3.28.2013

தமிழர்களே !பெரிய கோடொன்றை உருவாக்குவோம்


 ஒரு இந்தியனாக அல்ல... தமிழனாக அல்ல... ஒரு மனிதனாக
IPL ஒரு விளையாட்டல்ல... வியாபாரம்... விளையாட்டில் பாகுபாடு கூடாது என்று கூக்குரலிடும் வடக்கு மீடியாக்களுக்கு உரைக்குமா என்றுத் தெரியவில்லை.
தமிழின் நடுநிலையாளன் வள்ளுவன் காட்டிய நெறியில் என்னுடைய சில கருத்துக்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு

சிறியக் கோட்டை எப்படி அழிப்பது என்பதிலேயே நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம். பெரிய கோடொன்றை உருவாக்கும் முயற்சி நம்மிடையே மலர வேண்டும்.இலங்கை பிரச்சினை சிறிய கோடு. நம்முடைய மனித ஆற்றலைப் பயன்படுத்தினால் அதெல்லாம் தூசி. ஆனால் நம்முடைய மனித ஆற்றலை இனம் என்னும் சிறியக் கோட்டால் நாமே சுருக்கிக் கொள்வது அறிவீனம்.

இப்பொழுது சமூக ஊடகங்களில் நாம் சகட்டு மேனிக்கு எல்லோரையும் எதிர்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இது உண்மையில் ஆரோக்யமற்ற சூழலாகவே நான் பார்க்கிறேன். நம்முடைய கோபமும், சக்தியும் எதை நோக்கி இருக்க வேண்டும் என்ற புரிதல் உண்மையில் இங்கு இருப்பதாகவே தெரியவில்லை. இலங்கையில் இருக்கும் ஒவ்வொருவரின் சரித்தரத்தையும் புரட்டி அவர்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் சமூகத் தளங்களில் நம் தமிழர்கள் பதிவிடுவது போன்ற செயல்களையெல்லாம் பார்க்க முடிகிறது. 

இங்கு நடப்பது என்ன வரலாற்றை எல்லோரும் தெரிந்துக் கொள்ள வைக்கும் போராட்டமா...? இல்லை மனித நேயத்திற்கு எதிராக செயல்படும் இலங்கையை எதிர்க்கும் போராட்டமா...?

போராட்டங்கள் எப்பொழுதும் ஒரு இலக்கை நோக்கியே இருந்தால் ஒழிய அதை நாம் அடைய முடியாது. மாணவர்கள் போராட்டம் சமீபத்தில் நிகழ்ந்த ஐ.நா மனித உரிமை கழகத்தில் நிகழ்ந்த தீர்மானத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களும் அதை ஆரோக்யமான விவாதமாக பல முறைகளில் வெளிப்படுத்தியது.

பிறகு அது அப்படியே ஒரு குறிப்பிட்ட சாராரை எதிர்ப்பதற்காக தடம் மாறியது. நடிகர் நடிகைகளை எதிர்த்தது. பிறகு இங்கு வரும் சிங்களவர்களை எதிர்த்தது. அப்படியே ஒரு தனி நபர் விமர்சனமாக மாறி பல தனி நபர்களை எதிர்த்துக் கொண்டு வருகிறது. திடீரென நான் 2000 வருடமாக தமிழன் 70 வருடமாக தான் இந்தியன் என்று வாசகங்களையும் பார்க்க முடிகிறது. இதற்கு தூபம் போடுவது போல் தான் இலங்கை தூதன் ”சிங்களவர்கள் எல்லோரும் இந்தியாவின் வட இந்தியர்கள் தான் என்று நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்.

உண்மையில் இது தான் போராட்டமா...? இந்த வீண் வாசகங்களினால் எந்த பலனும் இல்லை. 20009 ல் வர வேண்டிய கோபமே இன்று ஏன் இப்படி விஸ்வரூபம் எடுத்தது. நமக்கு கோபம் வர வேண்டுமென்றால் ஒருவன் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினால் வருமா...? வெட்கமா இல்லை... அப்படியெனில் அன்று தீக்குளித்த முத்துக்குமாரின் கோபம் நியாயமற்றதா...? அவன் கோபமல்லவா நியாயமானது. சம்பவம் நிகழும் பொழுது கோபப்படாமல் இப்பொழுது கொதித்தெழுவது நம்முடைய மிகப் பெரிய அறியாமை. இதை சிங்களவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளத் தான் போகிறார்கள். ராஜபக்சே எத்தனைப் பெரிய ராஜதந்திரி என்பதை நம்முடைய போராட்டங்கள் காட்டுகின்றன. ஏனெனில் நம்முடைய போராட்டங்கள் தமிழர்களை தனிமைப்படுத்துவதாகவே இருக்கிறது. இது பலம் அல்ல... பலவீனம். தமிழனின் பலமே ஒன்றுபடுவது தான்.

உண்மையில் நமக்கு தேவை வள்ளுவர் சொன்ன ராஜதந்திரம். கையாலாகாதவன் தான் பிறரைக் குறைக் கூறிக் கொண்டிருப்பான்.

ஒரு முறை லயோலா கல்லூரி மாணவர் செம்பியனின் உரையை புதிய தலைமுறையில் கேட்க முடிந்தது. உண்மையில் அது மிகச் சிறந்த ராஜதந்திரம். அதை விடுத்து யார் யாரையோ ஏன் மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தரவில்லை. ஏன் குரல் கொடுக்கவில்லை என்று மாணவர்களின் போராட்டத்தின் சக்தியை குறைக்க வேண்டும்.

ஒரு போராட்டத்தில் ஏன் கலந்துக் கொள்ளவில்லை, என்று நாம் கேட்பது. நம்முடைய போராட்டத்தை நாமே பலவீனப்படுத்துவதற்கு சமம். அய்யோ அதில் கலந்துக் கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று அவர்களல்லவா வருந்தும் அளவு போராட்டம் இருக்க வேண்டும். 

எனவே நல் உள்ளங்களே தயவு செய்து போராட்டத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளவில்லையென்றாலும். வீணாக சமூக தளங்களில் உங்கள் சுயலாபத்திற்காக உங்களுக்கு எதிர்க்க வேண்டும் என்ற நபர்களை, ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக மாற்றி எதிர்க்காதீர்கள். ஏனெனில் இன்று தமிழகத்தில் நிக்ழவது மிகப் பெரிய சர்வ தேசிய அரசியல். இந்த போரே நம் கடல் எல்லையை மையமாக்க் கொண்டு தான் நடத்தப்பட்டிருக்கிறது. இன்னும் இது முடிவடையவில்லை. சீனாவின் சில தந்திரங்களுக்கு நம் தமிழர்கள் துணை செல்வது போல் தான் நாம் நடந்துக் கொள்கிறோம். இந்தியாவை ஆளும் போலி அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு நாம் இந்தியாவை நம் நாடல்ல, தமிழ்நாடு தான் என் நாடு என்று குரல் எழுப்புவது. சீனாவின் ராஜதந்திரங்கள் இந்தியாவில் பலித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இல்லையேல் சீனா எதற்கு இலங்கைக்கு உதவ வேண்டும்.

தமிழர்களே நன்றாக சிந்திக்க வேண்டிய காலக்கட்டம் இது. நாம் ஒன்றுபட வேண்டிய காலக்கட்டம் இது தான்.
போராட்டம் என்று வரும் பொழுது நாம் ஒரு இனமாகவோ குழுவாகவோ பிரிவது அறிவீனம். எல்லா இன்ங்களையும்,குழுக்களையும் ஒன்று சேர்ப்பதே சிறந்த ராஜதந்திரம். நம் எதிரிகளை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது. இப்பொழுது வட இந்தியர்களை எதிர்க்கும் மனப்போக்கு நம்மிடையே நிலவுகிறது. இது நமக்கு நாமே படுகுழித் தோண்டுக் கொள்வதற்கு சமம்.
ஒரு கேள்வி “2009 இனப் படுகொலை நிகழும் பொழுது இந்தப் போராட்டம் ஏன் வெடிக்கவில்லை.” நமக்கே 4 வருடம் தேவைப்படுகிறது. அப்படியெனில் வடக்கில் இருப்பவர்களுக்கு நிச்சயம் நாம் கால அவகாசம் தர வேண்டும். பொறுத்திருந்து நம் இலக்கை அடைவதே சிறந்த காரியம். அதை விடுத்து இன்று ஊடகம் இருக்கிறது எது வேண்டுமானாலும் எழுதலாம் பேசலாம் என்று நினைத்தால், வெகு விரைவில் நாம் சீனர்களின் பிடியில் இருந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
நம் சங்க கால தமிழனின் போர்தந்திரம் இதுவல்லவே தோழர்களே… எதிரிகளை நண்பனாக்கி தங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வது தான் ராஜதந்திரம். அந்த ராஜதந்திரம் இங்கு முகநூலில் கூக்குரலிடும் ஒரு தமிழனுக்காவது தெரிந்திருந்தால் பேசவே மாட்டான். செயலில் இறங்கியிருப்பான்.
1917 பஞ்சாப்பில் நிகழ்ந்த ஜாலின்வாலாபாக் படுகொலையை நினைவில் கொள்ளுங்கள். உத்தம் சிங்கின் தந்திரமும் முயற்சியும் மறந்துவிட்டதா அல்லது கேள்விப்படவே இல்லையா…? தமிழர்களே அது தானே ராஜதந்திரம்.
வீண் வாசகங்களை விடுத்து… இந்திய அரசாங்கமல்ல… இந்த உலகமே நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும் எதெனும் ஒரு போராட்டமோ ஒரு செயலோ உங்களிடம் இருந்தால் பகிருங்கள்…அதை விடுத்து இந்தியனல்ல… தமிழன் … என்று கூக்குரல் போட்டு
உலக அரங்கில் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று குரல் எழுப்பிய நம் தமிழ் சமூகத்தை அவமானப்படுத்தாதீர்கள்.
இந்த உலகையே ஒரே செயலில் திரும்பிப் பார்க்கும் ஒரு ராஜதந்திரம் உண்மையில் தமிழனிடத்தில் இருக்கிறது.பொறுத்திருங்கள்.

நட்புடன் 
தமிழ்ராஜா