6.13.2012

வழக்கு எண்18/9 ஜோதி சமூகத்தின் அகம் புறத்தின் பிரதிபலிப்பு

 

     வழக்கு எண் 18/9 தமிழ் திரையுலகில் யாராலும் மறக்க முடியாத திரைப்படமாக இடம் பெற்றுவிட்டது. ஆனந்த விகடனில் இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகையில் “ விமர்சனங்களைத் தாண்டி அனைவரும் இதைப் பார்த்தே ஆக வேண்டியப் படம் என்ற அளவில் எழுதியிருந்தார்கள்.

     ஏனெனில் இந்த படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் எதார்த்தத்தை மிகவும் அருகில் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. சமூக அவலங்களை எந்த சாயமும் பூசாமல் தோலுரித்து -- பார்ப்பவர்களின் உள் உலகங்களை மறுபரிசீலனைக்கு ஆட்ப்படுத்துகிறது. நாம் காணும் உலகம் இப்படியும் இருக்குமோ என்று பலர் இதயங்களை அதிர வைக்கிறது.
     பணம் பணம் என்று பிள்ளைகளை பற்றி அக்கறையின்றி ஓடிக் கொண்டிருக்கும் பெற்றவர்களின் மனநிலையில் சின்ன சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
     இந்தப் படத்தைப் பார்த்திருந்தால் உண்மையில் இந்த மாற்றங்கள் நம் மனதில் அணுவளாவது நிகழ்ந்திருக்கும்.
     ஆனால் நான் இங்கே பேசவிருப்பது அதுவல்ல...
     படத்தின் இறுதி வரை ஜோதிக்கு வசனங்கள் அவ்வளவாக தராமல், அவள் எழுதிய கடிதம் மூலம் அவளை இறுதியில் பேச வைத்திருக்கிறார் இயக்குனர். கற்பனை என்றாலும் அழகியல்.
     அமைதியாக எந்தவித அலங்காரமும் இல்லாமல், தன்னைத் தொடர்பவனை வெறுத்துத் திட்டும் பெண்ணாக வரும் ஜோதி. இறுதியில் அவன் காதலை, வெகுளித் தனத்தை உணர்ந்தவுடன் அவள் செய்யும் செயல் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் ஒரு புதிய திறவுகோள்.
     காதல், கோபம் இரண்டையும் சரியாக வெளிப்படுத்தும் திரானி இன்றைய சமூகத்தில் யாருக்கும் இல்லாமல் போய்விட்டது. தன்னைக் காதலிப்பவன் குற்றமற்றவன், அவனை ஏமாற்றி ஒரு கூட்டம் வஞ்சிக்கிறது என்று தெரிந்ததும் கொதித்தெழும் துணிவு ஒரு பெண்ணிற்கு இந்தப் படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது.
     உண்மையில் சமூகத்தில் இன்று ஆணிற்க்கே இது சாத்தியமில்லாமல் இருக்கிறது. காதல் தான் ஒரு சமூகத்தின் நிறைக் குறைகளை அளக்கும் சரியான அளவுகோல். ஒரு சமூகத்தின் காதல் எப்படி இருக்கிறது என்பதை வைத்து அதன் நிறை குறைகளைச் சொல்லிவிடலாம்.
     இன்று காதல் எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தில் இரு கோணங்களில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதில் இரண்டாவதாக காட்டியிருக்கும் விதம் தான் இன்று நிறைய இளையத் தலைமுரையினரை ஈர்க்கிறது.
     ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கே சைக்கிளில் தண்ணியை வைத்துக் கொண்டு மிதித்தப்படி நடு ரோட்டில் அவள் வரும் வரை காத்திருக்கிறான் வேலு. ஜோதி அவனைக் கண்டுக் கொள்ளவே இல்லை. இருப்பினும் அதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. இன்னொருப் புறம் மிக எளிமையாக படிப்பு என்று சொல்லியபடி தினேஷ், ஆர்த்தியின் வீட்டிற்குள் சென்று அவள் அங்கங்களை மொபைல் போனில் பதிவு செய்கிறான். ஆர்த்தி தன்னை விரும்புகிறாள் என்றுத் தெரிந்தும் அவள் ரகசியங்களை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறான் தினேஷ்.
     இந்த இரண்டில், ஜோதி வேலுவை முதலில் வெறுக்கிறாள். பிறகு அவனின் குணம் அறிந்து அவனுக்காக துணிந்து யாருமே செய்ய துணியாத செயலைச் செய்கிறாள். மற்றொன்றில் ஆர்த்தி தினேஷைப் பார்த்ததும் அதுவும் அவன் வைத்திருக்கும் மொபைல் போனைப் பார்த்ததும் மயங்குகிறாள். படித்த பெண்களின் மனநிலை, படிக்காத பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது இந்த கதையில் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது.
     இருப்பினும் படிக்காத பெண்களும் இப்படி மொபைல், பைக், கார் என்று மயங்குவது இயல்பு தான். ஆனால் படித்த பெண்களிடம் அந்தத் தாக்கம் அதிகமாக இருப்பது, அவர்களின் கல்வித் தரத்தின் மோசமான நிலமையைச் சொல்கிறது. அவர்கள் கற்கும் கல்வி மனிதர்களை எடைப் போடுவதற்கு திரானியற்றது எனபது வெளிப்படையாகத் தெரிகிறது. அது மட்டுமின்றி சுயஒழுக்கத்தையும் தருவதில்லை என்பதையும் வெளிப்படையாக நாம் ஒற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
     ஆர்த்தி பள்ளியில் தோழிகளுடன் இருக்கும் பொழுது, நம்ம (அவங்க) அம்மா காலத்துல இந்த செல் இருந்திருந்தா, இதை விட அட்டகாசம் பண்ணியிருப்பாங்க என்று சொல்வது எத்தனை நிசர்சனமான உண்மை.

     இந்த வரிகள் உண்மையில் நாம் கவனமாக சிந்திக்கக் கூடியவை. இந்த செல்போன் யார் கையில் கிடைத்தாலும் இப்படித் தான் நடந்துக் கொள்வார்களா...? சிந்திக்க வேண்டிய விஷயம்.
     அப்படியென்றால் இளையத் தலைமுறையின் நிலை தான் என்ன...? தினேஷின் நண்பர்கள் போல் இன்னும் பல மாணவர்கள் உருவாவார்களோ....?
     இந்தக் கேள்வியை இந்த படம் எழுப்பியிருக்கிறது. முன் தலைமுறையிலும் ஆண் பெண்ணிற்கான உறவுமுறைகள் ஒழுக்கமாக இருந்திருக்கின்றன என்பதை நாம் அறுதியிட்டு கூறுவதற்கில்லை. காராணம் அந்தக் காலக்கட்டத்தின் முந்தைய தலைமுறைகள் அடுத்த தலைமுறையை குறைக் கூறிக் கொண்டு தான் வந்திருக்கின்றனர்.
     எனவே இது இயற்கை என்று எடுத்துக் கொள்ளலாமா...?
     முடியாது.
     இருப்பினும் எந்த ஒரு செயலும் வலிக்காமல் நிகழ வேண்டும் என்று எந்த சமூகம் நினைக்கிறதோ, அது தன் சுயத்தை இழப்பது உறுதி.
     கால் கடுக்க நடந்து, கண் வலிக்க பார்த்து, காலமெல்லாம் உறுதியாக காத்திருந்து காதலை அனுபவித்தவர்கள். இன்று காசு கொடுத்து வாங்கும் கருவிகள்( ஐ பாட், மொபைல்,கார், பைக்.....) மூலம் எதிர்பாலினத்தை ஈர்த்து விட முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சியின் பலன் எளிதில் நிகழ்ந்துவிடுவதால், அதன் மூலம் வரும் உறவை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
     உயிரைக் கொடுத்து காதலிக்கும் வேலுவையும், சும்மா தன் பெருமைக்காக பழகும் தினேஷையும் ஒப்பிட்டு பாருங்கள். இதில் யாருக்கு எளிதில் காதல் ( அதாவது பெண் ஏற்கிறாள்) கை கூடுகிறது.
     தினேஷ் சில நாட்களிலேயே ஆர்த்தியை தனியறைக்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு அவள் மனதை மாற்றுகிறான். ஆனால் பல நாட்களாக வேலு ஜோதியிடம் ஒரு வார்த்தைக் கூட பேச முடியாமல் தவிக்கிறான். இந்த இரண்டில் சினிமாவில் நாம் பார்க்கும் பொழுது மட்டும் தான் தினேஷ் நம் கண்ணுக்கு ஏமாற்றுக்காரனாகவும், அயோக்கியனாகவும், வேலு நல்லவனாகவும், உண்மையானவனாகவும் தெரிகிறான்.
     உண்மையில் எதார்த்தம் அப்படியில்லை. வாழ்க்கையில் வேலு ஒரு முட்டாள். அவன் ஸ்மார்ட் இல்லை. ஒரு பெண்ணை மடக்க அவனுக்குத் தெரியவில்லை என்பது தான் அவனுடைய நிலையாக இன்றைய இளைய சமூகம் பார்க்கிறது. ஆனால் தினேஷ் அப்படியில்லை அவன் மிகவும் திறமைசாலி. ஸ்மார்ட். அவன் தான் ஆண் மகன். இது தான் அவனுடைய நிலை இன்றைய இளைய சமூகத்தில். நம்ப நம்மால் முடியாது. இருப்பினும் இது தான் உண்மை.
     இன்றைய இளைஞன் இப்படித் தான் இருக்க விரும்புகிறான். ஏனெனில் இப்படிப்பட்ட இளைஞனைத் தான் பெண்கள் விரும்புவதாக அவனே சொல்லிக் கொள்கிறான். உண்மையில் இன்று இணையத்திலும் பத்திரிக்கையிலும் வெளி வரும் கவிதைகளைப் பார்ர்கும் பொழுது, சிலப் பெண்களும், ஆண்களைப் போலவே ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார்கள் எனபது நிதர்சனமாகத் தெரிகிறது.
     காதலி ஏமாற்றிவிட்டாள், வேறு ஒரு நபரிடம் தொடர்பு கொண்டிருக்கிறாள் . காதலன் தனக்குத் தெரியாமல் தன்னைப் படம் எடுத்து மிரட்டுகிறான். இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி இப்பொழுது நாளிதழ்களில் வெளிவருவதைப் பார்க்க முடிகிறது.
     அப்படியெனில் நம் சமூகத்தில் ஆண் பெண்ணின் உறவு முறைகளை இந்த கருவுகள் வந்து மாற்றிவிட்டதா...?
     மிருகம் போல் தேவைக்கு ஏற்றாற்ப் போல் இணையை மாற்றிக் கொள்ளும் பாங்கு இன்னும் சில ஆண்டுகளில் நம் மக்களிடம் வந்துவிடும் என்று தோன்றுகிறதா...?
     அதற்கெல்லாம் தீர்வு தான் ஜோதியின் காதலும் வீரமும்
 . இப்பொழுதெல்லாம் காதலன வேண்டாம், பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் காதலி அழுவதில்லை. அதற்கு மாறாக கொதிக்கிறாள், அவனை அடையப் போராடுகிறாள். ஆம் நிறைய இடங்களில் உண்ணாவிரதம் இருந்த செய்திகளும் நாளிதழ்களில் வந்திருக்கிறது. அதையும் தாண்டி சிலப் பெண்கள் வேறு நபரைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.
     இதே ஒரு ஆண் தன் காதலி தன்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். மனதைத் தேற்றிக் கொள்கிறான். அவளுக்காக அவன் போராடுவதே இல்லை. கோபப்படுவதே இல்லை. இது சமூகத்தின் ஸ்திரத் தன்மையைக் காட்டுகிறது.
     வருங்காலத்தில் தன்னை யார் ஏமாற்றினாலும், அதை எதிர்த்துப் போரிடும் துணிவு இப்படிப்பட்ட ஆண்களுக்கு வருவதில்லை. இப்படிப்பட்ட ஆண்கள் இன்றுப் பெருகுவது நம் சமூகத்தை மிகப் பெரிய மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.
     இந்தப் படத்தில் ஒரு பெண்ணாக ஜோதி காதலால் உண்டாகும் சமூகத்தின் மீதுள்ள கோபத்தை துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறாள். அவளது வீரச் செயலே, வேலுவின் காதலை நிலைக்க  வைத்தது. அது மட்டுமின்றி தன்னுடைய புற அழகைத் தாண்டிய அன்பை, பார்வையை வேலுவிற்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது.
     இந்த துணிவு இன்று பெண்களுக்கு(காதலனுக்காகப் போராடுவது) நல்ல விஷயங்களிலும் சரி, தீய விஷயங்களிலும் சரி (கள்ளக் காதலனுக்காக கணவனைக் கொல்வது) வந்திருக்கிறது. இருப்பினும் ஆண்களுக்கு இந்த துணிவு கொஞ்ச கொஞ்சமாக குறைந்துக் கொண்டிருக்கிறது.
     இல்லையேல் பெண்களின் அங்கங்களை படம் பிடிப்பது, இன்னும் பல கோழை செயல்களை செய்வது நிகழாது. இன்று கணவனே தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதை மொபைலில் படம் எடுப்பது ஆணின் துணிச்சலற்ற போக்கையே காட்டுகிறது.
     பெண்களே உங்களின் துணிச்சல் மட்டுமே சமூகத்தை வளப்படுத்தாது. ஆணின் துணிவும் அதில் சேர வேண்டும். எனவே தயவு செய்து ஆணையும் துணிச்சல் உள்ளவனாக மாற்றுங்கள். ஏனெனில் பெண்ணிற்கு தூண்டுகோள் தேவையில்லை. ஆனால் ஆணிற்கு நிச்சயம் ஒரு தூண்டுகோள் தேவை. அதற்கு ஜோதி ஒரு சரியான எடுத்துக்காட்டு.
      




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts