• 10.05.2007

  மழலை


  உன்னை முதன்முதலாய் தொட்டுத்

  தூக்கையில் என்னுயிர்
  மறுமுறை ஜணிக்கின்ற
  வலியை உணர்ந்தேன் கண்ணே !
  உன்னை நெஞ்சோடு அணைக்கையில்
  தான் வலியே சுகமாய்
  நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே!
  அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான்
  உள்ளம் அழகழகாய் மாறுதே!

  நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான்
  உயிரும் அதிர்வது போல் உள்ளதே!
  படபடவென்று உன் கைகள் அசையத்தான்
  கண்களில் உற்சாகம் பொங்குதே!
  சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான்
  பூமியின் போக்கே மாறுதே!
  மடிமீது நீ தவழ்ந்திடத்தான்
  மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே!
  எப்பொழுது உன் மழலை மொழி
  கேட்பேன் என்னுயிர் துடிக்குதே!
  என் ஒரு விரலும் நீ கடித்திடத்தான்
  நரம்பினுள் அமிர்தம் பாயுதே!
  சிலுசிலுவேன்று நீ நனைத்திடத்தான்
  என்னாடையும் பல முறை ஏங்குதே!
  சிணுங்காமல் உன்னைக் கொஞ்சிடத்தான்
  என் ஒவ்வொரு அசைவும் முயலுதே!