• 11.11.2011

  ஏழாம் அறிவு திரைவிமர்சனம்: ரசனைக்கு எட்டாத அறிவு  உதயநிதி ஸ்டாலின் ,ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா,ரவி.கே.சந்திரன்,ஹாரிஸ் ஜெயராஜ், பீட்ட்ர் ஹெயின், ஆண்டனி என்று மிகப் பிரம்மாண்டமான கூட்டணியில் ஒரு படைப்பு. ஆயுதப் பூஜையில் இருந்தே ஏழாம் அறிவிற்கான பரபரப்பை கூட்டிவிட்டது மீடியாக்கள். தமிழக மக்களின்றி உலக தமிழர்கள் அனைவரிடமும் ஒரு எதிர்ப்பார்ப்பை கிளப்பிவிட்டது இந்த மீடியாக்கள்
  உலக ரசிகர்களின் அத்தனை எதிர்ப்பார்ப்பையும் இயக்குனர் படத்தின் 15 நிமிட நேரத்தில் பூர்த்தி செய்துவிடுகிறார். பின்பு படத்தின் அழையா விருந்தாளியாகவே நாம் அமர்ந்திருக்க வேண்டியிருப்பது உண்மையில் வருத்தம். ஆம் படம் போதி தர்மருக்கான ஒரு படம். அவரைப் பற்றி தமிழர்கள் அறிந்து கொள்ள இந்த படம் ஒரு தூண்டுகோள். மற்றபடி இங்கே நான் கதையைப் பற்றி சொல்ல ஒன்றுமே இல்லை.
       ஏற்கனவே ஈ,தசாவதாரம் என்று தமிழுக்கு ஓரளவு அறிமுகமான கதை தான். இருப்பினும் இதில் சீனத் தேசத்திற்கு ஒரு தமிழர் சென்று அங்குள்ள மக்களுக்கு தற்காப்பு கலையையும்,வைத்தியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இன்று சீனாவில் எங்கு திரும்பினாலும் அவருடைய சிலையைப் பார்க்கலாம்.சீனா மட்டுமின்றி தாய்லாந்து,ஜப்பான்,வேட்னாம் வரை போதி தர்மரை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று ஒரு பட்டியலை படத்தில் சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.

       படத்தில் 1600 வருடத்திற்கு முன், என்று பல்லவர்களை காட்டுகிறார்கள். அவர்களில் சகல கலைகளிலும் கைத் தேர்ந்தவரான போதி தர்மரை ராஜகுரு சீனத் தேசத்திற்கு செல்லுமாறு கட்டளை இடுகிறார். உண்மையில் போதி தர்மனாக சூர்யா அசத்தியிருக்கிறார். சூர்யாவும் விடைப் பெற்று சீனாவிற்கு கிளம்புகிறார். சூர்யாவின் சீனப் பயணம் மிக அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கண்ணைக் கவரும் இயற்கை எழிலை ரவி.கே.சந்திரன் அருமையாக படம் பிடித்திருக்கிறார். சீனாவில் ஒரு கிராமத்தில் சூர்யா காலடி எடுத்து வைக்கிறார். அந்த கிராமமே சூர்யாவை விரட்ட,அங்கிருந்து  வெளியேறுகிறார் சூர்யா. அந்த கிராமமே ஒரு கொடிய நோயால் பாதிக்கப்பட, அந்த நோயில் இருந்து சூர்யா அவர்களை காப்பாற்றுகிறார். மேலும் அவர்களுக்கும் அந்த வைத்தியத்தைக் கற்றுத் தருகிறார். இப்படி அவர்களுக்கு வைத்தியம் மட்டுமின்றி தற்காப்பு கலையையும் சொல்லித் தந்து அந்த ஊர் மக்களைப் பாதுக்காக்கிறார்.பிறகு அந்த ஊரை விட்டு கிளம்ப நினைத்த சூர்யாவை,விஷம் வைத்து அந்த ஊர் மக்களே கொன்று தங்கள் ஊரில் புதைக்கிறார்கள். படத்தின் 15 நிமிட கதை இது. நம்மை பிரம்மிக்க வைக்கும் காட்சியமைப்பு, நடிப்பு , பிண்ணனி இசை,சண்டைக் காட்சிகளென அசர வைக்கிறது.

       பிறகு ஆரம்பிக்கிறது கதையின் குழப்பங்கள். சீனா இந்தியாவில் ஒரு வைரஸ்ஸைப் பரப்ப திட்டமிடுகிறது. அதற்கு இந்தியாவிலிருந்து ஒரு பேராசிரியர் உதவி செய்கிறார். அந்த நேரத்தில் கதாநாயகி ஸ்ருதியாசன் போதி தர்மனின் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த டி.என்.ஏ வை வைத்து அவர்களின் தலைமுறையில் யாருக்கேனும் போதி தர்மனின் டி.என்.ஏ பொருந்துகிறதா என்று 11/2 வருடங்களாக ஆராய்ச்சி செய்கிறார். அதிஷ்டவசமாக அந்த டி.என்.ஏ சூர்யாவிற்கு பொருந்துகிறது.இந்த ஆராய்ச்சியை தன்னுடைய கல்லூரியில் இருக்கும் பேராசிரியர்களிடம் சொல்கிறாள். இது சீனாவிற்கு இந்திய உளவாளி பேராசிரியர் மூலம் செல்கிறது.எனவே அந்த அரசே ஒரு ஆளை தயார் செய்து இந்தியாவிற்கு வைரஸைப் பரப்பவும்,ஸ்ருதியாசனைக் கொல்லவும் அனுப்புகிறது.அந்த ஆள் தான் (டோங்கிளியோ டாங்கிளியோ) என்பவன் தற்காப்பு கலைகளில் கைத் தேர்ந்தவன். நோக்கு வர்மத்தில் கைத் தேர்ந்தவன். இந்தியாவிற்கு வந்து அவன் செய்யும் அட்டகாசங்களே மீதி கதை. அவனுடைய செயலை சூர்யா, தன்னிடம் உறங்கிக் கொண்டிருக்கும் போதி தர்மனின் திறமைகளை, ஸ்ருதியின் உதவியுடன் தூண்டி எப்படி முறியடிக்கிறார் என்பது தான் இறுதிக் கட்ட கதை.இதற்கிடையில் பாடல் போட வேண்டுமென்று சூர்யாவிற்கும் ஸ்ருதிக்கும் ஒரு காதல் கதை இடைசெறுகல்
       வரலாறு, விஞ்ஞானம்,தமிழ் என்று படம் நிறையப் பாடம் சொன்னாலும்,அது வசனங்களில் மட்டுமே இருப்பது சலிப்பு. வசனங்களில் மெனக்கெட்ட இயக்குனர் ஏன் திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை என தெரியவில்லை. மொத்தத்தில் முருகதாஸ் 15 நிமிடக் கதைக்கு மட்டுமே இயக்குனரா? என்ற கேள்வி மனதில் எழும் அளவு திரைக்கதை அமைத்திருப்பது ஏமாற்றம். திரையரங்கில் ஒட்டு மொத்த பார்வையாளர்களும் படம் முழுக்க அமைதியாகவே இருக்கிறார்கள். உண்மையில் அது ஏமாற்றத்திற்கான அறிகுறியே...
       அதெப்படி நமக்குக் காட்டிய போதிதர்மனாக நடிக்கும் சூர்யாவை படத்தில் உலவிக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் காட்டிவிட்டார்களா? சூர்யா வீட்டில் போதிதர்மனைப் பார்த்தவுடனேயே கண்டுக் கொள்கிறார். இறுதி கட்ட சண்டைக் காட்சிகளை கையை சுழற்றும் பொழுது, ரசிகனான பார்வையாளன் தான் முதலில் உணர்ச்சிவசப்பட வேண்டுமே தவிர, இது வரை போதி தர்மனின் செயல்களை பார்த்தறியாத ஸ்ருதியாசன் உணர்ச்சிவசப்படுவது கொஞ்சம் ஓவர். இப்படித் தான் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அசர வேண்டிய சமயங்களிலும்,அதிர்ச்சியடைய வேண்டிய சமயங்களிலும் நமக்கு முன்னரே சம்மந்தமே இல்லாமல் திரையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள் அதை செய்வது மிகுந்த சலிப்பு. ஆண்டனி சார் கொஞ்சம் கவனித்து படத்தைத் தொகுத்திருக்கலாம். இதில் வேறு பிண்ணனி இசை நம்மை பல இடங்களில் எரிச்சலூட்டுகிறது. இறுதிக் கட்டக் காட்சிகளில் சூர்யா போதித் தர்மனின திறமைகளை அடைகிறார் என்பதை ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை நமக்கு சொல்வ்தாக அமையும் இடத்தில், திரையரங்கில் மாரியாத்தா வந்துட்டா... என்று ரசிகர்கள் கத்துவது ரசிக்கும்படிதான் இருந்தது.
       மிகவும் எதிர்ப்பார்த்த ஸ்ருதியாசன் நடிக்கவில்லை பேசிக்கொண்டே இருக்கிறார்.படத்தில் நிறைய காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்க மறுக்கிறார். டாங்கிளி தமிழக ரசிகர்களை மிரட்ட வருவார் என்று எதிர்ப்பார்த்தால்,அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்கில் சிரிப்பு. கண்ணாலேயே சண்டைப் போடும் வில்லன், படத்தில் தன் பார்வையால் சூர்யாவைத் தவிர எல்லோரையும் கவிழ்த்துவிடுகிறார். இருப்பினும் பார்த்த ரசிகர்கள் யாரையும் அது கவரவில்லை என்பது தான் வருத்தம்.
       உண்மையில் வில்லனின் பார்வை தான் படத்தின் திரைக்கதையையே கவிழ்த்துவிட்டது.  மக்களுக்கு புரியாத விஷயங்கள் என்று இதில் அவர் சொல்லும் நோக்கு வர்மம்,டி.என்,ஏ என்று எல்லாம் விளங்குகிறது.ஆனால் திரைக்கதை தான் விளங்கவில்லை. ஒரு வேளை இந்தப் படத்தைப் பார்க்க இன்னும் பயிற்சித் தேவையோ என்று சில பேர் படம் நல்லா இருக்கிறது என்று சொல்லும் பொழுது எனக்குத் தோன்றுகிறது.
       தமிழனை பெறுமைப்பட வைக்கும் என்று உண்மையில் இன்றைய தமிழனின் உணர்வையும் சீனத் தேசத்து கலையையும் தவறாக கையாண்டிருக்கிறார்

  மொத்தத்தில் ஏழாம் அறிவு வீண் செலவு.