• 11.06.2012

  இரசித்த நூல்கள்: காதலில் துயரம் - கதே       
    நீண்ட நாட்களாக நான் படித்து ரசித்த புத்தகங்களைப் பற்றி பதிவிட வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. ஆனால் அதற்கான சரியான நேரம் எனக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் நான் படித்த கதேயின் காதலின் துயரம் என்னை அதற்கான நேரத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே தான் அதற்கு ”ரசித்த நூல்கள்” என்ற தலைப்பிட்டு படித்த புத்தகங்கள் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன். அதில் முதலில் நான் எழுதப் போவது கதேயின்” காதலின் துயரம்” தமிழாக்கம் எம். கோபாலகிருஷ்ணன்.

  மனித குல வரலாற்றின் மகத்தான காதல் காவியங்கள் அனைத்துமே கண்ணீர் உவர்ப்பிலும் துயரத்தின் கசப்பிலுமே எழுதப்பட்டவை. கலைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேதைமையுடன் திகழ்ந்த கதேயின் உலகப் புகழ்பெற்ற இந்த ஜெர்மானிய நாவல் அப்படியானது தான். இது அந்தப் புத்தகத்தைப் பற்றி அதை தமிழாக்கம் செய்த எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் விளக்கம்.
  இந்த விளக்கத்தைப் படித்தவுடனேயே கதைக்குள் புக நினைத்த எனக்கு மிகவும் அதிர்ச்சி. அது சாதாரண கதை வடிவில் இல்லாமல் வேறு ஒரு வடிவில் இருந்தது. வெர்தர் என்ற ஒருவன் தன் நண்பன் வில்ஹெம்க்கு எழுதும் கடிதங்களே பெருவாரியான கதை. வில்ஹெம் என்ற அந்த நண்பனின் பார்வையை கதையில் நாம் எங்கும் காண முடியாது. ஏனெனில் வெர்தர் அனுப்பும் கடிதங்கள் மட்டுமே நமது பார்வைக்கு தரப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கடிதத்தையும் வைத்து நாம் நண்பன் வில்ஹெம் என்ன எழுதியிருப்பான் என்று யூகித்துக் கொள்ள வேண்டும். அந்த கடிதங்களே வெர்தரின் காதலை சொல்லும் காவியமாக நம் கண் முன் விரிகிறது. லோதே என்ற பெண்ணை வெர்தர் காதலிக்கிறான். ஆனால் அப்பெண்ணோ ஆல்பர்ட் என்ற ஒருவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டவள். தன்னுடைய காதல் நிறைவேறாது என்றுத் தெரிந்தும் அவன் மனதில் வளர்த்துக் கொள்ளும் பேராவலை துடிப்பை வெர்தரின் கடிதங்கள் உயிர்ப்புடன் நமக்குச் சொல்கிறது.
         இப்படியொரு வாசிப்பு அனுபவத்தை நான் இது வரை பெற்றதில்லை. காரணம் இதன் வடிவம் தான். 1774 ஆம் ஆண்டு தோன்றிய இந்தக் குறுநாவல் ஐரோப்பிய இளைஞர்கள் மனதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.
  ஒரு மனிதனின் உள்ளரங்கங்களை நமக்கு வெர்தர் மூலம் மிக அழகாக விளக்குகிறார் கதே. இதன் தமிழாக்கமே இந்த தாக்கம் என்றால், இது உருவான மொழியில் படித்தவர்களுக்கு இது அற்புதமான உணர்வைத் தந்திருக்கும்.
  காதலித்தவர்கள் மனதுக்குள் எவ்வளவு கற்பனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக சில இடங்களில் சொல்லும் இடங்கள் நாம் நம்மை சுயப்பரிசோதனை செய்யும் இடங்கள். மேலும் ஒரு பெண்ணை ஒரு ஆண் எவ்வளவு விரும்புகிறான், என்பதை ஒவ்வொரு வரியிலும் கடிதம் மூலமே நமக்கு விளக்கியிருப்பது படிப்பதற்கு புது அனுபவம்.
  அய்யோ என்னுடைய விரல்கள் தற்செயலாய் அவளது விரல்களைத் தீண்டிவிடுகிற போதும் மேஜைக்கடியில் எங்களுடைய இருவரது பாதங்களும் உரசிக் கொள்ளும் பொழுதும் எனது நாளங்களில் ரத்தம் எப்படி கொப்புளிக்கிறது! ஜுவாலையைத் தீண்டியது போல ஒரு கணம் பின்னிழுத்துக் கொள்கிறேன்.அதே கணம் ஏதோவொரு ரகசிய ஈர்ப்பு என் பாதங்களை முன்னகர்த்த சொல்கிறது.என்னுடைய புலன்களனைத்தும் மிதக்கினறன.அதே சமயம், இவ்வாறாக சின்னச் சின்ன தீண்டல்கள் எனக்குள் விளைவிக்கின்ற தவிப்புகள் எவற்றையும் அவளது களங்கமற்ற தூய இதயம் சிறிதும் உணரவில்லை.இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அவள் கைகளை என் கைகளின் மீது வைத்துக் கொள்ளும் போதும் பேச்சு சுவாரசியத்தில் அவளது மூச்சு என் உதடுகளில் உரசும்படி அவள் என்னை நெருங்கி வரும்போதும் மின்னல்தாக்கி தரையில் விழுந்து அமிழ்ந்துவிடுவதுபோல் உணர்வேன்.வில்ஹெம்,ஒருபோதும் நான் அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேறெதையும் செய்யத் துணிந்ததில்லை. என் மனம் அத்தனை அழுக்காகிவிடவில்லை.அது பலவீனமாகவே மிக பலவீனமாகவே இருக்கிறது.அவ்வாறு நினைப்பதே கூட ஒழுக்கக் கேடில்லையா?
  இது கதையில் இருந்து சில வரிகள். ஒரு ஆணின் மனதை இந்தளவு ஆழமாக படம் பிடித்துக் காட்டிய வரிகளை நான் எங்கும் கண்டதில்லை.
  காதலைப் பற்றி ஒரு புதுவிதமான எழுத்துக்களை விரும்புகிறவர்கள் இதை படிக்கலாம். ஒரு மனிதனின் அச்சு அசலான வாழ்க்கையை கடந்து வந்த உணர்வு இறுதியில் ஏற்படுகிறது.
  இன்னொரு புதிய நூவலுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

  நட்புடன் 
  தமிழ்ராஜா