• 10.19.2011

  அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் துரோகம்  தேர்தலென்றால் சட்ட மன்றமாகட்டும்,பாராளுமன்றமாகட்டும், ஊராட்சியாகட்டும் பெரு வாரியான மக்கள் எதிர்ப்பார்ப்பது ஒரு ஓட்டுக்கு யார் எவ்வளவு தருவார் என்று தான் இருக்கிறது.
  இந்த முறை இந்த வேடபாளர் இத்தனை லகரங்கள் செலவு செய்திருக்கிறார், எனவே அவர் நிச்சயம் வெற்றி பெற்றிடுவார் என்பதாகத் தான் தேர்தல் கணிப்பு இருக்கிறது. அதையும் தாண்டி அவர் எத்தனைப் பிரபலம் என்ற அளவிலும் அமைகிறது வேட்பாளரின் வெற்றி. இந்த முறையில் என்றேனும் ஒரு சிறந்த தலைவர் நமக்கு கிடைக்க வாய்பிருக்கிறதா?
  புடவையையோ,வேட்டியையோ இன்னும் சிலப் பொருட்களையோ கொடுத்து ஒட்டைப் பெற்றுவிடலாம் என்று வேட்பாளர்கள் எண்ண வழி வகுத்தது யார்?
  அப்படியென்றால் பணம் வைத்திருந்தால் பதவிக்கு வந்துவிடலாமென்ற கலாசாரத்தை நாம் வளர்த்துக் கொண்டு வருவதை மறுக்க முடியாது. நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள், ஒரு ஓட்டுக்கு எத்தனைத் தருகிறாய் என்ற அளவிலேயே சென்றால், அது இன்னொரு நல்ல வேட்பாளருக்கு மக்களாகிய நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம் இல்லையா? இது மிகப் பெரிய சமூக சீர் கேடில்லையா?
  “50 பைசா நீ சம்பாரிச்சுக்கோ... மக்களுக்கு ஒரு 5 பைசாவாவது செலவு செய்.... ஊராட்சி மன்றத் தேர்தலில் தலைவருக்கு நிற்கும் ஒவ்வொருவரும் தலா 50 லகரங்கள் செலவு செய்கின்றனர் என்று நேற்று ஒரு ஆட்டோகாரர் என்னிடம் சகஜமாக சொல்கிறார். அப்படியெனில் நாம் ஏமாறுவதில் துளியும் அவமானமோ! வருத்தமோ! இருப்பதாக அவர் பேச்சில் தெரியவில்லை. மக்கள் சேவை செய்யும் பணிக்கு, மக்களாகிய நாம் தான் அவர்களுக்கு பணம் தர வேண்டும். ஆனால் நமக்கு அவர்கள் பணமோ, பொருளோ தருவது எந்த வகையில் நியாயம். இந்த முறைக்கு மக்களாகிய நாம் தெரிந்தே ஆதரவு அளிப்பது, வரும் தலைமுறையை பெரும் சீரழிவிற்கு உள்ளாக்குவதாகும்.
  இது ஒன்றும் பாமர மக்களிடையே மட்டும் நடப்பதில்லை. படித்த மக்களுக்கும் பணமும், பொருளும் கொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதைப் பார்க்கையில் மக்களுக்கு பணத்தின் மேல் உள்ள மோகம் தெளிவாகத் தெரிகிறது.

  ஆம் உண்மையிலேயே இன்று நம் வாழ்க்கை முறையில் நாம் மனிதர்களை எப்படி, எதன் அடிப்படையில்  எடைப் போடுகிறோம் என்று கேட்டுக் கொண்டோமென்றால், பதில் பணம் என்று தான் வரும்.
  பெருவாரியாக பணத்தின் அடிப்படையில் தான் நாம் இன்று மனிதரின் தரத்தை எடைப் போடுகின்றோம். உதாரணத்திற்கு ஒரு பெண்ணிற்கு மாப்பிள்ளைப் பார்க்கும் பொழுதும், பையனுக்கு பெண் பார்க்கும் பொழுதும், இன்று அவர்களின் தரத்தை வசதியை வைத்தே தேர்வு செய்கின்றனர். என்ன தான் நாம் இதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது என்று காரணங்கள் சொன்னாலும், கல்வி மூலம் கிடைக்கும் பணத்தின் அடிப்படையில் தான் குடும்ப உறவுகள் அமைகிறது. இது பெண்ணிற்க்கும், ஆணிற்கும் சரிசமமாகவே இருக்கிறது. பணத்தை மையமாக வைத்தே மனிதரை எடைப் போடும் கலாசாரம் நம்மிடையே பழகி வேரூன்றி விட்டது. 


   இந்த முறை குடும்ப உறவுகளிலும் பிரச்சினையை வளர்த்து தம்பதிகளை கோர்ட் வாசல் வரை கொண்டு செல்வது இன்று அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதேப் போல் தான் நாம் பணத்தின் அடிப்படையில் பொது வாழ்வில் தேர்ந்தெடுக்கும் மனிதர்களும் கோர்ட் வரை செல்வது அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
  மனிதர்களைத் தேர்ந்தெடுப்பதில் அகவாழ்விலும் சரி,புறவாழ்விலும் சரி நாம் தவறு செய்வதால், அகவாழ்வான குடும்பத்திலும் சிக்கல் ஏற்படுகிறது, அது குடும்பத்தில் குற்றங்கள் அதிகரிக்க வழி வகுக்கிறது. புறவாழ்வான அரசியலிலும் சிக்கல் ஏற்பட்டு பொது வாழ்வில் குற்றங்கள் பல ஏற்பட வழி வகுக்கிறது.
       சமீபத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன், அதில் ஒரு தாய் தன் பெண்ணிடம் போனில், ஒரு பையன் வீட்டிற்கு போகச் சொல்கிறாள்.அவள் அவன் கிராமத்தில் இருந்து வந்தவன் என்று சொல்கிறாள். இருப்பினும் அவன் வீட்டிற்கு செல்கிறாள். அவன் வீட்டின் அலங்காரங்களைப் பார்த்தவுடனேயே நாம கல்யானம் பண்ணிக்கலாமா என்று கேட்கிறாள்இது நம் கலாச்சாரமில்லைத் தான். இருப்பினும் நம்மிடையே தான் இந்த எண்ணம் காட்சி வடிவில் தினமும் திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இது கூடிய விரைவில் நம்முடைய  சில பெண்களின் மனநிலையாகக் கூட மாறலாம். இந்த நிலைத் தொடருமானால் பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஆண்கள், ஆண்கள் தேர்ந்தெடுக்கும் பெண்கள் இரண்டிலும் பொருளிருக்கும்,பெயரளவில் கல்வி இருக்கும், மனம் நிறையாத, வீடு நிறைந்த செல்வமும் இருக்கும்,அன்பு பாராட்டும் காதல் மட்டும் அங்கு இருக்காது
  நம் அகவாழ்வில் காதல் தன் சுயமிழந்து போகும் பொழுது, நாம் வெறும் இயந்திரங்களாகத் தான் வாழ நேரிடும். அது புறவாழ்விலும் பிரதிபலிக்கும் பொழுது நம்மிடையேயான வீரமும் தன் சுயமிழ்ந்து விடும். விளம்பரங்களுக்கான சோதனைக் கருவிகளாகத் தான் நாம் சமூகத்தில் உலவும் நிலை வரும்.
    பட்டனைத் தட்டினால் எல்லாம் நடந்துவிடும் என்பது போல், பணத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு, நம்முடைய மனித இயக்கத்தையே அபகரித்துவிடும் மிகப் பெரிய அபாயம் விரைவில் நடக்கப் போவதைத் தான் இன்றைய சூழல் நமக்குச் சொல்கிறது.
  ஒரு சமூகம் முன்னேற்றம் பெற வேண்டுமெனில் அந்த சமூகத்தின் அகவாழ்வும்,புறவாழ்வும் ஏற்றம் பெற வேண்டும். எனவே தான் நம் சங்க இலக்கியத்தில் கூட அகம்,புறம் என்று பிரித்து காதலையும்,வீரத்தையும் போற்றி பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
  காதலையும்,வீரத்தையும் வைத்தே ஒரு சமூகம் வளர முடியும். இரண்டுமே அங்கு சுயமிழக்கும் பொழுது அந்த சமூகமும் விரைவில் சீரழிவது உறுதி.
  நம்மிடையே இன்று காதலும் வீரமும் சுயமிழந்துக் கொண்டு வருவதைத் தான் இன்றைய குடும்ப வன்முறைகளும்,அரசியல் குற்றங்களும் பிரதிபலிக்கிறது. அப்படியிருக்க அரசியலை மட்டுமோ, குடும்ப உறவுகளையோ தனியே குற்றம் சுமத்துவது அறிவீனம்.
       நோயுற்றவனுக்கு, புறத்தில் மட்டும் மருத்துவம் செய்யும் கலாசாரத்தில் நாம் வாழ பழகிக் கொண்டு விட்டோம் . அகத்திலும் மருத்துவம் செய்யும் நம்முடையே பழைய மருத்துவ முறையை மீண்டும் பரிசீலித்து பழக்கத்தில் கொண்டு வர வேண்டிய காலக் கட்டமிது.
       இல்லையேல், நம்முடைய தலைமுறைகளை மிகப் பெரிய அபாயத்தில் தள்ளி விட்ட பழிச்சொல்லுக்கு நாம் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
  இது நம் தலைமுறைக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம்....