• 11.19.2012

  இரசித்த நூல்கள்:வெண்ணிற இரவுகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
  கனவுலகவாசியின் நினைவுகளிலிருந்து என்று புத்தகத்தை திறக்கையிலேயே ஆரம்பிக்கிறது வெண்ணிற இரவுகள். இந்த குறுநாவலைப் பற்றி பேராண்மை படத்தில் ஒரு இடத்தில் ஜெயம் ரவி சொல்வார். உடனே அந்த புத்தகத்தைத் தேடிப் பிடித்து வாங்கிவிட்டேன். இப்பொழுது படித்தும் விட்டேன். அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதலாம் என்று தொடங்குகையில் தான். எனக்கு முன் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதியவர்களின் விமர்சனத்தைப் படிக்கலாம் என்று தேடினேன். அது நீண்டு கொண்டே செல்கிறது.

  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத்தளத்தில் இந்த குறுநாவலைப் பற்றிய விமர்சனத்தைப் பார்க்க முடிந்தது. இந்த புத்தகத்தைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு முன் அதை எழுதியவர் பற்றி நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தஸ்தயேவ்ஸ்கி இவர் எனக்கு இரண்டு வருடத்திற்கு முன் தான் பழக்கமானார். ஆனால் நெருக்கமானது இந்த ஒரு மாதத்தில் தான். இவரைப் பற்றி நான் சொல்வதை விட எஸ்.ரா அவர்கள் சொன்ன கருத்தை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
  தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்.  பின் ஏன் தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க வேண்டும்.  அதற்கொரு விசேசமான காரணமிருக்கிறது.
         அது தஸ்தாயெவ்ஸ்கியை படிக்கும் போது நமது அந்தரங்கம் மிக நெருக்கமாக அவர் எழுத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது.  நமது மனதை திறந்து அதன் உள்ளே ரகசியங்கள் அவமானங்கள் என்று நாம் மூடிமூடி வைத்துள்ள அத்தனையும் மறுபரிசீலனை செய்வதற்காகவே அவரை வாசிக்க வேண்டியிருக்கிறது. நம்மில் பெரும்பான்மையினரின் பிரச்சனைகளே தஸ்தாயெவ்ஸ்கியின்  கதாபாத்திரங்களின் மனஇயல்பு. அதாவது பேசமுடியாத ஆனால் நிறைய பேச வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்களே அவரது முக்கிய கதாபாத்திரங்கள்.
  வெண்ணிற இரவுகள் ஒரு இளைஞனிடம் காதல் அறிமுகமான பொழுதே, அது அவனை விட்டு விலகும் ஒரு தீராத வலியைச் சொல்லும் குறுநாவல். ஒரு ஆண் ஒரு பெண்ணிற்காக எப்படி ஏங்குகிறான் என்பதை எந்த ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்தியிருப்பது தான் என்னை மிகவும் இது கவரக் காரணம். இரண்டு ஆண்கள், ஒரு இளம்பெண் மூன்றே முக்கிய கதாப்பாத்திரங்கள். ஒரு பகல் நான்கு இரவு கதை முடிந்துவிடுகிறது. ஒரு பெண்ணை முதல் நாள் இரவு சந்திக்கிறான். அவளிடம் தன்னைப் பற்றி சொல்லி, அவளைப் பற்றியும் தெரிந்துக் கொள்கிறான். இருவும் நான்கு இருகள் சந்திக்கிறார்கள்.அவள் தன் காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். இவனும் அவளுடைய காதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். நான்காவது இரவின் முடிவில் இருவரின் காதலுக்கான முடிவு சொல்லப்படுகிறது. இதுவே வெண்ணிற இரவுகள் என்று நான் சொன்னால் நான் இரக்கமற்றவன்.
    இதைப் படிக்கையில் ரஷ்யாவைப் பற்றிய ஒரு செய்தியைப் படிக்க நேர்ந்தது. கோடைக்காலத்தில் பனிப்பிரதேசத்தில் இரவு 10 மணி வரை சூரியன் இருக்குமாம். அது போல் சூரியன் விடியற்காலை 3 மணிக்கே உதித்துவிடுமாம். அதுப் போன்ற முழு இரவுகளில் வெளிச்சம் இருந்துக் கொண்டே இருக்குமாம். இரவுப் பொழுதை குறைந்த அளவு கொண்ட நாட்கள் அவை. இது ரஷ்யாவில் நிகழும் என்பது இந்த கதையைப் பற்றிய விமர்சனத்தில் படித்து தெரிந்துக் கொண்டேன். 


      மிட் சம்மர் என்று சொல்லக்கூடிய ஜீன்மாதத்தில் ரஷ்யாவில் இப்படியான நீண்ட பகல்கள் ஏற்படுவதுண்டு. இதை பீட்டர்ஸ்பெர்க் நகரில் விழாவாக கொண்டாடுகிறார்கள். தஸ்தாயெவ்ஸ்கி பீட்டர்ஸ்பெர்க்கில் வசித்தவர். அவரது இளமைபருவத்தில் வெண்ணிற இரவு கொண்டாட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தப் பெயர் அதன் காரணமாகக் கூட உருவாகியிருக்கலாம்.
          இது தஸ்தயேவ்ஸ்கியின் ஆரம்பகாலப் படைப்புகளில் ஒன்று. 1848 ஆம் ஆண்டு வெளியான குறுநாவல். நூற்றாண்டு கடந்தும் பலராலும் இன்றும் வாசிக்கப்பட்டு வரும் காதல் கதை. இதயத்தை உருக்கும் காதல் கதை வெண்ணிற இரவுகள்.
        ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணிடம் பேசும் பொழுது அவன் மனநிலை இன்று எப்படியிருக்குமோ அதை அப்படியே இந்த கதையில் வரும் கதாப்பாத்திரம் பிரதிபலிக்கிறது. அது போலவே ஒரு இளம்பெண்ணும் ஒரு ஆண் மகனுடன் பழக வேண்டும் என்று மனது துடித்தாலும், ஆனால் அது காதலாக மாறிவிடக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்.இதில் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்பதை இந்த கதையில் வரும் நாஸ்தென்கா மூலம் நமக்குப் புரிய வைக்கிறார். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வரிகள்

            உங்களை எனக்குத் தெரியும் என்பதால் தான் நாளைக்கு இங்கே வரும்படி அழைக்கிறேன் என்று சிரித்தவாறு பதிலளித்தாள் அவள். உங்களை நன்றாகத் தெரியும் எனக்கு. ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில் தான் வர வேண்டும்,நினைவிருக்கட்டும்(தயவு செய்து நீங்கள்,நான் சொல்லுகிறபடி நடந்து கொள்ள வேண்டும் – நீங்களே பாருங்கள்,எதையும் நான் மறைக்காமல் சொல்கிறேன்), நீங்கள் என் மீது காதல் கொள்வதில்லை என்ற நிபந்தனையின் பேரில் வர வேண்டும்.அப்படி எதுவும் நடைபெறக் கூடாது. தீர்மானமாகச் சொல்கிறேன். உங்களுடன் நட்பு கொள்வதற்குத் தயாராயிருக்கிறேன். இதோ இருக்கிறது என் நேசக் கரம்… ஆனால் என் மீது நீங்கள் காதல் கொள்ளக் கூடாதென்று வேண்டுகிறேன்.
         இந்த கதையில் வரும் நாஸ்தென்கா என்றப் பெண் தன்னிடம் பழக வரும் ஒரு ஆண் மகனிடம் சொல்வதாக இது அமைந்திருக்கிறது. பிறகு அதே பெண் இப்படியும் பேசுகிறாள். இதோ அந்த வரிகள்…
  ”இங்கே பாருங்கள்!” என்று அவள் ஆரம்பித்தாள்.”நீங்கள் என்மீது காதல் கொள்ளாதிருப்பது குறித்து எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.பெண்ணின் இதயம் எப்படிப்பட்ட புதிர் என்பதை இதிலிருந்து தெரிந்துக் கொள்ளுங்கள்! ஐயா, பிடிவாதக்காரரே, எப்படியும் நீங்கள் என்னுடைய ஒளிவுமறைவற்ற வெகுளித்தனமான பேச்சுக்காக என்னைப் பாராட்டியே ஆக வேண்டும்.எதையும் ஒளிக்காமல் யாவற்றையும் நான் உங்களிடம் சொல்லி வருகிறேன்.எவ்வளவு தான் அசட்டுத்தனமாக இருப்பினும் என் தலையில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணத்தையும் உங்களுக்கு தெரிவித்து வருகிறேன். “
            ஒரு பெண்ணின் மனநிலையை எந்த ஒளிவு மறைவுமின்றி அப்படியே வெளிப்படுத்தி நம்மை நாமே சுயபரிசோதனை செய்துக் கொள்ளும்படி செய்கிறார் தஸ்யேவ்ஸ்கி. இது பெண்ணிற்கும் மட்டுமின்றி ஆணுக்கும் நிறைய இடங்களில் வெளிப்படையாக தெரிகிறது.
            இந்தளவு ஒரு நபரால் எழுத முடியுமா…? என்று நிறைய இடங்களில் நம்மை நாமே அந்த கதாப்பாத்திரங்கள் மேல் பொருத்திப் பார்த்து வியக்க முடிகிறது. முடிந்தால் நீங்களூம் படித்து வியக்கலாம்.

        வெண்ணிற இரவுகள் : ஃபியோதர் தஸ்யேவ்ஸ்கி
              தமிழாக்கம்    :  ரா. கிருஷ்ணையா
                 பதிப்பகம்  :     நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிமிடெட்
                  விலை   :   40 ரூ

  நட்புடன் 
  தமிழ்ராஜா