5.26.2012

என் காதலுக்கே புதுசு…


அது ஒன்றும் பேருந்து நிறுத்தமல்ல
பேருந்து நிலையம்
அன்று நாம் ஒவ்வொரு நகரும் பேருந்தில்
இருந்தும் நின்றிருக்கும் பேருந்துக்கு
மாறி மாறி அமர்ந்ததிலேயே நம்
காதல் பொழுது சென்றுக் கொண்டிருந்தது

சற்றே சலித்துக் கொண்ட நீ
போதும் இனி என்னால் முடியாது என்றாய்
எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள்
எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது
எல்லோரும் நம்மைப் பற்றி
என்ன நினைப்பார்கள்
என்றாய்
பார்க்கட்டுமே நம்மை மட்டும் தானா
பார்க்கிறார்கள், இப்படி எத்தனையோ
காதலை இவர்கள் கண்கள் பார்த்துக்
கொண்டு தான் இருக்கிறது
அதற்காகவெல்லாம் நாம் காதலிக்காமல்
இருக்க முடியுமா?
என்றேன்
இப்படி பொதுஇடத்தில் அலைவது
தான் காதலா?
என்றாய்
பின்னே தனி இடத்தில் இருவருக்கிடையே
நிகழ்வது வேறாயிற்றே
அதை யாரும் பார்க்கக் கூடாது
நம் காதலைத் தான் இவர்கள் பார்க்க
முடியும்
என்றதும்
உன் முகம் கோபத்தால் சிவந்தது
மோசம் என்றாய்
எது மோசம் உன்னைப் பொதுஇடத்தில்
சந்திப்பதா?
இல்லை தனியிடத்தில் இன்னும் சந்திக்க
வில்லையே என்பதனாலா?
என்றேன்
உம், அந்த ஆசை வேறு இருக்கிறதா?
திருடா?
என்றாய்
இது என்ன வம்பாயிருக்கிறதே
ஆசையில்லாமல் காதலிக்க முடியுமா?
இதோ இப்பொழுது கூட உன் அந்த
அழகிய கன்னத்தில் என்று சொல்லி
கைகளை அவள் கன்னத்தின் பக்கத்தில்
கொண்டு செல்ல, அவள் வெடுக்கென்று
தன் கையால் என் கையைப் பிடித்துத்
தள்ளி சே! யாராவது பார்க்கப் போகிறார்கள்
என்றாய்….
நான் சிரித்தேன்
என்னஎன்னவென்று இரு முறை கேட்டாய்?
இல்லை உன்னை நான் தொடவே இல்லை
அதற்குள் என்னை முதலில் தொட்டது
நீ தான்
என் கைகளைத் தட்டிவிட்டு யாராவது
பார்த்துவிடப் போகிறார்கள்
என்று வேறு சொல்கிறாய்
அப்படியென்றால் யாராவது பார்த்து
விடப் போகிறார்கள் என்பது தான்
உனக்கு பிரச்சினையாக இருக்கிறது
என்றதும்
சட்டென்று உன் முகம்
மாறிய நளினங்களை
என் கண்கள் ரசிக்காமல்
இல்லை.
உன் உதடுகள் பேச முடியாமல்
தவித்தது
உன் கண்கள் என்னை நேராக
சந்திக்க முடியாமல் தயங்கியது
உன் தலை நாணத்தால் கவிழ்ந்தது
இந்த பெண்களே இப்படித் தான்
எல்லா ஆசையையும் மனசுக்குள்ளேயே
வச்சிக்கிட்டு ஆசையே இல்லாத
மாதிரி நடிக்கிறது
என்றதும்
உன்னைஎன்று பொய் கோபத்துடன்
என்னை அடிக்க கையை ஓங்கினாய்
நான் தடுக்க நினைக்க
சுற்றும் பார்த்துவிட்டு ,எடுத்த கையை
நிறுத்திவிட்டு
போதுமென்று…!
செல்லமான கோபத்துடன்
உன் முகம் சிவக்க ஒரு
பார்வைப் பார்த்தாயே
அது என் பார்வைக்கு மட்டுமல்ல
என் காதலுக்கே புதுசு




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. கண்களும் கவி பாடுதே ...எனும் பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது . அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி

      Delete
  2. Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts