• 10.13.2011

  நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் மட்டும் போதுமா?
  சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு எங்கேயும் எப்பொழுதும் மணிமேகலை. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு நன்குப் புரியும் நான் சொல்ல வருகிற கருத்து. தன்னைக் காதலிக்கும் ஒருவனுக்கு மணிமேகலையாக வரும் அஞ்சலி, என்னென்ன தேர்வுகள் வைக்கிறாள் என்பதை இந்தக் கதையில் அழகாக சொல்லியிருக்கிறார்கள். தேர்வுகள் என்பதைவிட தன்னைக் காதலிப்பதனால் என்னென்ன பிரச்சினையை காதலனான கதிரேசன்(ஜெய்) சந்திக்க வேண்டும் என்பதை இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.
  இந்த கதாப்பாத்திரம் உண்மையில் இன்றைய நிறையப் பெண்களின் கதாப்பத்திரமாகவே தோன்றுகிறது. காதலிப்பவனின் சம்பளப் பணத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி துணிக்கடையில் துணிகள் எடுத்து, காபி ஷாப்பில் காபி குடித்துவிட்டு, இறுதியில் வாங்கிய அந்த துணியை அவனிடமே கொடுத்து, இதைப் போட்டுக் கொண்டு நாளை ஒரு நபரை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டும் என்று சொல்வது. தான் வேலைச் செய்யும் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அவனுக்கு ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வது, உடல் தானம் செய்யச் சொல்வது. இப்படி நிறைய அவனை செய்யச் சொல்கிறாள் மணிமேகலை.

   

  கேள்விகளற்ற பயணம்
    பெண்களின் திட்டமிடுதலின் அவசியத்தை இந்தப் படத்தில் சொல்லியிருந்தாலும், உணர்வுகள் சார்ந்த விசயத்தில் திட்டமிடுதலின் புத்திசாலித்தனம், அறிவீனமாகவே படுகிறது.
  மணிமேகலை சொல்லிற்கு எந்த இடத்திலும் அவளுடைய காதலன் கதிரேசன்(ஜெய்) எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கிற மாதிரியே இல்லை.தான் காதலிக்கும் ஒருவனுக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யும் காதலியாக வித்தியாசப்படுகிறாள் மணிமேகலை. இப்படி நிறையப் பரிசோதனைகள் செய்த பின் தான் இன்றைய பெண்கள் காதலிக்க வேண்டியிருக்கிறது என்ற நிலை இந்த சமூகத்தில் நிலவுவதாகவே இந்த காட்சிகள் சொல்கிறது. உடல் தானம் செய்யச் சொல்லி அவனை வற்புறுத்தும் இடத்தில், ஒரு வேளை கதிரேசன் உடல் தானம் செய்யவில்லையென்றால் அவளுடைய காதல் என்னவாகியிருக்கும். ஏனெனில் இதில் ஒரு பெண் ஆதிக்கம் செலுத்துவதுப் போல் தான் காட்டப்படுகிறது. ஆம் மணிமேகலைச் சொல்வதற்கெல்லாம் கதிரேசன் தலையாட்டுகிறான், அவள் சொல்வதையெல்லாம் செய்கிறான். இந்த காட்சிகளில் எல்லாம் மணிமேகலையின் தனிப்பட்ட ஆதிக்கம் மட்டுமே தெரிகிறது, உண்மையில் காதல் தெரியவில்லை. உறவுகளில் ஆதிக்கம் என்று வரும் பொழுது அது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி அந்த உறவையே கெடுத்துவிடும். இன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் உறவுகளில் அன்பை வெளிப்படுத்துவதில் போட்டியில்லை, ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தான் போட்டி இருக்கிறது. இந்தப் படத்தில் காதலில் இது வரை ஒரு ஆண் ஒரு பெண்ணை ஆதிக்கம் செய்து வந்ததுப் போல் ஒரு பெண் ஒரு ஆணை ஆதிக்கம் செலுத்துகிறாள் அவ்வளவே... காதலன் நீங்க, வாங்க போங்க என்று அழைக்கிறான், காதலி நீ, வா,போ என்று அழைக்கிறாள். ஆதிக்கம் தான் மாறியிருக்கிறதே ஒழிய இருவருக்கும் இடையில் ஒரு நல்ல உறவுக்கான காரணிகள் இருப்பது போல் தெரியவில்லை. இந்த படம் நமக்குச் சொல்வது கொஞ்சம் தான். சொல்லாதது விட்டது நிறைய... இந்தப் படம் போல் தான் இன்றைய சமூகம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொரு படமும் சமூகத்தின் ஒரு பிரதிபலிப்பே...
  ஆதிக்கத்தால் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எந்த நல்ல உறவும் நிலைக்கப்போவதில்லை. இன்றைய சமூகத்தில் திருமண உறவுகள் சீக்கிரம் கோர்ட் வாசல் ஏறுவதற்கு காரணமும் இந்த ஆதிக்கப் போட்டி மனப்பான்மையே...  ஒரு சமூகம் வளர வேண்டுமெனில் அந்த சமூகத்தில் உள்ள ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் நல்ல சிந்தனைத் திறனுடன் இருப்பது அவசியம். 

  அடக்கி ஆளுதல்,அடங்கிப் போதல்,இந்த இரு செயல்களுக்குள்ளேயே ஆண், பெண்ணின் வாழ்க்கை இன்று வரை சிக்கித் தவிக்கிறது. இன்றைய சூழலில் பெண்கள் ஆதிக்கத்தை ஆண்களிடமிருந்து எடுத்துக் கொண்டது போல் ஆண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை பெண்களிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள் என்று தான் சொல்ல முடியும். இந்த இரண்டுமே ஆண் பெண்ணிற்கான உறவில் மீண்டும் ஒரு மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்திவிடும். அடக்குவது,அடங்குவது இந்த இரண்டையும் கைவிட்டு, இருவரும் நட்பினால் உறவைப் பலப்படுத்த வேண்டிய காலகட்டம் இது.
  ஒரு நல்ல சமுதாயம் உருவாக வேண்டுமெனில் அந்த சமூகத்தின் அகவாழ்க்கை(காதல்) செம்மையாக இருக்க வேண்டும்.

  இன்றைய பெண்களுக்கு நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறியும், திமிர்ந்த ஞானச் செருக்கும்  போதாது, ஆதிக்கமற்ற நல்ல நட்பிற்கான தேடலும் தேவை. இது ஆணிற்கும் சேர்த்தே... அப்பொழுது தான் இருபாலரும் சேர்ந்து ஒரு நல்ல ஆரோக்யமான சமூகத்தை உருவாக்க முடியும்.