• 3.08.2013

  மகளிர் தினம் ஒரு வேண்டுகோள்

  இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு கலைஞர்கள், தலைவர்கள் என்று அனைத்து துறையில் இருப்பவர்களும் தங்களின் வாழ்த்தை பதிவு செய்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது போன்ற தின்ங்களினால் மகளிரின் தரம் உயர்கின்றதா…?

  இப்படிப்பட்ட தினங்களெல்லாம் உண்மையில் சரியான புரிதலின்றி தான் உருவாகிறது என்பது என்னுடைய கருத்து என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். மழலையர் தினம், குழந்தைகள் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம். காதலர் தினம் வேண்டாம் இந்த போலிக் கலாச்சாரம். தயவு செய்து இந்தப் பதிவில் நேர்மறையான கருத்துக்களை மட்டும் எதிர்ப்பார்ப்பவர்கள் இதைப் படிக்க வேண்டாம். ஏனெனில் சில உண்மைகள் எதிர்மறையாகவும் இருப்பதால் அதை இந்த பதிவின் மூலம் சொல்ல விழைகிறேன்.
        எப்படி இந்த ஆண்டு பொங்கலின் பொழுது நம் சக மனிதர்களான தஞ்சை விவசாயிகளின் வலிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் பொங்கல் தின வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டிருந்தோமோ…! அதேப் போல் தான் இந்த மகளிர் தினத்தையும் நான் பார்க்கிறேன். பொதுவாக தமிழர்களிடம் பாரம்பரியமாக ஒரு வழக்கம் இருக்கிறது. நம் வீட்டில் எதெனும் விழா நிகழப்போகிறது என்றிருக்கும் பொழுது, நம் அண்டை வீட்டில் தற்செயலாக ஒரு துக்கச் சம்பவமோ, அசம்பாவிதமோ நிகழ்ந்தால் நம்முடைய கொண்டாட்டங்களை நாம் துறப்பது இயல்பு. அப்படித் துறந்துவிட்டு உறவோ, நட்போ அவரின் துக்கத்தை நாம் பகிர்ந்துக் கொள்வது பாரம்பரியமாக நம்மிடையே வழக்கத்தில் இருக்கிறது. இருப்பினும் அந்த குணம் இன்று மரூவி வருவது உண்மையில் மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று தான். அதன் பிரதிபலிப்பாகவே நான் இந்த தினங்களையும், அதற்கு போலியாக வெளிப்படுத்தும் வாழ்த்தையும் பார்க்கிறேன்.
             இந்த பொங்கலுக்கு தஞ்சாவூரின் சில கிராமங்களுக்கு செல்கையில் தான் நகர்ப்புறங்களில் மக்கள் எவ்வளவு போலியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. தொலைக்காட்சி முன் அமர்ந்துக் கொண்டும், கடைகளில் சில பலகாரங்களை வாங்கி படையலிட்டபடியும் தான் விழாக்களை நாம் நகர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பதை எத்தனைப் பேர் உணர்வார்கள். இன்னும் சில தினங்களில் நம்மை அடக்கி ஆள்பவர்கள்(வெளிநாட்டு நிறுவனங்கள் ( நம் முதலாளிகள்) நம் கலாசாரத் தினங்களையும் மறக்கடிக்கச் செய்துவிடுவார்கள்.
        மகளிர் தினத்திற்கு ஏன் எங்கெங்கோ செல்கிறீர்களே என்று கேட்கத் தோன்றும் படிப்பவர்களுக்கு, சில மருந்துகளை சில பொருளோடு கால நேரம் பார்த்துத் தான் தர வேண்டும் என்ற விதி இருக்கிறது. அப்படித் தான் நான் இங்கே முன் வைக்கப் போகும் உண்மைகளுக்கு முன் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று இந்த விவசாயத்தைப் பற்றி நம்முடைய புரிதலின்மை. ஏனெனில் விவசாயத்திற்கும் பெண்ணிற்கும் நெருங்கிய அல்ல, இரண்டும் ஒன்றே என்று தான் சொல்ல வேண்டும்.
        எனவே தான் நம் விவசாயத்தை ஒட்டிய தெய்வங்களெல்லாம் பெண் கடவுளாகவே இருக்கிறார்கள். விவசாயப் பூமி என்று எங்கு நீங்கள் சென்றாலும் நீர்ப்பாசனத்திற்கான ஏரிக் கரை ஓட்டி ஒரு அம்மன் தான் இருக்கிறாள். அதுவும் அங்கு விவசாயத்திற்கு மிகவும் உதவும் பாம்புகளே மையமாக வைத்து வணங்கப்படுகிறது. இந்தக் கலாச்சாரம் பெண் மேல் உள்ள ஆழ்ந்த புரிதலைத் தான் காட்டுகிறது. ஒரு சில நேரங்களில் பெண் மீது இழைக்கப்படும் வன்முறைச் செயல்களால் ஊரில் எந்த திருவிழாவும் நிகழாமல் வருடக் கணக்கில் மழையில்லாமல் மக்கள் அவதியுற்ற சம்பவங்களும் நம் கிராமங்களில் நிகழ்ந்திருக்கிறது. ஒரு பெண் மீது அநீதி இழைக்கப்படுமானால் அந்த கிராமமே பல ஆண்டுகள் கொண்டாட்டம் இன்றி வாழ்ந்த சரித்தரமெல்லாம் இந்த தமிழகத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது.
        ஏன்..?இன்றும் நம்மிடையேயே அந்தப் பழக்கம் இருக்கிறதேநம் உறவுகளில் ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டால் மூன்று ஆண்டுகள் எந்த விழாக்களும் நாம் கொண்டாடுவதில்லை. ஆனால் சமீபகாலமாக நாம் மகிழ்ச்சியையும் சரி, துக்கத்தையும் சரி வெளிப்படுத்த முடியாமல் வெறும் எந்திரங்களாகத் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று சமூகத்தின் மேல் ஆழ்ந்த புரிதல் உள்ளவர்கள் உணர்வார்கள்.
          இல்லையேல் சமீப காலமாக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூரங்களை வெறும் செய்தியாக மட்டும் பார்க்கும் பாங்கு நம்மிடையே வந்திருக்காதேமகளிர் தின வாழ்த்துக்கள் என்று இன்றைய நாளில் நாம் வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துக் கொள்ள மனம் வந்திருக்காது. நான் முதலிலே சொன்னது போல் எதிர் மறைச் செய்தியாக இதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றால் இத்துடன் நீங்கள் விலகிக் கொள்ளலாம்.
        ஏனெனில் பெண்களை மதிக்கும் சமூகத்தை பெண்களே உருவாக்க முயற்சிப்பதில்லை. இல்லையேல் சமீப காலமாக பெண்கள் மீது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் வன்முறைகளை கண்டுக் கொள்ளாமல் இருப்பார்களா…? ஆம் ஊடகங்கள் மூலம் வெளிவந்த செய்திகள் மட்டுமல்ல, ஊடகங்கள் கண்டுக் கொள்ளாத சில கொடூரச் செயல்களும் அப்பாவிப் பெண்கள் மீது சமீபக் காலங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
        தர்புரியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜாதியின் பெயரால் நிகழ்ந்த வன்முறைச் செயல்களை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நிகழ்விற்கு பின் தமிழகத்தில் மட்டும் ஜாதியின் பெயரால் பல படுகொலைகள் நிக்ழந்த வண்ணமிருப்பதை யாரெனும் அறிவீர்களா…?
          அதுவும் குறிப்பிட்டு பெண்கள் மீது மட்டும் வன்முறை செயல்கள் ஜாதியின் பெயரால் நிகழ்வது,எத்தனை கொடுமையான விஷயம். அதற்கு சில அரசாங்க அதிகாரிகளும் உடந்தை என்பதை கேள்விப்படும் பொழுது உண்மையில் மனம் வெட்கித் தலைகவிழ்கிறது. கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இது எப்பொழுதும் நிகழ்வது தானே என்று சாதாரணமாக இருந்துவிடலாமா…?
    பொன்னேரி அருகே ஒரு சிறுமியை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியிருக்கிறான் ஒரு 52 வயது கொடூரன். சிதம்பரம் அருகே ஒரு பெண் புகைப்பட ஸ்டுடியோவில் பணிபுரிந்தவரால் நாசமாக்கப் பட்டிருக்கிறாள். அம்பாசமுத்திரம் 13 வயது சிறுமி ஒரு 50 வயது கொடூரனால் சீரழிக்கப்பட்டிருக்கிறாள். இப்படி நிறையவே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இது அத்தனையிலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் என்று சொல்லும் தலித் இனப் பெண்கள்.
        ஒரு பக்கம் அதிகாரம், பதவி, பணம் என்ற காரணிகள் கொண்டு பெண்கள் மீது அநியாயங்கள் நிகழ, இன்னொரு பக்கம் இப்படி ஜாதியின் பெயராலும் பெண்கள் மீது இழைக்கப்படும் இந்த குற்றங்களை தடுக்க என்ன வழி…? இதற்கு நமக்கு வழித் தெரியவில்லை என்றாலும், எதிர்க்கவும் துணிவில்லையென்றாலும் நமது வருத்தத்தையாவது இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தலாமில்லையா…?
        தமிழகத்தில் மட்டுமல்ல, இந்த உலகத்தில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் செயல்களுக்கு தீர்வு வரும் வரை இந்த மகளிர் தினமெல்லாம் இல்லை. இதை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்ற குறைந்த பட்ச எதிர்ப்பையாவது பெண்கள் காட்டக் கூடாதா…?
        தமிழ்ப் பெண்கள் இதை உலக பெண்களுக்கெல்லாம் முன்னோடியாக செய்வீர்கள் என்றால், பெண்கள் மீதான வன்முறைச் செயல்களுக்கெல்லாம் நிச்சயம் ஒரு தீர்வுக்கான விதை விழுந்திருக்கிறது என்ற எண்ணமாவது பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கு ஏற்படும். இந்த குறைந்த பட்ச செயலையாவது சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு செய்யுங்கள். அது வரை போலியான முகமலர்ச்சிகள் வேண்டாமே… உண்மையான மகளிர் தினம் நிச்சயம் விரைவில் மலரும்.
   

  நட்புடன் 
  தமிழ்ராஜா