக இருந்ததோ...
     அப்படியொரு மிகப் பெரிய அலை அரசியலிலும் வர வேண்டும். கொஞ்சம் கடினம் தான். இந்தியா தோற்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு  பணம் கொடுத்தால்,ஒரு இந்தியனாக வாங்க நிச்சயம் மறுப்பார்கள். அந்த உணர்வு நல்ல மனிதர்களை பணத்தின் அடிப்படையில் தோற்கடித்துவிடலாம் என்று எண்ணுகின்ற சமூக விரோதிகளுக்கு எதிராகவும் மக்களுக்கு வர வேண்டும்.
     ஏனெனில் இந்தியாவில் முக்கியமாக நம் தமிழகத்தில் தான் இந்த கொடுமை மிகுதியாக நடக்கிறது. அதை களைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்
நாம் செய்ய வேண்டியதை நாம் தானே நம் நாட்டிற்கு செய்ய முடியும் வேறு யார் செய்வார். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு தமிழில் தான் இந்த பழமொழி தோன்றியிருக்கிறது

6 comments:

  1. ஊழலில்லா நாடு வேண்டும், நல்ல பதிவு வாழ்த்துக்கள்....!!!!

    ReplyDelete
  2. அன்பரே உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை...முதலில் ஒவ்வொரு அரசியல் வாதியும் நான் ஆட்சிக்கு வந்தால் இது இலவசம், அது இலவசம் என்று சொல்லி ஓட்டுக் கேட்பதை ஒழிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. @sumayha
    கொஞ்சம் கடினம் தான். இலவசத்தை வாங்க நினைக்கும் மக்களின் மனநிலை உயர்ந்தால் ஒழிய அது நடக்காது

    ReplyDelete
  5. சரியாக சொன்னீர்கள் ஆனால் எல்லோரும் இதை உணர்த்தல் நம் நாடு வல்லரசுதான் ...எப்போது உணர்வார்களோ ???

    ReplyDelete
  6. வல்லரசுகளை விட நல்ல அரசுகள் தான் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகத்திற்கே நன்மை பயக்கும். தேடி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts