திரைவிமர்சனம்: வாகை சூட வா...
வாகை
சூட வா... பெயரிலேயே தமிழின்
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் புறத்திணையை நினைவுப்படுத்துகிறார்
இயக்குனர் சற்குணம். அந்த பெயருக்காகவே படத்தைப் பார்க்க வேண்டுமென திங்க கிழமை
காலையிலேயே அருகிலிருக்கும் திரையரங்கிற்குள் சென்றேன். எதிர்பார்த்த கூட்டம்
இல்லை தான். எப்பொழுதும் நல்ல படங்களுக்கு கூட்டம் வர சிறிது காலம் பிடிக்கும்
தான். எதிர்பார்ப்புடனே டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு திரையரங்கிற்குள் சென்று
அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. எல்லா
படங்களுக்கும் வரும் சிலுமிச ஜோடிகள் இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை.
திரைப்படம் தொடங்கியது, திரையில்
”வாகை சூட வா” என்ற பெயரைப் பார்த்ததில் இருந்து ஆரம்பித்தது எனக்கான திரைத் தேடல்.
1966ல் புதுக்கோட்டை என்று திரையில் எழுத்துக்கள் மறைந்ததும், (எம்.ஜி.ஆரை) வாத்தியாரை காண்பிப்பது
அருமை,அதுவும் வாத்தியார் நம்பியாரிடம் சவுக்கடி வாங்குவது பொறுக்க முடியாமல்
ஒருவன் துப்பாக்கியால் திரையைச் சுடும் காட்சி, அந்த கால கட்டத்தைப்
பிரதிபலிக்கிறது. இருப்பினும் 1986ல் என் பால்ய வயதில்,அந்தப் படத்தை திரையரங்கத்தில்
பார்க்கும் பொழுதும் வாத்தியார் நம்பியாரிடம் அடி வாங்கும் பொழுதும் அதே எதிர்ப்பைத்
தான் பார்த்தேன். 1966ஐ நம் கண் முன் நிறுத்த இயக்குனர் மிகவும் முயன்றிருக்கிறார்
என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்க்கு சொல்கிறது.
பத்திரப்பதிவாளரான பாக்யராஜ்,
பியூசியும், ஆசிரியர் பயிற்சியும் முடித்த தன் மகனை (விமலை) அரசாங்க வேலையில்
சேர்க்க நினைக்கிறார். குக்கிராமம் ஒன்றில் ஆறு மாதம் ஆசிரியர் பணி செய்தால் சான்றிதழ் ஒன்று கிடைக்கும்.அதை வைத்து அரசு
வேலை பெறலாம் என்று பாக்யராஜ் விமலிடம் சொல்கிறார். தந்தை சொல்லை ஏற்று ஆசிரியர்
பணி செய்ய விமல் கண்டெடுத்தான் காட்டிற்கு செல்கிறார். செங்கல் சூளையை மட்டுமே
நம்பி வாழும் பூமி அது. குழந்தைகளையும் செங்கல் சூளையிலேயே ராவும் பகலும் வாட்டி
எடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், ”உங்கள் குழந்தைகளை என்னிடம்
அனுப்புங்கள் அவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறேன் ”என்று அவர்களிடம் அறிமுகமாகிறார்
விமல்.
எந்த ஒரு புது முயற்சியும் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப் படாது
என்பதை இந்த படமும் சொல்லியிருக்கிறது. மக்கள் விமலின் முயற்சியை கிண்டல்
செய்கின்றனர். இந்த கிண்டல் ஒரு பக்கம் இருக்க இவர்களையெல்லாம் காலம்காலமாக
அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கும் ஆண்டை ( பொன்வண்ணன்) ஒரு பக்கம். இதையெல்லாம்
தாண்டி விமல் குழந்தைகளுக்கு படிப்புச் சொல்லித் தருகிறாரா?அவருக்கு அரசாங்க
வேலைக் கிடைத்ததா என்பதே கதை.
இந்தப் படத்தைப் பற்றி நிறைய
விமர்சங்களைப் பார்த்தேன். எல்லாமே இந்தப் படத்தைக் கொண்டாடுகிறது. இயக்குனரைப்
புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் விமர்சனம் அமைந்திருக்கிறது.
உண்மையில் இதை ”ஒரு சிறந்த முயற்சி” என்று சொல்லலாமே
தவிர,அந்த முயற்சியில் ஒரு இயக்குனராகத் தான் சொல்ல வந்த செய்தியை சரியாக
சொல்லியிருக்கிறாரா என்றால், இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
இந்தப் படத்தில் அவர் சொல்ல வந்த
கதை. கல்வியின் மூலம் மக்கள் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வு. இந்த கருவுக்கு
இயக்குனர் 1966ல் ஒரு குக்கிராமத்தில் கொத்தடிமைகளாக செங்கல் சூளையில் வாழும்
மக்களின் அறியாமையையும்,அவர்களுக்கு கல்வியைக் கொடுத்து அதன் மூலம் அரசாங்க
உத்தியோகத்தில் சேர நினைக்கும் இளைஞனின் முயற்சியையும் எடுத்துக் கொண்டுள்ளார்...
ஆனால் படம் நெடுக விமலை ”விவரம்
தெரியாதவர்”,என்றே காட்ட இயக்குனர் முயற்சித்திருக்கிறார். இனியாவிற்கும்
விமலுக்குமான காட்சிகளின் மூலமும் விமலை அப்படியே பிரதிபலிக்கிறார். விவரம்
தெரியாதவர் எப்படி குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தர இயலும், வெறும் கணக்கு
மட்டும் கதைக்குத் தேவை என்பதனால், மற்ற விசயங்களை கோட்டை விட்டு விட்டார்.
கணக்கைத் தாண்டி கொஞ்சம் இயக்குனர் காலடி எடுத்து வைத்திருந்தால் இன்னும் நன்றாய்
இருந்திருக்கும். ஹீரோயிசம் படத்தில் இல்லாதது மனதை கொஞ்சம்
திருப்திப்படுத்துகிறது. இருப்பினும் படம் முழுக்க விமல் தான் கண்ணுக்குத்
தெரிகிறார். ஒரு வேளை விமல் தனியே
அமர்ந்து, தன் இளமை வயது பருவங்களை நினைத்துப் பார்ப்பது போல் அமைந்திருந்தால்,
படம் முழுக்க விமல் வருவது திரைக்கதைக்கு நன்றாக இருந்திருக்கும். நிறைய ரசிக்க்க்
கூடிய அம்சங்கள் படத்தில் இருந்தாலும், கதையை அழுத்தமாக சொல்லும் காட்சியமைப்புகள்
கதையில் இல்லை என்பது தான் என் கருத்து.
இடைவெளியில் ஒரு அழுத்தமான
செய்தியை சொன்ன பிறகும் கூட, ”விமல்
விவரம் தெரியாதவர்” என்பதை
ஊர் மக்கள் எல்லோர் வாயிலும் சொல்ல வைக்க முயற்சிக்கும் இயக்குனரின்
காட்சியமைப்பு, திரைக்கதையை தொய்வுறச் செய்வதை மறுக்க முடியாது. காட்சியமைப்பில்
தொய்வில்லையென்றாலும், இந்த கதைக்கு அது
தேவையா ? என்று எண்ண வைக்கும் இடங்கள் நிறைய இருக்கிறது படத்தில்...
விமலுக்கும் இனியாவிற்குமான காதல்
காட்சிகள். கிராமத்து சிறுவர்கள் விமலிடம் செய்யும் குறும்பு காட்சிகள். என்று
கலகலப்புக்கு படத்தில் குறைவில்லை. காபிக் கொட்டை அரைக்கும் எந்திரம்,கோகுல்
சாண்டில் பவுடர்,சைக்கிளில் விளக்கேற்றி ஓட்டுவது,1966ன் ஆனந்த விகடன்,செங்கல்
சூளை, பெண் தபால்காரிகை என்று நிறைய பிரமிக்கும் விசயங்கள்.
செங்கலைத் தூக்கிப் போட்டு இன்னொரு
செங்கல்லால் அதை அடித்து அதன் தரத்தை உணர்த்தும் பொன்வண்ணன் அறிமுகம் அருமை. அந்த
ஊர் முதியவர்,வைத்தியர்,கணக்குச் சொல்லியே பேரெடுக்கும் டீக்கடைக்காரர். இப்படி
கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் கச்சிதம்
இயக்குனரின்
நல்ல முயற்சியைப் பாராட்டலாம்.இருப்பினும் படம் முடிந்து நான் வெளியில் வரும்
பொழுது விமலின் பணத்தாசையில்லாத, தன்னலமில்லாத குணம் மட்டுமே என் மனதை கனக்க செய்ததே
தவிர, கதை 1966ல் நடந்த அந்த உணர்வோ,குழந்தைகள் மீண்டும் கல்விக் கற்கப் போகிறார்கள்,
என்ற மகிழ்ச்சியோ எனக்குப் படம் தரவில்லை.
ஒரு வேளை பொருள்கள் மூலம்
வருடத்தைக் காட்ட நினைத்த இயக்குனர், விமலின் ரேடியோவில் ஒரே ஒரு செய்தி மூலமோ,
அல்லது கணக்கு அல்லாமல் ஏதேனும் அந்த வருட நிகழ்வை மாணவர்களுக்கு விமல் மூலம்
சொல்லியிருந்தாலோ ஏற்பட்டிருக்கலாம். சிறந்த ஒளிப்பதிவு, கலை,வசனம்,பாடல்கள்,சிறந்த
நடிப்பு, என்று நிறைய ரசிக்க வைக்கிறது. திரைக்கதையும் நன்றாக இருந்திருக்கும் இன்னும் சில காட்சிகளில் செய்திகளை அழுத்தமாக
சொல்லியிருந்திருந்தால்....
nice post.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
ReplyDelete