• 11.25.2011

  பெண்களே உங்கள் அகத்தில் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?

   
   சமீபத்தில் இணையத்தில் ஒரு கட்டுரைப் படித்தேன். வெளியூரில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் படிக்கும் பெண்ணின் அவலக் கதை. சென்னையில் தனியார் விடுதி ஒன்றில் தங்கிப் படிக்கும் பெண். தனியார் விடுதியில் சேர்ந்த முதல் நாளே அவளுக்கு தேனீரில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து, அவளை மயக்கமடைய செய்திருக்கின்றனர்.
  மயக்க நிலையில் இருந்த பெண்னை, அந்த விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் கேமராவில் நிர்வாணமாக படம் எடுத்து அவளை மிரட்டி விபசாரத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கின்றனர். இப்பொழுது அந்த பெண் படித்துக் கொண்டே தொழிலுக்கும் போவதாக சொல்கிறாள். என்னைப் போல் இன்னும் நிறைய பெண்கள் இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று வேறு அதிர்ச்சி தரும் தகவலை சொல்லியிருக்கிறாள். ஆனால் அவள் வீட்டிற்கு அவள் படித்துக் கொண்டிருப்பதாக மட்டுமே தெரியும். இன்னும் இப்படி எத்தனைப் பெண்கள் இப்படி மாட்டியிருக்கிறார்களோ? பெண்களே பெண்கள் மீது இழைக்கும் இந்த அநீதியை எப்படி தடுப்பது?
       அப்படியெனில் ஒரு பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்துவிட்டால் அவளை அடிமைப் படுத்திவிடலாம் என்ற அவல நிலை என்று தான் மாறும். எல்லாமே வியாபாரமான இன்றைய சமூக சூழலில் இன்றைய பெண்களை இந்த சிக்கலில் இருந்து எப்படி பாதுகாப்பது?
       மகளிர் அமைப்போ, பெண்கள் சமூகமோ என்று அதன் மீது மட்டும் இந்த சுமையை ஏற்றி வைத்துவிட எனக்கு விருப்பமில்லை. ஒரு பெண் இப்படிபட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவள் அதிலிருந்து தப்பிக்க என்ன வழி ?
       இதை ஒவ்வொரு பெண்ணுக்கும் சமூக நிறுவனமோ, அமைப்போ சொல்லித் தர முடியாது. கல்வி கற்கும் ஆசிரியரும், பெற்றோருமே சொல்லித் தர வேண்டும். ஏனென்றால் இன்றைய கலாசார சீரழிவில் இருந்து ஒவ்வொரு பெண்ணையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
       ஒரு பெண் இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக் கொண்டால், ஏமாற்றும் நபர் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும் என்றில்லை. பக்குவமாக யோசியுங்கள், நிர்வாணம் ஒன்றும் உங்கள் கற்பையோ, மானத்தையோ நிர்ணயிக்கவில்லை. எனவே அதை வைத்து ஏமாற்றுபவர் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் பயந்தால் உங்களை இன்னும் மென்மேலும் பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே துணிவுடன் செயல்பட்டு இது போல் மாட்டிக் கொள்ளும் பெண்களுக்கு வழிக்காட்டியாக இருங்கள். விரைவில் இப்படி செய்யும் மிருகங்கள் எல்லாம் புற்றீசல்களாக மறைந்துவிடுவர். 
    பெண்களே புறத்தால் அறியாமையை கலைந்துவிட்டீர்கள். அகத்தால் அறியாமையை எப்பொழுது கலைவீர்கள். பெண்களே உங்கள் அகம் அச்சம் தவிர்ப்பது எப்பொழுது?
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே