• 11.28.2011

  தமிழன் அடி வாங்குகிறானா, முதலில் யார் தமிழன் ?


       தமிழா எழுந்திரு...! தமிழன் அடி வாங்குகிறான்...! என்று நிறைய முழக்கங்களை நீங்கள் கடந்த சில வருடங்களாக தமிழகமெங்கும் பார்க்கலாம். அது என்ன எல்லா விளம்பரங்களும் தமிழன் அடி வாங்குகிறான், தமிழர்களே எவ்வளவு நாள் தான் ஏமாறுவீர்கள் என்று கோஷமிட்டபடியே இருக்கின்றன.
       முதலில் தமிழன் எங்கு இருக்கிறான். அதைச் சொல்லுங்கள். தமிழ் பேசினால் தமிழனா ? தமிழ் மண்ணில் வாழ்ந்தால் தமிழனா ? யார் தமிழன் ?

       “ யாதும் ஊரே யாவரும் கேளீர்” “ என்று முழக்கமிட்டவன் தமிழனா?  இல்லை தமிழ்நாட்டிற்க்குள்ளேயே மனிதர்களை பிரித்துப் பார்க்கும் உணர்வைத் தூண்டுகிறவன் தமிழனா?  போலியாகத் திரைப்படங்களில் வசனங்களில் மட்டும் தமிழ் பேசிவிட்டு தமிழர்கள் என்று மார்த்தட்டிக் கொள்வதில்லை தமிழ் உணர்வு.
  எல்லா மனிதர்களையும் தன் இனமாக பாவித்து உதவியவன் தான் தமிழன். அதை விடுத்து மனிதர்களை எல்லாம் இனம்,மொழி,மதம் வாரியாக பிரிக்கும் இன்றைய கொள்கைகளில் தமிழன் எங்கு இருக்கிறான்.
       அடி வாங்குபவன் என்றுமே தமிழன் இல்லை. அடிக் கொடுப்பவன் தான் தமிழன். தமிழன் மட்டுமில்லை மனிதனும் கூட...

       தமிழன் வேறு மனித கலாசாரம் வேறில்லை.இரண்டுமே ஒன்று தான்.
       மனித சிக்கல்களையும், உணர்வுகளையும் பக்குவப்படுத்தும் சிறந்த கலையை படைத்தவனே தமிழன். தமிழன் அடிக்க வேண்டுமெனில் முதலில் அடிக்க வேண்டியது விவசாயப் பூமியான தமிழகத்தில் நிலத்தை கூறுப் போட்டு விற்று கான்கீரிட் கட்டிடங்களாக்கும் கொள்ளையர்களைத் தான். ஏரிக் குளங்களையெல்லாம் வளைத்து வீடுகளாக்கிய சமூக விரோதிகளைத் தான். ஆனால் நாம் அடிக்கவில்லையே ... ஏன் நமக்கும் வீடு வேண்டும். எங்கிருந்தோ வந்து நமக்கு கடன் தருகிறேன் என்றவுடன், நம் கன்னிப் பூமியை விபச்சாரியாக்கி விட்டோம். நதிகளையும், நீர் வளங்களையும் உறிஞ்சி மலடாக்கிவிட்டோம். மனிதனாகவே வாழ இயலாத இந்த நிலத்தில் தமிழன் என்று பெருமை சொல்லிக் கொள்வது அவமானம்.

       அடுத்தவனிடம் தண்ணீர் கேட்கும் முன், நம் நீர் வளங்களை கொள்ளையடிக்கும் துரோகிகளாக நாமே இருக்கிறோம் என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்.
       முதலில் தண்ணீரை நாம் நேசிக்கிறோமா...?  அப்படியிருந்தால் கூவம் ஏன் இன்னும் சுத்தமாகவில்லை.
       இங்கு மனிதனே இல்லாதப் பொழுது தமிழன் என்று சொல்வது வீண். சொல்பவன் ஒவ்வொருவனும் சுயநலவாதி தான். இதே தமிழகத்தில் தான் விவசாய நிலங்களைப் பற்றியும் அதை கொள்ளை அடிக்கும் துரோகிகள் பற்றியும்,தமிழனின் நிலைப்பற்றியும் வந்த ஆண்மைத் தனமான படம்    அந்தளவு வரவேற்புப் பெறவில்லை. ஆனால் அறிவு ஜீவித்தனமாக தமிழ், தமிழன் என்று சில இடங்களில் உணர்வைத் தொட்டுக் கொண்ட படங்கள் எல்லாம் விளம்பரங்களினால் வரவேற்ப்பைப் பெறுகிறது. விளம்பர எலிகளாக வாழும் மக்கள் மனிதர்களாகவே வாழ வில்லை, தமிழனாக எப்படி வாழ முடியும்.
       முதலில் மனிதனாக வாழப் பழகுவோம். தமிழன் என்று நாம் சொல்லிக் கொள்வதை விட நம்மை மற்றவர் சொல்வார்கள் அன்று தமிழன் என்று...

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே