நண்பன் விஜய் ,சங்கரின் கூட்டணியில் ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து கொடுத்த ஒரு வெற்றிப்படம். இதன் அசலானப் பிரதி 3 இடியட்ஸை நான் பார்க்காததினால் இந்தப் படம் எனக்கு ஒரு புது அனுபவம்.
அது மட்டுமின்றி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யை ரொம்ப எதார்த்தமான நடிப்பில் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி. ஜீவாவின் சேட்டைகளை அதிகம் எதிர்ப்பார்த்து போன எனக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். அதேப் போல ஸ்ரீகாந்த் என்று தெரியாமலேயே படம் நெடுக நம்மிடையே அந்தக் கதாப்பாத்திரமாகவே உலவுகிறார் நடிகர். வெளியில் வந்தபிறகு தான் தெரிகிறது. இவர் ஸ்ரீகாந்த் என்று...
சத்யராஜ்ஜைப் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஏற்கனவே சிவாஜியிலும், எந்திரனிலும் சங்கரின் கூட்டணியில் இணைய வேண்டியது. மனிதர் இந்தப் படத்தில் சரியாக இணைந்துவிட்டார்.
இந்தக் கதை எல்லோருக்குமே பரிச்சயம் என்பதால் அதைப் பற்றி நான் எழுதுவது வீண். இருப்பினும் கதையின் சாரமான கல்விமுறையின் முட்டாள்த்தனத்தை இதில் சொல்லியிருக்கும் நயம் வியக்கத்தக்கது. இது ஹிந்தியின் தழுவல், ஹிந்தியில் சேட்டன் பகத்தின் 5 பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலின் தழுவல் என்பது நிறையப் பேர் அறிந்த ஒன்றே.
எப்படியிருப்பினும் இதன் நோக்கம் ஹிந்தியிலும் சரி, தமிழிலும் சரி நூறு சதவீகிதம் நிறைவேறியதாகவே தோன்றுகிறது.
இந்தப் படம் விஜய் மூலம் ஒரு சமூகத்தின் கல்வி முறையை விளக்குவதாக அமைந்திருக்கிறது. தமிழில் கல்விமுறையின் முட்டாள்தனத்தை இந்தளவு அழுத்தமாக எந்தப் படமும் சொல்லவில்லை என்றேத் தோன்றுகிறது. இதற்கு நடுவில் விஜய்யுடன் சேர்ந்து ஜீவாவும்,ஸ்ரீகாந்தும் இணைந்து சத்யராஜிற்கு தரும் தலைவலி. அவருடைய பெயரை வைரஸ் என்று பட்டப் பெயருடன் கூப்பிட்டு செய்யும் அழும்பு எல்லாம் கலாட்டா.
இதைத் தாண்டி மொத்தக் கதையையும், சத்யனின் மனப்பாட மூளைகளில் தான் ஏற்றி வைக்கிறார் இயக்குனர். சத்யனின நடிப்பை ஏற்கனவே பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்தப் படம் அவருக்கான சரியான் வெளிப்பாடு.
இலியானா விஜய்யின் ஜோடியாக வந்து சில நேரங்களில் குளிர்ச்சிப்படுத்துகிறார். சதய்ராஜிடம் தன் அண்ணனின் கடிதத்தைக் கொடுக்கையில் மட்டுமே அவருக்கு நிறைய நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இறுதிக் கட்டக் காட்சியில் விஜய்யுடன் இணைந்து கொஞ்சம் கலக்குகிறார்.
வைரஸ் சத்யராஜின் எப்படி நடத்தறதுன்னு நீ சொல்லு என்கிற கேள்விக்கு, விஜய்யின் அனுகுமுறைக் கைத்தட்டல். எல்லா மாணவர்களும் தலைவணங்கி ஏற்றுக் கொள்ளும் முறை. எல்லா ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு முறை.
மொத்தத்தில் இது ஒரு அருமையான காமெடிப் படம் என்று நிறையப் பேர் சொல்லி படத்திற்கு சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். இது சமூகத்தின் கல்விமுறையை அப்படியே அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு அருமையான கருத்துப்படம். கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சில இடங்களில் காமெடி என்று நிகழும் சம்பவங்கள் அருவருப்பாக இருப்பதை மறுக்க முடியவில்லை.வெற்றி வரும் துறையைத் தேர்ந்தெடுத்து அதன் பின்னே போவதைக் காட்டிலும் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து அதற்காக உழைத்தால் வெற்றி உன் பின்னே ஓடி வரும் என்ற கருத்தை இன்றைய மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களூக்கும் புரியும் வண்ணம் படம் சொல்கிறது.
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
சில இடங்களில் காமெடி என்று நிகழும் சம்பவங்கள் அருவருப்பாக இருப்பதை மறுக்க முடியவில்லை, என்று தமிழ்ராஜா எழுதியிருப்பது நிச்சயமான உண்மையே.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி
ReplyDelete