1.13.2012

தமிழ்த்திரைப்படம் தேடலும், திருடலும்

     

   புத்தாண்டு தொடங்கிய நன்னாளில் ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சி. சத்யராஜ் அவர்களும்,சுஹாசினி அவர்களும் இணைந்து இன்றைய தமிழ் சினிமா பற்றி ஒரு விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். நிறைய திரைக்கலைஞர்களும், ரசிகர்களும் கலந்து கொண்டு ஒர் ஆரோக்கியமான விவாதத்தை நம் முன் வைத்தார்கள்.
     தமிழின் அசல் சினிமா, பிற திரைப்படங்களின் பாதிப்பினால் வெளிவந்த சினிமா. இந்த இரண்டிற்குமான விவாதம் தான் அங்கு நிகழ்ந்தது. உண்மையில் நல்ல சினிமாவிற்கான தேடல் அந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு பேசிய அத்தனை பேரிடமும் இருந்தது.
     இருப்பினும் அசல்(ORIGINAL) சினிமா  என்ற தரப்பில் பேசியவர்கள் ரசிப்புத் தன்மையை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அறிவு சார்ந்த கூறுகளையே முன் வைத்துப் பேசினார்கள். பொல்லாதவன் (BICYCLE THIEVES), மயக்கமென்ன (BEAUTIFUL MIND), இப்படி இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
     தழுவல்(ADOPTION,INSPIRATIONAL ) சினிமா பற்றி பேசியவர்கள் ரசிப்புத்தன்மையைத் தாண்டி அசல் சினிமாவை எதார்த்தத்தின் உச்சக்கட்டத்திற்கு உயர்த்தி, அதிலிருந்து பெறப்படும் அனுபவங்கள் மூலம் வெளிவரும் சினிமாக்களைப் பற்றி மிக விரிவாக சொன்னார்கள்.
     அசல் சினிமா, தழுவல் சினிமா இவை இரண்டையும் ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த பாகுபாடு என்றுமே நான் கண்டதில்லை. இருப்பினும் இந்த அலை தமிழ்சினிமாவில் ஒரு சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.
     ரசிப்புத் தன்மை என்பது அறிவுச் சார்ந்த விஷயமா, உணர்வு சார்ந்த விஷயமா என்பதற்கான தேடல் தான் இந்த விவாதத்திற்கான ஆரம்பப் புள்ளியைத் தொடங்குகிறது.
     இன்று எல்லோரும் என்ன நினைக்கிறார்கள், இயக்குனர் தன் சொந்த கற்பனையை எடுக்க வேண்டும். வேறோருவன் கற்பனையைத் திருடி எடுக்கக் கூடாது என்பதே நிறையப் பேரின் கருத்தாக இருக்கிறது.
     உண்மையில் கற்பனையை நாம் சொந்தம் கொண்டாட முடியுமா? ஒரு திரைப்படம் வெளியாகிறதென்றால்,அதை அப்படியே பார்த்து எடுத்தவரின் அனுமதியின்றி இன்னொரு படம் எடுத்தால் நாம் அதை திருட்டு என்கிறோம். அதுவும் கற்பனைத் திருட்டு என்கிறோம்.
                உண்மையில் கற்பனையை யாரும் திருட முடியாது. திரைப்படம் என்பதில் கலையைத்தாண்டி வியாபாரம் மேலோங்கி நிற்பதால் தான் ஒவ்வொருவருக்கும் அதைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. இதே ஒரு இலக்கியத்தையோ, ஓவியத்தைப் பற்றியோ இப்படி ஜனரஞ்சகமான விவாதங்கள் நடந்ததில்லை.
     திரைப்படத்தை ஒரு கலையாகப் பார்த்தோமேயானால், அது என்னிடம் வந்த பிறகு அதை சொந்தம் கொண்டாட எனக்கே உரிமை இல்லை. அப்படி இருக்க அதை நானே சொந்தம் கொண்டாட முடியாது. 
      நம் தமிழ் கலாசாரம் குழந்தையைப் பெற்றவர்களை பெற்றவர் என்று சொல்கிறது. எனவே அவர்கள் அந்த குழந்தையை என்னுடையது என்று சொல்வதே தவறானது என்கிறது. பெறுவது தருவதற்காகத் தானே.... வேறு எந்த மொழியிலும் இப்படி ஒரு வார்த்தை இல்லை. நம் தமிழ் மொழிக்கு மட்டுமே அந்த சிறப்பு உண்டு.
     அப்படியிருக்க இந்த உலகத்தில் இருந்து, பெற்ற அறிவையும், உணர்வையும் வைத்து ஒருவன் ஒரு கலையைப் படைக்கிறான் என்றால் அது அவனிடம் இருந்து வெளிப்பட்டவுடன், உலகச் சொத்தாகிவிடுகிறது. அதை சீரழிவதில் இருந்து ஒரு கலைஞனாக அதைப் பாதுகாத்து வளர்ப்பதை தவிர, அதே முறையை இன்னொருவன் பின்பற்றினால் அது திருட்டு என்று சொல்வதைவிட அந்த படைப்பு வளர்வதாகத் தானே அர்த்தம் என்று கொள்ளலாமா...?
     கலையை யாராலும் காப்பியடிக்க முடியாது. அப்படியொருவனால் முடிந்தால் அதுவும் ஒரு கலை தான். திருட்டு இல்லை. இன்று எல்லோருக்கும் என்ன பிரச்சினை என்றால், புகழைப் பற்றியும், பொருளைப் பற்றியும் தான் பிரச்சினை. அதை வைத்தே சினிமாவைப் பார்ப்பதினால் இது திருட்டு, இது சொந்தக் கற்பனை என்று பிரித்துப் பார்க்கின்றனர்.
     திரைப்படம் காசுக்காக தன் மூளையை மட்டுமின்றி,நிறையப் பேர் மூளையைப் பயன்படுத்தி எடுக்கின்ற ஒரு விஷயம். அங்கு காசு தான் பிராதானம். எனவே தான் உரிமை, திருட்டு என்று கூப்பாடுப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.திரைப்படத்தில் நடிகர், நடிகையர் கைத் தட்டல் வாங்கிய காலம் தாண்டி, இயக்குனர் கைத்தட்டல் வாங்கும் காலம் வந்த பிறகு தான் இந்த பிரச்சினை பெரிய அளவில் உருவாகி இருக்கிறது.
     காராணம் நடிகர் நடித்தப் பொழுது, எல்லாவற்றையும் அவரே செய்கிறார் என்று அவரை ஒரு பக்கம் புகழ்வதும், ஒரு பக்கம் இகழ்வதுமாய் இருந்த சினிமா, இன்று அவர்களைத் தாண்டி இயக்குனர்கள் தான் ஒரு நல்ல சினிமாவுக்கான விதையை விதைக்கிறார்கள் என்று அறிந்தவுடன் அவர்களைக் கொண்டாடி வரப் பழகியது. இது தொலைத் தொடர்பு சாதனங்கள் வளர வளர, ஒளிப்பதிவு, கலை என்று ஒவ்வொருவரையும் கவனித்தாலும், இயக்குனருக்கான மோகத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை.
           எனவே ஒரு இயக்குனர் எந்த கலவையும் இல்லாமல் அசலான சினிமா எடுக்க வேண்டுமென்று கூக்குரல் இடுகின்றனர். இருப்பினும் இந்த அலை இன்னும் சிறுது காலத்தில் மாறிப் போகும். ஏனெனில் ஒரு திரைப்படம், ஒரு இயக்குனர் கையினால் இயக்க மட்டும் தான் படுகிறது, படைக்கப்படவில்லை.
ஒரு கதையாசிரியனின் படைப்பு அப்படியில்லை, கதையில் வரும் அத்தனையும் அவராகவே தான் இருப்பார். நடிகனும், வார்த்தைகளும், சம்பவங்களும், அலங்காரங்களும், காட்சிகளும், எல்லாமே அவராகத் தான் இருப்பார். இங்கே அந்தக் கதைக்கான புகழ் மொத்தமும் அவருக்குத் தான் போய் சேரும். ஆனால் திரைப்படத்தில் அப்படியில்லை, இயக்குனரின் உதவி, துணை, இணை என்று அவர்கள் எல்லோருடைய கற்பனையும் அதில் அடங்கும். அதைத் தாண்டி ஒளிப்பதிவாளரின் பார்வையும், இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம்.எனவே நடிகனில் இருந்து ஒரு ரசிகனின்  அறிவு சார்ந்த பார்வை இயக்குனர் அளவுக்கு வளர்ந்தாலும் இயக்குனர்களைக் காட்டிலும் அதிகம் பணம் பெறுவது நடிகர்கள் தான். இருப்பினும் இயக்குனர்களின் இன்றைய நிலை சற்று உயர்ந்திருக்கிறது.
     இந்த நிலை இயக்குனரில் இருந்து ஒரு ரசிகனுக்கு இன்னும் கீழே இறங்குமானால், எல்லோரின் உழைப்பும் கவனிக்கப்படும். இன்றைய தமிழ்சினிமாவின் நிலை மாறும். வெளி நாட்டவர் போல் நிறைய இடங்களுக்கு அலைந்து திரிந்து ஒரு கதையை உருவாக்கும் வசதி வாய்ப்பு இன்றைய சினிமா துறையில் வேலைப் பார்க்கும் இளம் இயக்குனர்க்ளுக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
      ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருப்பவர்களின் நிலையைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. சென்னையில் முக்கியமாக வடபழனியின் தெருக்களில் நாம் பார்க்கலாம்.
     எனவே இவர்களின் தேடல் தமிழ் படங்களைத் தாண்டி, இப்பொழுது தான் உலக சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. ரசிகர்கள் அங்கீகாரம் தந்தால் இன்னும் குடி சீக்கிரத்தில், தமிழ் சினிமாவை உலக நாடுகளின் பர்மா பசார்களில் , உலக இளம் இயக்குனர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தமிழ்ப் படங்களை வாங்கும் நிலையைக் கொண்டு வருவார்கள்.


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

3 comments:

  1. ஆம் நீங்க சொன்னது சரி தான் கற்பனை திறனும் கூட அல்லவா திருட படுகிறது?

    ReplyDelete
  2. அருமையான பதிவு நண்பரே!
    http://vethakannan.blogspot.com/

    ReplyDelete
  3. @suganthiny
    ஆமாம் இது தொடர்வதை தடுப்பது மிக கடுனம்.


    @வேதகண்ணன்

    உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts