1.15.2012

தமிழர் திருநாளைக் கொண்டாட நமக்கென்ன அருகதை இருக்கிறது

 நம் மண்ணின் உயிர் விவசாயம்

அது நம்முடைய தொழில் மட்டுமில்லை உயிர். ஆனால் நம் விவசாயத்தின் நிலையும், அதை உருவாக்கும் இன்றைய நம் மண்ணின் நிலையும் இன்று எப்படி இருக்கிறது...?
நான் சிறு வயதில் இருந்து என் தாத்தாவின் இறப்பு வரை அவரைக் கவனித்து வருகிறேன். அவர் உபயோகித்த பொருளை பழையதாக இருந்தாலும், புதியதாக இருந்தாலும், இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்திருப்பாரே ஒழிய, பணத்திற்காக ஒரு பொழுதும் அவற்றை விற்றதில்லை.
     இது நம் மண்ணோட கலாச்சாரம் என்பது எனக்கு பிறகு தான் தெரிந்தது. தன்னுடன் வாழ்ந்த ஒரு சின்னப் பொருளைக் கூட உயிராக நினைக்கும் மனோபாவம் நம் தமிழகம் முழுவதும் இருந்ததை என்னால் உணர முடிந்தது.
     போகி என்றப் பண்டிகையையே நம் தமிழ் சமூகம் அதற்காகத் தான் உருவாக்கியது எனலாம். வீட்டில் இருக்கும் துணிமணிகள், பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் சரி செய்து உபயோகிப்பார்களே ஒழிய பணத்திற்காக விற்பது இல்லை. மேலும் அந்தப் பொருளை உபயோகிக்க இயலாது என்று தெரிந்ததும் ஒரு உயிருக்கு தரும் மரியாதையைத் தான் அதற்கும் தருவார்கள். இதுவே போகிப் பண்டிகைக்கான ஆழ்ந்தப் பொருள்.

     பின்னர் அந்த கலாசாரம், நம் மக்களிடம் வெகுவாக குறைந்து தன்னிடம் இருக்கும் அனைத்தையும் பணமாக்கும் எண்ணமாக மாறி வருகிறது. இது உண்மையில் வருத்தத்திற்குரிய விஷயம் தான். இன்று போகியன்று புகையைக் கட்டுப்படுத்த நிறைய குடும்பங்கள் பழையதை எரிப்பதை நிறுத்திவிட்டனர். அதற்கு பதில் நம் மண்ணின் அடி வேரான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் எரித்து விடுகிறார்கள்.
     நான் பார்த்த வரை, தாங்கள் உபயோகித்த பொருளையெல்லாம் ஒரு உயிராக மதித்து வாழ்ந்தனர் தமிழர்கள். எனக்குத் தெரிந்தவரையில் தமிழர்கள் மட்டுமின்றி இந்த நிலை ஒட்டுமொத்த இந்திய கலாசாரமாகவே குறிப்பிட்ட காலம் வரை இருந்தது என்று சொல்லலாம்.
     பழைய டிரங்குப் பொட்டி,நாற்காலி, கடிகாரங்கள் என்று பல பொருள்களைச் சொல்லலாம். இப்படி பொருளையே உயிராக மதித்தவர்கள், மனிதர்களுக்கு தந்த மதிப்பை சொல்லவா, வேண்டும். ஆனால் இன்றைய நிலை வேறு. 

     தாங்கள் தங்கி வளர்ந்த வீட்டை மண்ணை உயிராக மதித்த மனிதர்கள்.அந்த மண்ணை பெண்ணாக மதித்தவர்கள். அந்த மண்ணை சதுர அடிகளிலும், சாயக் கற்களிலும் சாகடித்துக் கொண்டிருக்கின்றனர்.
     விதையை விதைக்கும் பொழுது, வீடு கட்டும் பொழுது, என்று எல்லாவற்றிற்கும், பூமி பூஜை என்று ஒரு சம்பிரதாயம் வைத்திருந்தனர். மண்ணின் சம நிலையை நாம் மாற்றுவதால், அதனிடம் மன்னிப்புக் கேட்கும் ஒரு அருமையான பழக்கம். இந்த முறை மண்ணை உயிராக மதிக்கும் மனிதர்களிடம் தான் உருவாக முடியும்.
     ஆனால் இன்றைய நிலை, தமிழர்கள் அதே மண்ணை வைத்து விபசாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா தொலைக்காட்சிகளிலும், சதுர அடிகளில் நம் மண்ணை விபசாரியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
     இந்த நிலைக்கு அரசாங்கம் ஒரு முக்கிய காரணம் என்றால், மக்களின் பேராசையும் ஒரு முக்கிய காரணம். பயிர் வளர்க்க, விவசாயம் செய்ய மட்டுமே மண்ணை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், இன்று வருங்கால முதலீடாக மட்டுமே அதைப் பார்க்கின்றனர். பிற்காலத்தில் நல்ல விலைக்குப் போகும் என்ற அளவில் மட்டுமே பார்க்கின்றனர்.
     விவசாய பூமியையெல்லாம் விற்றுக் கொண்டு வருகின்றனர்.இன்று  இந்த நிலை மாறி பூமியில் இருந்து, பிறக்கும் குழந்தையைக் கூட ஒரு முதலீடாக பார்க்கும் மனோபாவத்தை மக்களிடம் பெருக்கிவிட்டது. ஒரு பொருளை உயிராகப் பார்த்த தமிழன், ஒரு உயிரைப் பொருளாக பார்க்கும் மனோபாவத்திற்கு இன்று மாறிவிட்டான்.
     எல்லா உயிரினங்களையும் பொருளாக மாற்றிக் கொண்டு ஒரு இயந்திரத் தனமான வாழ்க்கைக்குள் தன்னையறியாமலேயே முழ்கிக் கொண்டு வருகிறான் இன்றைய தமிழன்.
     தைப் பொங்கலை ,தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்று சொல்லும் நாம், சில வருடங்களாக இதை தமிழ் வருடப் பிறப்பு என்று வேறு சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம். நம் மண்ணின் பெருமையை உணராத மாக்களாகிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் திருநாளைக் கொண்டாட உண்மையில் அருகதையற்றவர்கள். நம் மண்ணின் கன்னித் தன்மையை விற்றுக் கொண்டிருக்கும் நாம் எந்த உரிமையில் உழவர்த் திருநாளைக் கொண்டாட முடியும்.
     இந்த திருநாளில் ஒரு துளியேனும் உழவரைப் பற்றியும், அவர்களின் இன்றைய நிலையைப் பற்றியும் நினைப்போமானால் ஒரளவேனும் இந்த நாள் பெருமையடையும். நம் தமிழகத்தின் விவசாயம் என்று புத்துயிர் பெறுகிறதோ அன்று வரை இந்த நாளைப் பற்றி நாம் பெருமைக் கொள்ள அருகதை அற்றவர்களாகத் தான் இருப்போம்.


வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. தமிழர்கள் அதே மண்ணை வைத்து விபசாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர். எல்லா தொலைக்காட்சிகளிலும், சதுர அடிகளில் நம் மண்ணை விபசாரியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    சாட்டையடி...
    ஆனாலும் எந்த விவசாயியும் தன் மண்ணை வீடு கட்டத் தர மறுப்பதில்லையே. அதுதானே வருத்தமே. எவ்வளவு பணம் கொடுத்தாலும் என் நிலத்தைக் கூறு போட நான் அனுதிக்க மாட்டேன் என்று எவரும் சொல்வதில்லையே...

    ReplyDelete
  2. சகோ,

    அருமையான பதிவு. இன்றைய உலகின் போக்கை அழகாக படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.

    /* எல்லா உயிரினங்களையும் பொருளாக மாற்றிக் கொண்டு ஒரு இயந்திரத் தனமான வாழ்க்கைக்குள் தன்னையறியாமலேயே முழ்கிக் கொண்டு வருகிறான் இன்றைய தமிழன். */
    உண்மையிலும் உண்மை. ஆனால் தமிழன் மட்டும் தான் இப்படி என்று சொல்ல முடியாது. உலக மக்கள் அனைவருமே அந்த மன நிலையில் தான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  3. @சிராஜ்

    உண்மையிலும் உண்மை. ஆனால் தமிழன் மட்டும் தான் இப்படி என்று சொல்ல முடியாது. உலக மக்கள் அனைவருமே அந்த மன நிலையில் தான் இருக்கிறார்கள்.

    ஆனால் உலக மக்கள் அனைவரும் உழவர் திருநாளைக் கொண்டாடுவதில்லை. அந்த முறையும், பெருமையும் தமிழனிடம் மட்டுமே இருந்தது. இன்று பெயரளவில் மட்டுமே இருக்கிறது.

    ReplyDelete
  4. ”ஆனாலும் எந்த விவசாயியும் தன் மண்ணை வீடு கட்டத் தர மறுப்பதில்லையே. அதுதானே வருத்தமே. எவ்வளவு பணம் கொடுத்தாலும் என் நிலத்தைக் கூறு போட நான் அனுதிக்க மாட்டேன் என்று எவரும் சொல்வதில்லையே...”

    உண்மைதான் ஏனெனில் அவர்களின் போக்கை மாற்றிக் கொண்டிருக்கும் கலாச்சாரத்தைத் தான் நாம் பின்பற்றி வருகிறோம். எத்தனை நாள் தான் அவர்கள் தனி மனிதனாகவே போராடுவார்கள். சிலரின் நிலத்தை அவர்களிடம் இருந்து மிரட்டியும் பிடுங்கும் நிலை இன்று இருந்து வருகிறது தெரியுமா...?

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts