12.02.2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் : கொண்டாட்டம்





       இயக்கம் என்பது சின்ன விஷயமல்ல என்று பலர் சொல்வார்கள். ஆனால் சின்ன சின்ன விஷயங்களில் தான் இயக்கமே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி தரணிதரன். டிஜிட்டல் கேமராவான 5-டியில் குறைந்த பொருட் செலவில் எடுக்கப்பட்டு கதையின் பலத்துடன் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துவரும் ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இயக்குனரின் துணிச்சலான முயற்சி.
   ரசிகர்களை கவர வேண்டுமெனில் அறிமுகமான முகங்கள், அதிகப்பொருட் செலவு, வெற்றிப் பெற இன்னும் சில காரணிகள் இருக்க வேண்டும் என்று சொல்லும் நிகழ்க் காலம் மற்றும் வருங்கால இயக்குனர்களுக்கு சிறந்த ஒரு பதிலை இந்தப் படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் பாலாஜி. இது வெறும் புகழ்ச்சி இல்லை என்பதை படத்தைப் பார்த்தவுடன் நீங்களே சொல்வீர்கள்.
    ஒரு மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அவனுடைய திருமணம் தான். அதுவும் காதல் திருமணம் என்றால் அதற்கு தனியொரு சிறப்பு கூடிவிடுகிறது. அப்படியிருக்க அந்த திருமணம் நிகழ்ந்து முடியும் வரை அவனுக்கு அது நினைவே இல்லை என்பது தான் கதையின் மையக் கரு.
         இதில் அவனுடன் சேர்த்து மூன்று கதாப்பாத்திரங்களை வைத்து நகைச்சுவையுடன் சொன்ன விதம் தமிழ்த்திரைக்கு புதிது. நம் வாழ்வில் நிகழும் சின்ன சின்ன சம்பவங்களை மிகத் துள்ளியமாக இந்த திரைப்படம் நம் கண் முன் காட்டுகிறது.
     திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து நம் கண்ணுக்கு விஜய் சேதுபதியைத் தவிர அறிமுகமான நபர் என்று யாரும் தென்படவில்லை. இங்கு நான் அந்தத் திரைப்படத்தின் கதையை உங்களிடம் சொன்னால் ஒரு ரசிகனாக அந்தப் படத்தை குறைப்படுத்துகிறேன் என்று தான் அர்த்தம். ஏனெனில் அது ஒரு புது அனுபவம்.
      அந்த அனுபத்தை கதையைக் கேட்காமல் நீங்கள் சென்று படம் பார்த்து உணர முடியும். எனவே இங்கு நான் கதையை உங்களிடம் சொல்லப் போவதில்லை. ஆனால் அந்த உணர்வை சொல்லப் போகிறேன்.
       திரையரங்கில் படம் ஆரம்பித்ததில் இருந்து சிரிப்பு சத்தம் தான். ஆனால் திரைக்குள் விஜய் சேதுபதியைத் தவிர அவனுடன் இறுதி வரை சுற்றும் நண்பரகளின் முகத்தில் அச்சம் தான். அந்த அச்ச உணர்வை ஒவ்வொருவர் வெளிப்படுத்தும் விதம் தான் அவர்களின் தனித்தன்மையை அழகுப்படுத்துகிறது. தமிழ்த்திரையுலகிற்கு நல்ல ஒரு மூன்று நடிகர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
        பகவதி பெருமாள் கதையில் பகவதியாக வருகிறார். நண்பர்கள் வட்டம் இவரை பக்ஸ் என்று தான் அழைக்கிறார்கள். இவரின் கண்கள் எப்பொழுதும் அச்சத்துடனே இருப்பது எப்படித் தான் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறதோ தெரியவில்லை. அதன் பிறகு இவருக்கு அப்படியே எதிர் மறையாக தனது முகத்தில் பயத்தை வெளிப்படுத்தி மேலும் நம்மை சிரிப்புக்கு ஆளாக்குகிறார் ராஜ்குமார் என்கிற பாலாஜி. கதையில் பஜ்ஜி என்று தான் இவரை அழைக்கிறார்கள். பாவம் நிறைய இடங்களில் இவரை சுடுகிறார்கள். பாவம் பஜ்ஜி.
       இவர்கள் இருவரையும் தாண்டி விக்னேஷ்வரன் என்கிற சரஸ் நம்மை சிரிக்க வைப்பதைக் காட்டிலும் பல இடங்களில் உணர்ச்சிவசப்படவும் வைக்கிறார்.ஒவ்வொரு இடங்களிலும் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்புக்கென்று தேசிய விருது என்னைக் கொடுக்கச் சொன்னால் நான் இவருக்குத் தான் இந்த வருடம் கொடுப்பேன். அசத்தல். நண்பேன் டா…!
     விஜய் சேதுபதியைப் பற்றி சொல்லத் தேவையில்லை.பீட்சாவில் பயமுறுத்தி, இங்கு படம் நெடுக வயறு குலுங்க சிரிக்க வைக்கிறார். கல்யாண ரிசப்ஷனில் தன் காதலியை யாரோப் போல் பார்க்கும் அந்த இடம் யாராலும் கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாத இடம்.மேலும் இந்தப் படத்தைப் பார்க்கும் மாணவரகளுக்கு உயிரியல் கேள்விக்கு ஒரு பதில் நிச்சயம் மறக்காமல் நினைவிலிருக்கும் (மெடுல்லா ஆப்லங்கேட்டா) சிவாஜி செத்துட்டாரா...?
  அய்யோ படத்தின் கதாநாயகியைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.18வயசில் அறிமுகமான காயத்ரி தான்  தனலட்சுமியாக இந்தப்படத்தில் இடைவேளை வரை நமக்கு முகம் காட்டாமலே மொபைல் மூலம் நம்மை பயமுறுத்துகிறார். படம் ஆரம்பித்து இடைவேளைக்குப் பிறகு பல மணி நேரம் கழித்தே நம் கண்ணில் படுகிறார். குறைந்த நேரமே திரையில் வந்தாலும் நம்மை அந்த சில நேரங்களில் அசத்திவிடுகிறார். உண்மையில் அவரின் ரிசப்ஸன் மேக்கப் ஓவரா இல்லையா என்று பார்க்கும் அனைவருக்குமே சந்தேகம் வருகிறது.
       எப்படியோ ஒரு நண்பனின் திருமணத்தை நடத்துவதற்காக மூன்று நண்பர்கள் படும் பாட்டை நகைச்சுவையுடன் சொல்லி இறுதியில் அழகான நட்பை நம் கண் முன் காட்டி நெகிழ வைக்கிறார்கள்.
  இது நிஜக் கதை என்று வேறு இறுதியில் நமக்கு போட்டுக் காட்டுகிறார்கள். அந்த நிஜக்கதையின் கதாநாயகன் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமார். அப்பா நிஜத்தில் நண்பர்கள் என்னப் பாடுப்பட்டார்கள் நினைக்கையில் பிரமிப்பாக இருக்கிறது. இதில் நடித்த ஒரு நடிகர் நிஜத்தில் இந்தத் திருமணம் நிகழ பாடுப்பட்டவர்களில் ஒருவர் என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி. மேலும் இந்தப் படத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் சீக்கிரம் சென்று படத்தைப் பாருங்கள்.
நட்புடன் 
தமிழ்ராஜா


      

10 comments:

  1. சுருக்கமான ஆவலைத் தூண்டும் விமர்சனம்...

    நன்றி...
    tm2

    ReplyDelete
    Replies
    1. படமும் மிகவும் ஆவலைத் தூண்டும் விதத்தில் தான் இருக்கிறது

      Delete
  2. கண்டிப்பா பார்க்கனும்..நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நண்பரே

      Delete
  3. பார்த்திட்டாப் போச்சு, கனடா தியேட்டரில் வெளியிட்டு இருக்கக் கூடாதா, ஐங்கரன் நிறுவனமே கொஞ்சம் கவனிக்கக் கடவ, இந்த மாதிரி படங்கள் திரையில் பார்த்தால் சிறப்பே.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அவசியம் திரையில் பார்க்க வேண்டும்.

      Delete
  4. எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க1பார்த்திட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் நண்பரே... சிரிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் இதை அவசியம் பார்க்க வேண்டும்

      Delete
  5. அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts