• 10.25.2011

  அவதாருக்கு கைத்தட்டல் கூடங்குளத்திற்கு ஏன் எதிர்ப்பு...?


  அவதார் :மனித இனம் வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கிருக்கும் நாபிகள் என்ற இனத்தை விரட்டிவிட்டு,அங்கிருக்கும் ஒரு பொருளை (தனிமத்தை) கைப்பற்ற எண்ணுகின்றனர். அந்த நாபிகள் இயற்கையோடு இயற்கையாக வாழ்கின்றார்கள். இவர்களுக்கும் இயற்கையை அழிக்க வந்த மனிதர்களுக்கும் இடையில் மிகப் பெரிய யுத்தம் நிகழ்கிறது. அதற்கு மனிதனில் இருந்து ஒருவன் இவர்களுக்கு நாபியாகி உதவுகிறான். இறுதியில் நாபிகள் வெற்றி பெற்று மனிதர்கள் தோற்று, அந்த கிரகத்தை விட்டே துரத்தப்படுகிறார்கள்.

       இந்த படம் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்றது.இயற்கையை அழிக்கும் மனிதர்களை ,நாபிகள் எதிர்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் மிகுதியாக காணப்பட்டது. உலகம் முழுவதும் இயற்கையைப் பாதுக்காக்கப் போராடும் பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூட இதை உதாரணமாகச் சொல்லலாம். இருப்பினும் மக்கள் இதனை எப்படிப் பார்த்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. பெருவாரியான மக்கள் இதை ஒரு சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த படமாகவே பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.
  உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினர் காலங்காலமாக இப்படிப்பட்ட போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராக நடத்திக் கொண்டுத் தான் இருக்கிறார்கள். இயற்கையை பாதுகாக்கும் பொருட்டு அவர்கள் போராடிய எந்தப் போராட்டமும் இது வரை வெற்றிப் பெற்றதாக எனக்குத் தெரியவில்லை. காரணம் அவர்களின் போதிய கல்வியறிவின்மையாகக் கூட இருக்கலாம். அது மட்டுமின்றி  இயற்கையோடு வாழும் அவர்களின் வாழ்க்கை முறையை இன்றைய நவ நாகரிக மனிதர்களாகிய நாம் புரிந்துக் கொள்ளாததே முக்கியக் காரணம்.
       பல தொழிற்சாலைகளும்,ரயில் நிலையங்களும்,அடுக்கு மாடிக்கட்டிடங்களும், இன்னும் சில வளர்ச்சிகளும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தே உலகமெங்கும் உருவாகியிருக்கிறது. இதில் என்ன சோகமென்றால் அவர்கள் போராடுவது, நம்முடைய இயற்கையை ஒட்டிய வாழ்விற்கும் சேர்த்துத் தான் என்பதை நாம் புரிந்துக் கொள்வதில்லை. நம் இந்திய நாட்டில் மட்டும் இப்படி எத்தனைப் பழங்குடியினரை அவர்களின் இருப்பிடத்தில் இருந்து விரட்டிவிட்டு நாம் வளர்ந்திருக்கிறோம் தெரியுமா?
  இது இயற்கையை நோக்கி நாம் செய்யும் பாவச்செயல் அல்லவா...? 
  மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தானே என்பதை அடிக்கடி நினைவூட்டும் இப்படிப்பட்ட மக்களை எளிமையாக ஒரே வரியில் ஓதுக்கி விடுகிறோம் “ அறியாமையால் செய்கிறார்கள்நாட்டின் வளர்ச்சிப் பற்றி சிந்திக்கத் தெரியாதவர்கள். உண்மையில் இது அவர்களின் அறியாமையா? நம்முடைய அறியாமையா?
     விஞ்ஞானம் என்றப் பெயரால் உலோகக் குப்பைகள் நிறைந்தக் காடாகத் தான் ஆகிவருகிறது இந்தப் பூமி. இன்றைய உலகத்தின் ஒட்டும் மொத்த மக்களும் விஞ்ஞானத்தின் குறிப்பிட்ட வளர்ச்சியால் உருவாகும் இயந்திரங்களை உபயோகப்படுத்தும் சோதனை எலிகளாகத் தான் உருவாக்கப் படுகிறார்கள். இன்றைய வாழ்க்கை முறையே அப்படித் தானிருக்கிறது. 

  அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்கள் இந்த விஞ்ஞான சமூகத்தால் ஒதுக்கப்படுகிறார்கள். கூடங்குலம் மக்கள் போராட்டம் இதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். மக்கள் அங்குப் போராடிக் கொண்டிருக்க, அணு உலை எதிர்ப்பாளர்கள் என்று அவர்களுக்கு முத்திரைக் குத்துவது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. இயற்கைப் போராளிகள் என்று அவர்களை அழைப்பது தான் சாலச் சிறந்தது.
       ஆம், அவர்கள் அணு எதிர்பாளர்கள் அல்ல... இயற்கையைப் பாதுகாக்கப் போராடிக் கொண்டிருப்பவர்கள். மனிதன் தன் சர்வாதிகாரத்தால், பல உயிரின்ங்களின் வாழ்வாதாரங்களை, இருப்பிடங்களை அழித்துவிட்டான். அதற்கெல்லாம் பாவம் வாயில்லை, எனவே அதெல்லாம் போராட்டம் செய்யவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் யானைகளெல்லாம் அடிக்கடி மனித குடியிருப்புக்குள் புகுந்து நாசம் செய்வது தான். இப்படி பல உயிரினங்களின் வாழ்வாதாரங்களையெல்லாம் அழித்துக் கொண்டிருந்த மனிதன், இறுதியில் தன் இனமான சகமனிதனின் வாழ்வாதாரங்களிலேயே, கைவைத்துவிட்டது தான் மிகப் பெரிய கேவலம்.
       சக மனிதனின் துயரத்தைப் பற்றி கவலைப்படாத இன்றைய நவ நாகரிக மனிதர்கள் இயற்கையைப் பற்றி எப்படிக் கவலைப்படுவார்கள். தங்களின் மின் விசிறியும், குளிர்சாதனப் பெட்டியும்,கணினியும் இயங்காதது தான் இவர்களுக்குப் பெரியக் கவலையாக இருக்கும். நாளையத் தலைமுறை இயங்குவதே கேள்விக்குறியாக இருக்கும் இந்த அணு உலையைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை.
  ஆப்பிள்  நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த்தற்கு தமிழகத்தின் பல இளைஞர்கள்  தங்கள் ஆழ்ந்த இரங்கலைப் ஃபேஸ் புக்கில் பதித்திருந்தார்கள். உலகம் முழுவதிலுமிருந்தும் பல இரங்கல் செய்திகள். அந்த மாமனிதரை கொண்டு சென்ற அந்தப் புற்று நோயைப் பற்றி சிந்திக்க எவருக்கும் நேரமில்லை.
       ஆனால் இதை கூடங்குலம் மக்கள் முன்னமே சிந்தித்து சொன்னால் முட்டாள்தனம் என்று அதே ஃபஸ் புக்கில் சிலர் பதிக்கிறார்கள். ஒருத்தருக்கு இத்தனை இரங்கல் செய்தி வருவது பாராட்டுக்குரியது தான். இருப்பினும் நாளை இந்த எண்ணிக்கை அணு உலையினால் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அணு உலையின் பாதிப்பினால் எத்தனை மனிதர்கள் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.
       வீண் பயம் என்று இதனை பலர் நினைக்கலாம். வரும் முன் காப்பது தான் நம்முடைய கலாச்சாரம். இது வரை பழங்குடிகள் மட்டுமே கையில் எடுத்தப் போராட்டத்தை அரசாங்கத்தை எதிர்த்து ஒரு குறிப்பிட்ட படித்த மக்கள் எழுப்பியிருக்கிறார்கள். இது தமிழகத்திற்கு மட்டுமின்றி எல்லா நாடுகளுக்கும் தேவையான ஒரு போராட்டமாகும்.
       நாட்டின் வளர்ச்சி என்று பேசும் இந்த சூழல் தான் இந்தப் போராட்டத்திற்கான சரியான கால கட்டம். அரசாங்கம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய மக்களும் மின்சாரத்தின் தேவையை உணரும் காலகட்டம் இது. மின்சாரத்திற்கான மாற்று வழியை நோக்கி மக்களும் அரசாங்கமும் சிந்திப்பதற்கான சரியான காலகட்டமும் இது தான். இந்த எல்லாவற்றுக்கும் கூடங்குலம் மக்கள் போராட்டம் வழி செய்யும் வகையில் அமைய வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டத்தில் கூடங்குல மக்களுக்கு கைத்தட்டல் கிடைக்குமா? இல்லை இதையும் இன்றைய சில நவ நாகரிக மனிதர்கள் திரைப்படமாக எடுத்தால் தான் புரிந்து கொள்வார்களா?