• 12.07.2012

  திரைவிமர்சனம்: நீர்ப் பறவை ஆழமாக நீந்தியிருக்கலாம்.
    நீர்ப்பறவை தலைப்பே என்னை திரையரங்கம் நோக்கி ஈர்த்தது. மேலும் அடிக்கடி தொலைக்காட்சியில் தென்படும் துண்டுக் காட்சிகள் நீர்ப்பறவையைப் அவசியம் பார்த்தே ஆக வேண்டுமென்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திவிட்டது.மேலும் படத்தின் இயக்குனரும் நடித்த நடிகர்களுக்கும் மற்றும் அதில் பணி செய்த அத்தனைக் கலைஞர்களும் என்னை மிகவும் கவர்ந்தவர்கள்.
    நீர்ப்பறவை ஒரு தமிழக மீனவனின் வாழ்வின் வலியை பதிவு செய்வதாகவே நான் பார்க்கிறேன். நம் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லையில் சுட்டுக் கொல்லப்படும் அவலத்தை தினசரி நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் வெறும் செய்தியாக மட்டுமே பார்க்கும் அரசாங்கத்தை நோக்கியும், மக்களை நோக்கியும் எழுப்பும் கேள்வியே நீர்ப்பறவையின் கதைக்கரு. அப்படி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவனுக்குள் நிகழும் அழகான ஆழமான காதலே திரையில் ஓவியமாக நம் முன் விரிகிறது.
       எஸ்தர் தன் கணவன் அருளப்பசாமிக்காக பல ஆண்டுகாலம் கடலைப் பார்த்தப்படியே காத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அருளப்பசாமியின் உடலோ அவள் வீட்டின் முன் புறம் கண்டெடுக்கப்படுகிறது. கடலுக்குள் சென்ற கணவனின் உடல் வீட்டின் முன்புறம் எப்படி வந்தது. அப்படியிருக்க தன் கணவனைக் கொன்றது நான் தான்  என்று சொல்லி எஸ்தர் கதையின் ஆரம்பத்திலேயே நமக்கு ஒரு எதிர்ப்பார்ப்பைத் தருகிறார்.
        குடிக்கு அடிமையான அருளப்பசாமி எஸ்தரின் காதலால் எப்படி மனம் மாறுகிறான். தமிழக கடல் மீனவர்களின் எதார்த்த வாழ்க்கை என்று எஸ்தரின் நினைவுகளுடன் நமக்கு ஒரு மக்களின் வாழ்க்கையை அழகாக நம் கண் முன் நிறுத்துகிறார் இயக்குனர்.
        மேலும் முதல் முறை கிறித்துவத் தமிழர்களின் வாழ்க்கையை மிகவும் ஆழமாகச் பதிவுச் செய்திருக்கிறது இந்தப் படம். மேலும் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் உண்டான நெருக்கத்தை இந்தப் படத்தில் சில காட்சிகள் மூலம் நமக்கு விளக்கப்படுகிறது. முதல் முதலில் புது வல்லத்தை கடலில் இறக்குவதற்கு முன் என்னென்ன செய்கிறார்கள் என்பதை மிகவும் எதார்த்தமாக நமக்கு இதில் காட்டப்படுகிறது. ஒரு முஸ்லீம் படகு செய்து அதற்கு பல சம்பிரதாயங்களும் செய்து அதை ஒரு கிறிஸ்துவன் இயக்குவதாக அமையும் காட்சிகள் இப்பொழுது நம் சமூகத்திற்கு அவசியம் தேவை.
         காதல் காட்சிகள் பற்றி சொல்லத் தேவையில்லை. சில படங்களில் பார்த்த நினைவு இருந்தாலும் காதல் என்றும் புதிது என்று பின்னணி இசை நமக்குச் சொல்கிறது.
          சுனைணா விஷ்ணுவின் தலையைத் தொட்டு ஜெபம் சொல்லும் காட்சிகள் கொஞ்சம் அதீதமாக இருந்தாலும் ரசனையாகத் தான் இருக்கிறது. இருப்பினும் சுனைனாவுக்கு ஏன் அப்படியொரு கறுப்பு சாயம் என்று தெரியவில்லை. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மற்றும் எல்லா கதாப்பாத்திரத் தேர்வும் அருமை.இருப்பினும் நந்திதா தாஸை மட்டும் வீணடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
          மேலும் இதில் நம்மை மெய் மறக்கச் செய்வது பாலசுப்ரமணியம் அவர்களின் ஒளிப்பதிவு. நிறைய இடங்களில் நம்மை மிகவும் நேர்த்தியான அழகான காட்சியமைப்பில் கொள்ளைக் கொள்கிறது. அது போலவே என்.ஆர். ரகுநந்தனின் இசையும் நம்மை பல இடங்களில் மனதை ஈர்க்க செய்கிறது.
         வசனங்கள் ஒன்றும் நறுக்கென இருக்கிறது. செய்திகளில் கூட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை என்று தான் போடுகிறார்களே தவிர, இந்திய மீனவன் என்று செய்தி வருவதில்லை.
  அவர் உடல் தான் கரை வந்திருக்கு அவரு உசுரு இன்னும் கடலுக்குள்ள தான் இருக்கு என்பது போன்ற வசனங்கள் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது.எழுத்தாளர் ஜெயமோகனின் தாக்கம் பல இடங்களில் தெரிகிறது.
         இருப்பினும் இதெல்லாவற்றையும் தாண்டி கதை நம்மை ஈர்க்கிறதா என்றால் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை கதையை ஏன் இயக்குனர் நந்திதாஸின் பார்வையில் சொல்ல விழைந்தார் என்ற கேள்வி மனதில் எழுகிறது. ஏற்கனவே சில காட்சிகள் முன்னே நமக்குக் காட்டப்பட்டதனாலேயே படம் கொஞ்சம் சலிப்புத் தட்டுகிறது.
         எப்படி இருந்தாலும் தமிழக மீனவர்களின் வலியைச் சொல்ல விழைந்திருக்கும் முதல் கதை என்பதால் அனைவரும் திரையரங்கிற்கு சென்று ஒரு முறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்.
          திரைப்படம் முடிந்து லேசான வலியுடன் வந்த எனக்கு நிச்சயம் இந்த வலி எல்லோர்க்கும் புரியுமா…? என்று லேசான சந்தேகம் வந்தது. இடையில் என் கால்லை ஒருவன் அழுத்தமாக மிதித்துவிட்டு மெதுவாக சென்றான். என் கால்லை மிதித்து விட்டோம் என்ற சிறு உணர்வு கூட இல்லாமல் அவன் செல்வதைப் பார்க்கையில் எனக்கு அதிர்ச்சிக் கலந்த ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு காலில் கொஞ்சம் லேசான வலி தோன்றினாலும், அருகில் இருப்பவனுக்கு வலிக்கிறது என்றுக் கூட உணராதவர்கள். எங்கோ மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் வலியை உணர்வார்களா…? என்று நினைக்கையில் கால்களைத் தாண்டி மனம் அதிகமாகவே வலித்தது
          
  நட்புடன் 
  தமிழ்ராஜா