பாக்கெட் மனியின் பூதாகரப் பிரச்சினைகள் நீயா நானாவில்


       இந்த வார நீயா நானாவில் பாக்கெட் மனிப் பற்றிய நிறை குறைகளை விவாதிக்கையில் தான் நம் சமூகத்தின் அத்தியாவசியத் தேவைகளின் புரிதலின்மையைப் புரிந்துக் கொள்ள முடிந்தது.
       நீயா நானாவில் ஒரு பக்கம் பெற்றோர்களும், மறுபக்கம் பிள்ளைகளையும் அமர வைத்து  விவாதிக்கையில் தான் பிள்ளைகளைக் காட்டிலும் பெற்றவர்கள் எத்தனைப் பெரிய தவறை செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

       ஒரு பெண் எனக்கு பாக்கெட் மனியாக மாதம் 50,000 ரூபாய் வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் சொன்னது எல்லோருக்குமே அதிர்ச்சியைத் தந்தது. அது மட்டுமின்றி அவர் தந்தையைப் போல வேலையில் உள்ளவரை கணவனாக ஏற்றுக் கொள்ளத் தயரா என்று கோபி அந்தப் பெண்ணிடம் கேட்டார். அதற்கு அந்தப் பெண் முடியாது என்னுடைய செலவுகளுக்கு ஒத்து வராது என்று பளிச்சென பதில் வந்தது. இப்படியும் ஒரு சமூகம் வளர்ந்துக் கொண்டு வருகிறது என்பதை நினைக்க அதிர்ச்சியாக இருக்கிறது.
       லேடஸ்ட் மாடல் லேப்டாப், லேடஸ்ட் மாடல் மொபைல்,பார்ட்டி, பிறந்த நாள் பரிசு என்று அவர்களின் பாக்கெட் மனிக்கான காரணங்கள் விரிந்துக் கொண்டே இருக்கிறது.
      இன்றும் இதே தமிழகத்தில் தான் படிக்கக் கூட வழியில்லாமல் வேலைக்குச் செல்லும் குழந்தைகளும், வேலைக்குச் சென்றுக் கொண்டே படிக்கும் மாணவர்களும் வாழ்கிறார்கள்.இதெல்லாம ஏன் அந்த பெற்றோர்களின் கண்ணுக்கோ, பிள்ளைகளின் கண்ணுக்கோ தெரியவில்லை.
        ஒருவன் தன் நண்பனுடைய பிறந்த நாளுக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுத்துக் கொடுத்ததாகச் சென்னான். இது நான் கேள்விப்பட்டது தான் என்றாலும், இன்னொரு நபர்  தன் நண்பனுடைய பிறந்த நாளுக்காக மதுப் பாட்டிலை வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது.
          மொத்தத்தில் இன்றைய இளையத் தலைமுறைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதில் நிறைய குழப்பங்கள் இருப்பது புரிகிறது. அது மட்டுமின்றி பெற்றவர்களின் வளர்ப்பு முறையிலும் மிகப் பெரிய தவறு இருப்பதும் புரிகிறது. இது நம் சமூகத்தில் மிகப் பெரிய சீரழிவை உண்டாக்கிவிடும்.
          அதுவும் எதையுமே சிக்கனமாக, எளிமையாக வாழப் பழகிய நம் தமிழர்களின் வாழ்க்கை முறையை சிறு துளிக் கூட உணர்ந்திடாத தலைமுறையை நாம் உண்டாக்கியது யார் தவறு. நம் கல்வி முறையில் இருந்தே இந்த சீர் கேடு நிகழ்கிறது. கல்வித்துறையில் பணத்தை எப்பொழுது உள்ளே நுழைத்தார்களோ, அப்பொழுதே இந்த நிலை வளர்ந்து பெருகிவிட்டது.
         இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சாளராக வந்தவர்களில் முதலில் பேசிய புகழேந்தி அவர்கள் அருமையாக ஒரு கருத்தை நம் முன் வைத்தார். இதெல்லாவற்றிற்கும் காரணம் அடிமைத்தனம். நாம் நம்மையறியாமலேயே ஒவ்வொரு பொருளுக்கும் அடிமையாக்கப் படுவது தான் இதற்குக் காரணம் என்றார். மேலும் நம்மைச் சுற்றி மிகப் பெரிய சூழல் நம் மேல் அந்த அடிமைத்தனத்தை திணிக்கிறது என்றார்.
        மேலும் அவருக்கு அடுத்து பேசிய திரு. நாகராஜ் அவர்கள் நம் இளையத் தலைமுறையை கவர்வதற்கென்றே தான் பல நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல யுக்திகளைக் கையாள்கின்றனர். எனவே அதைக் கண்டு இவர்களின் பொருளாதாரச் சூழலை மாற்றுகின்றனர். உதாரணத்திற்கு இன்று எல்லோரும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எனவே இவர்களின் பணத்தை நோக்கி பெரிய நிறுவனங்கள் பல கவர்ச்சிக்கரமான விளமபரங்களை முன் வைக்கின்றனர். ஒரு வேளை இவர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வேலை போய்விட்டால், எல்லோருமே ஸ்தம்பித்துவிடுவார்கள். நம்முடைய இளையத் தலைமுறையினரின் பொருளாதாரத்தை பலவீனமாக்கும் முயற்சி இது என்றார். இப்படி ஒரு பார்வை எனக்கு புதிதாக தெரிந்தது. இது அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று.
       ஒரு பெண் தன் தந்தை தனக்கு பாக்கெட் மனிக் கொடுக்கவில்லை என்று தன் வீட்டைச் சுற்றி கடன் வைத்திருக்கிறார். இன்னும் சிலர் வீட்டிலேயே பொய் சொல்லியும், திருடியும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். கல்லூரிப்பெண்களிடம் எடுத்த ஒரு கணக்கெடுப்பில் 70 சதவீதம் பேர் வீட்டில் திருடுவதாக சொல்கின்றனர் என்கிறது. இது ஆரோக்யமான சமூகம் உருவாக என்றுமே வழி வகுக்காது.
          நிறைய இடங்களில் பாக்கெட் மனிக்காக பொறியியல் மாணவன் பெண்ணிடம் செயின் பறிப்பு. கல்லூரி மாணவிகள் பாக்கெட் மனிக்காக விபசாரத்தில் ஈடுபடுவது என்று நிகழ்வது . வீட்டில் பெற்றவர்களின் வளர்ப்பு முறையையும், வெளியில் நம் கல்விக்கூடத்தின் இயலாமையும் கேள்விக்குறியாக்கியிருப்பது உண்மையே… இது சரியாக வேண்டுமெனில் பெற்றவர்கள் அறிவை மட்டுமின்றி அன்பையும் ஊட்டி பிள்ளைகளை வளர்க்க வேண்டும். தனக்கு என்ற தன்னலத்தை தாண்டி பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற பொது நல நோக்கத்தை பிள்ளைகளின் மனதில் வளர்க்க வேண்டும்.
சாக்ரடீஸ் வாரத்தில் ஒரு முறை கடைவீதிக்கு செல்வது வழக்கம். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டாராம். “நீதான் எந்தப் பொருளையும் வாங்குவதில்லையே பின் ஏன் வாரத்திற்கு ஒரு முறை கடைத்தெருவுக்கு வருகிறாய் என்று. அதற்கு சாக்ரடீஸ் அவர்கள் “ நான் எந்தெந்தப் பொருள்களெல்லாம் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை பார்க்கத் தான் அடிக்கடி கடைத்தெருவுக்கு வருகிறேன் என்று சொன்னாராம். இந்த வரிகளில் நம்முடைய வாழ்க்கைக்கான ஆழ்ந்த பொருள் இருப்பதாக நான் உணர்கிறேன்.

  

நட்புடன் 
தமிழ்ராஜா