12.21.2012

கண்ணாடியின் கேள்வி
ஏன் இப்படி நாயைப் போல் அலைகிறாய் ?
உனக்கென்ன குறை வைத்தேன் நான் ?
இப்படி சோம்பி கிடக்க வா நீ பிறந்தாய், உனக்குள் இருந்த அறிவு எங்கே?
உன்னை மனிதனாக்கிய  அந்த சிந்தனை எங்கே …?
எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இப்படி இருப்பது உனக்கு
உறுத்தவில்லையா? உன்னை எந்த ஒரு கலங்கமுமின்றி வளர்க்க எத்தனை
முயற்சி செய்திருப்பேன். இருந்தும் நீ இப்படி இருக்கலாமா?

அவளிடம் அப்படி எண்னவிருக்கிறதென்று எனக்கு தெரியவில்லை. உனக்காக
அவள் இதுவரை ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. நீயோ இரும்புப்
பிடியாய் அவளை விடாமல் நினைத்தபடி இருக்கிறாய்  மடையா! காதலென்று
நினைத்துக் கொண்டிருக்கிறாயோ முட்டாள் !
எத்தனை புத்தகங்களை உனக்காக உன் அறிவின் வளர்ச்சிக்காக புரட்டியிருப்பேன்.
அத்தனையையும் வீணாக்கி விட்டாயே! உன் அறியாமையை விளக்க எத்தனைப்பேரை நாடிச் சென்றிருப்பேன், உன்னை பக்குவமடைய செய்வதற்காக அவர்களிடம் உனக்காக  எத்தனை கேள்விகள் கேட்டிருப்பேன்.
எல்லாவற்றையும் மறந்து விட்டு இன்று எவளோ ஒருத்தி பின்னே வாலாட்டிக்
கொண்டு நாயைப் போல் செல்கிறாயே இது  உனக்கே  நியாயமாக இருக்கிறதா சொல்? பைத்தியக்காரா சொல்…..?
“ டேய்  வசந்த் அங்க என்னடா சத்தம்?”
”ஒண்ணுமில்லைம்மா! ரேடியோ கேட்கலாம்னு போட்டேன் சரியா வேலை செய்யலை“
அம்மா பக்கத்து அறையில் இருந்து ”தூங்கலையா? மணி பன்னெண்டு ஆகுது” என்று குரல் கொடுத்துவிட்டு மீண்டும் அமைதியானாள்
” சே! பொய் உன்னால தான் ” என்றவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான.
லேசான இருட்டில் சின்ன, கைக்கு அடக்கமான ஒரு கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்தபடி தன்னையே திட்டிக்கொண்டிருந்த்தான்  வசந்த்.
அந்தக் கண்ணாடியில் தெரிந்த பிம்பம் பேசியது மெலிதான குரலில்
”அதெப்படி, அவ பின்னாடி போன ,அவ என்ன அவ்வளவு அழகா?”
அந்த ஒரு வெள்ளிக்கிழமை காலையில் நீ அவளைத் தவிர வேறு பெண்களையே பார்க்கவில்லையா?ஏன் அவர்கள் மேல் செல்லாத  உன் பார்வை அவள் மேல் மட்டும் சென்றது, எனக்கு நீ நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். இல்லையேல் உன்னை  இன்று விடுவதாக இல்லை.
மெலிதான தேகம் , கழுத்து வரை தான் கூந்தலின் அளவு, பார்வையில்
தெளிவில்லையென்றதனால் கண்ணாடி அணிந்திருந்த, அவள் மேல் உன் பார்வை செல்ல காரணம் என்ன?
திடீரென வசந்த் கண்ணாடியை திருப்பி தலையணை மேல் வைத்தான்.
”அவளைப் பற்றி மேலும் இனி ஒரு வார்த்தை சொன்னால் எனக்கு 
சரியான கோபம் வரும்.பேசாமல் வாயை மூடிக் கொண்டு தூங்கு” என்று கண்ணாடியைப் பார்த்தபடி திட்டிக் கொண்டிருந்தான்.
அவளைப் பற்றி இப்படி நினைக்காதே ,அவள் ஆடைகளோ !அலங்காரங்களோ! என்னை மயக்கவில்லை. நான் அவளிடம் மயங்கவுமில்லை. அவளோடு கலந்துவிட்டேன்.அவள் அன்பால் என்னை அரவணைத்து ஆட்கொண்டு விட்டாள்.
ஆம், அவளை முதன் முதலில் ஒரு துக்க வீட்டில் தான் பார்த்தேன். ஆனால் எனக்கு அது துக்க வீடாய் தெரியவில்லை.ஒரு தேவதை  வாசம் செய்யும் வீடாய் தான் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவள் எப்படி  கவனித்தாள் தெரியுமா?  அன்றைக்கு எனக்கு சரியான வயிற்று வலி வேறு.அது தெரிந்து தான் அவள் என்னை வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்று  எலுமிச்ச பழச்சாறுடன் உப்பு கலந்து கொடுத்தாள்.
என்ன சுவை! சர்க்கரை கலக்கவில்லையென்றாலும் தேன் போல இனித்தது அந்த பழச்சாறு.திடீரென என் நெற்றியில் கை வைத்தவள்
 ”காய்ச்சல் லாம் எதுவும் இல்லை“
என்று சொல்லி விட்டு சிரித்தபடி சென்று விட்டாள்.
அவள் கை வைத்துவிட்டு சென்றபின் தான் காய்ச்சலே வந்தது.எனக்குள் லேசான குளுமையூட்டபட்ட ரோஜாவின் இதழ்கள்,  நெற்றியில் வருடுவது  போல் இருந்தது.
அன்றைய பொழுது சாயக் கூடாது, என்று வேண்டினேன். இல்லை என் ஆசை
நிறைவேறவில்லை.ஆனால் என் நினைவுகளில்  சுகமேறியது அவளின் அந்த வார்த்தைகளால்
”இன்னிக்கே கலம்பப் போறீங்களா?” என்றாள்
எனக்குள் சொல்லமுடியாத மகிழ்ச்சி .இறைவன் என் வாழ்விலும் இப்படி ஒரு அற்புதமான நிகழ்வினை வைத்திருக்கிறானே  என்று பூரிப்பு. இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள்சொன்னேன்.
அவளிடமோ ” போகிறேன்” என்று சொல்லிவிட்டேன்.
 நிமிடத்தில் அவளின் முகம் மாறிய விதம் எனக்குள் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது.
சே!மலர்ந்த முகத்துடன் வந்தவளை இப்படி வாட வைத்துவிட்டேனே…
ஏன் அப்படி சொன்னேன் எனக்கே தெரியவில்லை.அதன் பிறகு அவள் என்னிடம் ஒன்றும் பேசவில்லை. ஆனால் அவள் எண்ணங்கள் எனக்குள் ஆயிரம் முறை பேசியது
’ஒரு பெண்ணின் மனதை இப்படி வதைக்கலாமா?’ என்று…
” முதல் சந்திப்பிலேயே அவளுக்கு என் மேலும் எனக்கு அவள் மேலும்
 இத்தனை ஈர்ப்பு வருமா ? என்று  நீ அடிக்கடி  கேட்டு  என்னை  தொந்தரவு செய்தாயேஆனால் நிஜம் அது தான்.
இருப்பினும் என்னை பற்றி அவளும் , அவளைப் பற்றி நானும் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தோம்  என்று அடுத்த சந்திப்பில் தான் தெரிந்தது.
அவளின் குடும்பத்தைப் பற்றி முழுவதும் சொன்னாள். அவள் குடும்பத்திற்காக அவள் எவ்வளவு  உழைக்கிறாலென்று  உனக்குத்  தெரியுமா?  
உனக்கு எப்படித் தெரியும் ?
உனக்கு குறை சொல்லத் தான் தெரியும். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, இவளை வேலைகென்றே பெற்றெடுத்த, உடல் நிலை சரியில்லாத தாய் , குடிகாரத் தகப்பன். இவர்களின் பிடியில் அவளின் படிப்பு பாதியில் நின்றது.ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தது, எல்லாவற்றையும் சொன்னாள் சிறிதும் கண்ணீர் சிந்தாமல் என்னிடம் சொன்னாள்.
அவளுக்குப் புத்தகம் வாங்கித் தந்து படிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்.
‘அது தப்பா சொல்?’என்று வசந்த் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தபடி கேட்டான்
“ஆம், தவறு தான்.நீ நினைத்ததோடு விட்டிருந்தால் பரவாயில்லையே, அவள் வீட்டிற்கு அடிக்கடி சென்றாய். புத்தகமும் வாங்கிக் கொடுத்து  அவள் வீட்டில் மேலும் பிரச்சினையை செய்துவிட்டு ,
அவள் ” இனி என்னோடு பேசாதீர்கள்”  என்று சொல்லும் அளவுக்கு செய்துவிட்டு இன்று அழுது புலம்புவதால் நான் என்ன செய்வது?
வசந்த் மீண்டும் கோபமாக கண்ணாடியைப் பார்த்தான்.
“நீ என்ன சொன்னாலும் சரி, அவள் தான் என் காதலி! , அவள் தான் என் மனைவி!“
கண்ணாடியில் இருந்த பிம்பம் இவனைப் பார்த்து சிரிப்பதைப் போன்று  இவனுக்குத் தோன்றியது
”டேய் நீ அவளைப் பார்த்து ரெண்டு வருசம் ஆகுது.இன்னும் அவ உனக்கு  ஒரு போன் கூட பண்ணல,நீயும் அவ பேச வேண்டாம்ணு சொல்லிட்டானு அவ கூட பேசறதில்லை. ஆனா வீணாக் கவலைபட்டு இப்படி என்  திறமையெல்லாம் வீணாக்கிட்டு  இருக்க! என்னை வேற எதிரியா நினைக்கிற, ஒழுங்கா நான் சொல்றதை கேளு! காதலாவது கத்திரிககையாவது!
வசந்த் கண்ணாடியைப் பார்ப்பதை நிறுத்தினான். தலையணையின் அருகில் அதை வைத்து விட்டு குப்புறபடுத்து உறங்க முயற்சி  செய்தான்.
இரண்டு வருடமாக இதே முயற்சி தான் அவனும் செய்கிறான்.ஆனால் அவனால் உறங்க தான்முடியவில்லை. அவளின் முகம் அவன் கண் முன்னே வந்து நிற்கிறது.
எந்த தொலைத் தொடர்புமின்றி என் மனதை அவள் இன்றும் ஆட் கொண்டு இருக்கிறாளே எப்படி?  இது தான் காதலோ?
நாம் உண்மையிலேயே அவளை காதலிக்கிறோமோ?

மனதுக்குள் ஒரு இனம் புரியாத ஒரு சுகம் பாய்வதை இரண்டு வருடமாக உணர்வதைப் போலே இன்றும் உணர்ந்தான்.

இது ஒரு மீள் பதிவு. என்னுடைய வோர்ட்பிரஸ் வலைத்தளத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்டது.
 

நட்புடன் 

தமிழ்ராஜா

                                                                                                                                             

5 comments:

 1. எத்தனை ஆண்டுகளானாலும் காதல் எப்போதும் புதிதுதான்.நல்ல நரேஷன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.காதல் மட்டுமல்ல காதல் எல்லாவற்றையும் புதிதாக்கிவிடுகிறது. என்னுடைய இந்த கதையைப் போல...

   Delete
 2. சொல்லாத காதலுக்கு ஆயுள் அதிகம் . அழகாக சொன்னீங்க.

  ReplyDelete
 3. முதலில் கவிதை என நினைத்தேன்.. அப்புறம் அது உரைநடையாகியது...
  அழகான வரிகள்!! ரசித்து படித்தேன் ராஜா!!!

  ReplyDelete
 4. ஆஹா! மிக மிக அற்புதமான பதிவு, இன்று இந்த பதிவு வலைச்சரத்தில் பகிரப்பட்டுள்ளது. அங்கு பார்த்துவிட்டுதான் வந்தேன். சூப்பர்.

  நிறைய எழுதி இருக்கீங்க இதுநாள்வரை கவனிக்காமல் இருந்திருக்கிறேன். இதோ இப்போது முதல் உங்களை பின்தொடர்ந்து வந்து முடிந்தவரை படிக்கிறேன்.

  உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது பக்கமும் வந்து போகவும்.
  http://semmalai.blogspot.com/

  ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts