• 11.05.2012

  ராமரும்,நபிகளும் : மதநல்லிணக்கம்    சமீபத்தில் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள் பேசியதையே இங்கு உங்களிடம் நான் பகிர்ந்துக் கொள்கிறேன்
         மதம், மனங்களிலுள்ள அறியாமையை பக்தி என்னும் ஒளியால் அகற்றவே உலகில் பல மதங்கள் தோன்றியிருக்கின்றது. அதைப் பற்றி கடந்த சனிக்கிழமையன்று சுகிசிவம் அவர்கள் பேசுகையில் அருமையான ஒரு தகவலை சொன்னார்.

         ராமருக்கு ஒரு முறை குகன் அன்போடு காய்ந்தமீனையும், தேனையும் உண்ணக் கொடுத்தார். அதை ராமர் முழுமனதோடு ஏற்றுக் கொண்டார். இங்கே கொடுக்கும் பொருள் எதுவாக இருந்தாலும், நாம் அதை அன்போடு ஏற்பதால் கொடுத்தவரின் மனம் திருப்தியடையும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
         அதேப் போல நபிகளுக்கு ஒரு முறை திராட்சைப் பழங்களை உண்ணக் கொண்டு வந்தார் ஒரு பெண்மணி. அது மட்டுமின்றி நீங்கள் மட்டுமே அதை உண்ண வேண்டும் என்ற அன்புக் கட்டளையும் வைத்தார். நபிகளோ எந்த ஒன்றையும் பகிர்ந்தளித்து உண்பவர். இப்பொழுது அந்தப் பெண்மணி சொன்னதை எப்படி செய்யப் போகிறார் என்று கூடி இருந்த அனைவருக்கும் ஆவல். நபிகள் முதலில் ஒரு திராட்சையை எடுத்து ருசித்தார். பிறகு எல்லாவற்றையும் அவரே உண்டு முடித்தார். பிறகு அந்த பெண்மணி திருப்தியோடு சென்றவுடன். நபிகள் அவர்களிடம் எதையும் பிறருக்குக் கொடுக்காமல் உண்ண மாட்டீர்களே என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில். திராட்சை நன்றாக இருந்திருந்தால் நான் உங்களுக்கெல்லாம் கொடுத்திருப்பேன். ஆனால் அந்த திராட்சை சற்று புளித்தது. அதை உங்களுக்குக் கொடுத்திருந்தால் யாரெனும் புளிக்கிறது என்று சொல்லி அந்த பெண்மணி காதில் கேட்டிருந்தால் அவர்கள் மனம் புண்படும். எனவே தான் நானே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டேன் என்றார். அந்த பெண்மணி மனம் புண்படக் கூடாது என்ற எண்ணம் கருதி அத்தனையும் நபிகள் அவரே எடுத்துக் கொண்டதும் ஒரேக் கருத்தையே சொல்கிறது.
         ராமரும், நபிகளும் அடுத்தவர் மனம் புண்படாமல் நடந்துக் கொள்ள வேண்டுமென்பதில் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள். உண்மையில் நாம் இதைப் பின்பற்றுகிறோமா…?
         ஏன் நம்மால் அது இயலவில்லை. ராமரோ,நபிகளோ அவர்களின் வாழ்க்கை சொல்லும் பாடம் நமக்குத் தேவையில்லை. மதம் மட்டும் தான் நமக்குத் தேவை.
         நான் முன்பு குடியிருந்த வீட்டில் எங்களுக்கு அருகில் இரண்டு இஸ்லாமியக் குடுப்பத்தினர் குடியிருந்தார்கள். நாங்கள் மட்டுமின்றி அந்த குடியிருப்பு பகுதியில் இருக்கும் அனைவருமே ஒரு குடும்பம் போல் தான் அங்கே வாழ்ந்தோம். அந்த வேளையில் எனக்கு முகமது நபிகள் அவர்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆவல் எழுந்தது. அப்பொழுது எதிரில் குடியிருந்தவர்களிடம் ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். அருமையான புத்தகம். அதற்கு முன்னர் அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில். நபிகள் அவர்கள் காலத்தில் அவரை எவ்வளவு அவமானப்படுத்தினார்கள் என்று ஒரு சில நிகழ்வுகளை சொன்னார். அதாவது உருவத்தை வழிபடுபவர்கள் அவரிடம் எவ்வளவு மரியாதை குறைவாக நடந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனக்குச் சொன்னார். நானும் அந்தப் புத்தகத்தில் இருந்துத் தெரிந்துக் கொண்டேன். ஆனால் அவர் மேலும் சொன்னப் போது, அப்படி கொடுமைப்படுத்தியவர்கள் உங்களவர்கள் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
         அதாவது நபிகள் காலத்தில் உருவத்தை வழிப்பட்ட இனத்தவர்களை இந்துக்கள் என்றளவில் அவர் புரிந்துக் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவர்களுக்கு உணர்த்த முயன்றுத் தோற்றேன். இது எவ்வளவுப் பெரிய அறியாமை. இந்த புரிதலின்மை காரணமாகத் தான் சமூகத்தில் நிறைய பிரச்சினைகள் நிகழ்கிறது. அவர்களைப் போல் தான் இந்துமதத்தையும் தவறான புரிதலோடு பார்க்கிறவர்கள் பெரும்பான்மையானோர் இங்கு இருக்கிறார்கள்.
         எந்த சமயமானாலும், அந்த சமயத்தைப் பற்றிய சரியானப் புரிதலில்லாமல் இருப்பது எத்தனை பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது யாருமே அறியாதது. நம் சமூகத்தில் மதத்தின் பெயரால் நிகழும் வன்முறைக்கு முக்கிய காரணம் பிற மதங்களைப் பற்றிய புரிதலின்மை என்று எண்ணியிருந்த எனக்கு அன்று தான் உண்மை புரிந்தது. தங்களின் மதத்தின் மீதே சரியான புரிதல் இல்லாதவர்களால் தான் மதத்தின் பெயரால் பல வன்முறையே நிகழ்கிறது.
         இது எதனால் நிகழ்கிறது. கல்வியின்மை தான் காரணம். இதற்கும் கல்வியின்மைக்கும் என்னக் சம்மந்தம் என்கிறீர்களா…? ஆம் மதத்தைப் பற்றிய சரியான கல்வியை நம் சமூகம் தரவில்லை. சிறு வயது முதலே மாணவர்களுக்கு எல்லா சமயங்களைப் பற்றிய கல்வியையும் தருவதே இதற்கு சிறந்த வழி. இது சற்றுக் கடினமான ஒரு விஷயமென்றாலும், இது எதிர்காலத்தில் நிகழப் போகும் பல வன்முறைகளைத் தடுக்கும் என்பதால் இதை எப்படியெனும் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.
         ஏனெனில் எனக்கு என் அம்மா அப்பா தான் மதத்தைப் போதித்தது. பிறகு தொலைக்காட்சி. பிறகு தான் நானே தேடித் தெரிந்துக் கொண்டது. இது சரியான விழியே இல்லை. பெரும்பான்மையானோர் இப்படித் தான் மதத்தைப் புரிந்துக் கொள்கின்றனர். இது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே கல்வி மூலம் மதங்களைப் பற்றிய சரியானப் பார்வையை உருவாக்குவதே சிறந்த வழி.

  நட்புடன் 
  தமிழ்ராஜா