• 11.12.2011

  ஏழாம் அறிவுக்கு ஒரு உதவி இயக்குனராக நான் எழுதும் திரைக்கதை (2)


  வாசக நண்பர்களே இந்தப் பதிவை படிப்பதற்கு முன் இதற்கு முந்தையப் பதிவை படிக்கவும். இதற்கு முன் படித்தவர்களிடம் முதலில் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பதிவு மிக நீண்டதாக மாறிவிட்டது. எத்தனை முயன்றும் தவிர்க்க முடியவில்லை. சீன மொழி பேசும் இடங்களில் எல்லாம்  தமிழையே பயன்படுத்தியிருக்கிறேன். வேறு வழியில்லை இன்னும் நீண்டு விடும் என்பதனால்....
  வாசக நண்பர்களே படித்துவிட்டு இதன் நிறை குறைகளை மறக்காமல் பின்னூட்டம் இடவும்.
  இடைவேளி முடிந்ததும்
       ஒரு ரசாயனக் கூடம் காட்டப்படுகிறது. அதில் நிறைய ஊழியர்கள் வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர்.கையில் உரையுடனும் கண்ணாடி குடுவையுடனும் ஒரு மனிதர் எல்லோரையும் கட்டளை இட்டுக் கொண்டிருக்கிறார்.அவரிடம் வந்து சீன வில்லன் டாங்கிளியின் தலைவன் பேசுகிறான். உங்களின் தாமதத்தால் நம்முடைய ரெட் ஆப்ரேஷனே நின்றுவிடும் போல இருக்கிறது. என்று திட்டுகிறான். 

  அந்த டாக்டர் நீங்கள் சொல்வது போல் இது சாதரண காரியமில்லை. இங்கிருந்து இந்தியாவிற்கு நீங்கள் இந்த வைரஸை கொண்டு போவதற்கு முன் இதை நாம் பரிசோதிக்க வேண்டும்.எப்படியும் 7 நாட்களாவது வேண்டும் என்கிறான். நோ என்று மறுக்கிறான். அப்பொழுது ஒருவன் வந்து டாக்டரைப் பார்த்து ஏதோ சொல்வது. டாக்டர் பதட்டத்துடன் உள்ளே செல்கிறார்

  உள்ளே கண்ணாடிப் பெட்டிக்குள் சிறு குழந்தைகள் 2 பேர் இருக்கிறார்கள். அந்த குழந்தைகள் உடலில் சின்ன சின்ன புள்ளிகள் தெரிவது.அதைப் பார்த்ததும் வேற வழி இல்லை.இன்னும் 20 நாளாவது காத்திருக்கணும். இந்த குழந்தைங்க நம்ம் ஆராய்ச்சி செஞ்ச கிராமத்துல இருக்கறது. இதுங்க காணாமப் போய் 2 நாளாகுதுன்னு சொல்லும் பொழுது... ஒரு கண் அதைப் பார்ப்பது.

  சுபா( ஸ்ருதி) அதை கேட்டுவிட்டு அதிர்ச்சியாவது. தன்னுடைய நண்பனைத் தேடுகிறாள்.கையில் கட்டுடன் ஓரு அறையில் படுத்துக் கிடக்கிறான். ஆள் அரவமின்றி சுபா அவனை காண செல்வதாக நினைத்து, அவனிடம் சென்று டாக்டரும்டாங்கிளியின் தலைவனும் பேசிக் கொண்டதை சொல்கிறாள். பயோவார் ஒரு வைரஸைக் கண்டுபிடிச்சு, தன் நாட்டு மக்கள் மேலேயே பிரயோகிச்சு, பாதிப்பை ஏற்படுத்தி பிறகு அதற்கு கண்டுபிடித்த மருந்து வேலைச் செய்யுதான்னு அவங்க மேலேயே உபயோகப்படுத்தப் போறாங்க... சோதனை எலிகளா சீன மக்களையே பயன்படுத்தப் போறாங்க...
  அதுக்கப்புறம் அதை நம்ம இந்தியாவுலப் பரப்பப் போறாங்க... என்ன ஒரு மோசமான எண்ணம்
  இதை நாம எப்படியாவது தடுக்கணும் என்று அவள் சொல்ல சொல்ல.... அவனுடைய நண்பன் அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான். திடீரென்று அவளுடைய கழுத்தை நெறிக்கிறான். அவள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறாள். அவனிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். திடீரென்று அவன் கையை விளக்கிவிடுகிறான். பின்னே சிரிப்பு சத்தம் கேட்கிறது. பின்னே டாங்கிளி நிற்கிறான்.

  அரவிந்தன் (சூர்யா) சர்கஸ்சில் தன்னுடைய சொந்தகாரர்களை சமாளிக்கிறான். ” அவர்கள் எல்லோரும் அவனை சீனா போக வேண்டாமென்று சொல்கின்றனர். அவன் தாய் சீனால்லாம் எப்படிப்பா இருக்கும் என்று கேட்கிறாள். அதற்கு அருகில் இருக்கும் இளவரசு அதன் இந்த  x y z ல பேர் வச்சி அலையறவனுங்க. அவங்க பேரே புரியாது. பாஷை சுத்தம், அங்க தான் உன் புள்ளை போகப் போறானான். என்று சொல்கிறார்.
  சீனாவா டேய் உனக்கு இங்கீலிஸ்ஷே சரியா வராதே, அப்படியிருக்க சீனாப் போய் எப்படிடா என்று குள்ள நண்பன் கிண்டல் செய்கிறான் சூர்யா முறைக்கிறான்.
  அப்பொழுது அங்கே சுபாவின் நண்பர்கள் வருகிறார்கள். அரவிந்தனை ஏமாற்றத்துடன் பார்க்கிறார்கள். இன்னும் எப்படியும் 5 நாளாவது ஆகும் விசா கிடைக்கிறதுக்கு, பெரிய லெவல்ல ட்ரைப் பண்ணியும் 5 நாளாகும்னு சொல்லிட்டாங்க... என்று சொல்கிறான். இன்னொரு நண்பன் இன்னும் நமக்கு 7 நாள் தான் டைம் இருக்கு, அதற்குள்ள அவங்க ஆராய்ச்சி முடிஞ்சி இந்தியாவுக்குள் வந்திடுவாங்க. ஆனா இப்ப சுபா உயிரோட இருக்கிறாளா இல்லையான்னு தான் தெரியலை. இது எல்லாத்துக்கும் ஒரே விடை என்று அரவிந்தனைப் பார்க்கிறான்.

  ஒரு அறையில் பேராசிரியர் டாங்கிளியிடமும், அவன் தலைவனிடமும் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கிறான். சுபாவை ஒன்றும் செய்யவில்லை என்றும் அவளிடம் அந்த டி.என்.ஏ ஆராய்ச்சியைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ளும் வரை அவள் அவர்களுக்கு வேண்டும் எனவும் சொல்கிறான். அது மட்டுமின்றி தாமுவின் ரத்த உறவை கொல்லும் வரை சுபாவை ஒன்றும் செய்யப் போவதில்லை என்றும் சொல்கிறான் டாங்கிளி. ஆனா இந்த டாக்டர் என்று கத்தியபடி அதை சீக்கிரம் செய்ய மாட்றான் என்று ஆங்கிலத்தில் அவன் பேச, பேச அதை ஒரு நண்பன் ஹெட் போனில் கேட்டபடி அரவிந்தனுக்கு விளக்குகிறான். அதைக் கேட்ட அரவிந்தன் அமைதியாக இருக்கிறான். நண்பனில் ஒருவன் சுபா இதற்கு தான் உன் பின்னாடி சுத்துனா நீ அவளை தப்பா எடுத்துக்காத என்று சொல்கிறான். இப்ப இயல்பா இருக்கிறது தப்பா படுது, செயற்கையா யோசிக்கிறது சரியாப் படுது. அவளைப் பத்தி விடுங்க, என்னை மட்டுமில்லை என் மக்களையே அழிக்கணும்னு நினைக்கிறானே ஒருத்தன் அவன் இந்த மண்ணுல காலடி வைக்கக் கூடாது, அது நான் அங்க போறதால் தான் நடக்கும். சுபால்லாம் அதற்கு காரணமில்லை என்று சொல்கிறான்.

  அரவிந்தனும் இன்னொரு நண்பனும் ஒரு அறையில் சீன மொழிகளில் அறிமுக வார்த்தைகளை பேசிப் பழகுவது. சீன நகரங்களின் புகைப்படங்களை கணிணியில் பார்ப்பது என்று இரண்டு மூன்று காட்சிகள் நகர்கிறது. 

  விமான நிலையத்தில் அரவிந்தனும் சுபாவின் நண்பனும் புறப்படுகிறார்கள். சீன மொழியில் அரவிந்தன் வெற்றியுடன் வருகிறோம் என்று சொல்கிறான். சுபாவின் நண்பர்கள் அவனை வழியனுப்புகிறார்கள். அரவிந்தனுடன் வரும் நண்பன் பரவாயில்ல என்னைவிட நல்லாவே சீன மொழி பேசுற என்று சொல்லி கிளம்புகிறார்கள்.

  ஐ வாண்ட் டு மீட் தட் அரவிந்தன் ... என்று சீன மொழியில் கத்துகிறான். அவனுடைய தலைவன் அவனை சமாதனப்படுத்துகிறான். அவசரப்படக் கூடாது. அவன் ஒண்ணும் தாமு இல்லை. நாமளே அவனை ஏன் தாமுவாக்கனும். அந்த சுபா நம்ம கிட்ட இருக்குறா சோ நோ பிராப்ளம்.அரவிந்தன் இஸ் நத்திங்க். என்று முடித்து வாட் பிரபொசர், என்று கணிணியின் திரையைப் பார்க்கிறார்.

  நண்பர்களின் பார்வையில் இருக்கும் பேராசிரியர் வீடியோ சேட்டில், சீனத் துரோகியிடம் பேசுகிறார். அரவிந்தனால் உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. ஏனெனில் அவனை சுபா காதலித்து ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான். அதனால் அந்த ஆராய்ச்சி நடக்காது. ” “லிவ் இட் அரவிந்தன்” “ என்று சொல்கிறான்.

  டாங்கிளி சிரிக்கிறான். லவ். இந்தியன்ஸ் ஸ்பாயில்ட் தேர் டைம் வித் லவ். என்று மீண்டும் சிரிக்கிறான்.

  அரவிந்தனும் நண்பனும் பேராசிரியர் சொன்ன விவரங்களின்படி சுபா தங்கிய அதே ஹோட்டலில் தங்குகிறார்கள். சுபா தங்கிய அறையிலேயே தங்குகிறார்கள். இவர்கள் அறைக்கு சென்றதும் அந்த அறையை சுத்தம் செய்ய ஒருவன் வருகிறான்.வந்தவன் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை செல்போனில் படம் எடுத்து விடுகிறான். அறையை விட்டு வெளியில் வந்ததும் அந்த படத்தை யாருக்கோ குறுந்தகவல் அனுப்புகிறான்.

  அரவிந்தனுடைய புகைப்படம் ஒரு திரையில் தெரிவது, டாங்கிளி அதைப் பார்ப்பது. பிரொபசர் சீட் மீ... என்று சொல்கிறான். கணிணியின் திரையில் பிரொபசர் வருகிறார். என்ன அவசரம் ஏன் ? என்று கேட்கிறார். இது அரவிந்தனான்னு பார்த்து சொல்லுங்க, என்று கேட்கிறான் டாங்கிளி. பிரொபசர் அதிர்ச்சியுடன் பார்க்கிறார். டாங்கிளியின் பார்வை கூர்மையாகிறது. பிரொபசர் அவனையே உற்றுப் பார்க்கிறார். திடீரென்று நாற்காலியில் இருந்து எழுந்து சென்று அடுக்கு மாடியில் இருந்து விழுந்து இறக்கிறார். அவரை சுற்றிக் கூட்டம் கூடுகிறது.

  சீனாவின் ஒரு கிராமப் பகுதியை காட்டுகிறோம். இரண்டு பெண்கள் கலங்கியபடி இருக்கிறார்கள். தங்கள் குழந்தைகள் இரண்டு நாட்களாக காணவில்லை யாரும் அதைப் பற்றி கவலைப்பட வில்லையென்றும் சொல்கிறார்கள். அந்தப் பெண்களை சுற்றி கூட்டம் கூடுகிறது.அதில் சிலர் ஏதோ சொல்கின்றனர். தூரத்தில் ஒரு மலைக் குகையைக் காட்டுகிறார்கள்.

  மலைக் குகையை நோக்கி பார்வைப் போகிறது. நான்கு சீனர்கள் குகையை நோக்கிச் செல்கின்றார்கள். மலைக் குகையை நெருங்கி உள்ளே நுழைகிறார்கள். இருள் சூழ்கிறது. மேலும் உள்ளே நுழைய பாதை போய்க் கொண்டே இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெளிச்சம் தெரிவதுப் போல் இருக்கிறது. நான்கு கிராமவாசிகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கின்றனர். கிட்டே நெருங்கிப் பார்க்கிறார்கள். நவீன முறையில் ஒரு கண்ணாடியினால் ஆன கட்டிடம் ஜொலிப்பது. நால்வரும் ஒன்றும் புரியாமல் மேலே நடக்கிறார்கள். திடீரென எதிரில் ஒரு உருவம் இவர்கள் முன் வருகிறது. அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். டாங்கிளி இவர்கள் முன் நிறகிறான். அவர்களில் ஒருவனைப் பார்க்கிறான். அவன் எல்லோரையும் அடித்துத் துவைக்கிறான். எல்லோரையும் கொன்றுவிட்டு டாங்கிளியைப் பார்க்கிறான். இறந்தவன் இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து அவன் கழுத்தை அறுத்துக் கொள்கிறான். டாங்கிளி ஒரு காரில் ஏறி செல்கிறான்.

  ஹோட்டலின் அறையில் அரவிந்தனும் சுபா நண்பனும் அடுத்து என்ன செய்வது என்றுப் புரியாமல் இருக்கிறார்கள். பிரொபசரை வைத்து எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிடலாமென்று இருந்தால், அவர் இறந்துவிட்டார். அந்த டாங்கிளி ரொம்ப பயங்கரமானவன் அவன் பார்வையினாலையே பிரொபசரை சாகடிச்சிட்டான். நோக்கு வர்மம் நம்மகிட்ட இருந்து கத்துக்கிட்டு என்ன வேலை காட்டுறான் பாரு... என்று சுபா நண்பன் சொல்கிறான். கத்துக் குடுத்தது நம்மளா இருக்கலாம் ஆனா கத்துக்கிட்டது அவங்க தானே நாம இல்லை. ஆனா அதை தப்பா உபயோகப்படுத்தறது ரொம்பத் தப்பு. அவனை சும்மா விடக் கூடாது. என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே...

  காலிங்க் பெல் அடிக்கிறது. அரவிந்தன் சுபா நண்பனைப் பார்த்து இதோப் பார் ஒரு வேளை இது டாங்கிளியாக் கூட இருக்கலாம். ஒரு வேளை அவன் உன்னையோ என்னையோ வசியப்படுத்தி எது வேணா செய்யலாம். அதனால அவன் கண்ணை மட்டும் பார்க்கக் கூடாது என்று சொல்கிறான். கதவைத் திறக்கிறான். ஒரு வேலையாள் ”உங்கள் அறையில் தொலைத் தொடர்பு வேலைச் செய்யவில்லை உங்களுக்கு ஒரு கால் வந்திருக்கிறது வரவேற்பறைக்கு வரச் சொல்கிறான்.” அரவிந்தன் சுபா நண்பனை அங்கிருக்க சொல்லிவிட்டு அவன் வரவேற்பறை நோக்கிச் செல்கிறான்.தொலைப்பேசியை காதில் வைக்கிறான். ஹலோ தமிழன் என்று குரல் கேட்கிறது. நோ இந்தியன் என்று அரவிந்தன் சொல்கிறான். ஓகே உங்களுக்கு உதவி செய்றதுக்கு தான் போன் செய்கிறேன். ஏற்கனவே உங்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்த நபரில் ஒரு ஆள் டாங்கிளியின் ஆள், இன்னொருவன் எங்களுடையவன் மீதியை நீ என்னை சந்தித்தப் பின் தெரிந்துக் கொள்ளலாம். நான் ஏன் உனக்கு உதவணும்னும் உனக்கு அப்பத் தெரியும். இன்னும் 5 நிமிடத்தில் வெளியில் ஒரு ரெட் கலர் கார் வந்து நிற்கும் நீ அவனுடம் வா ”என்று பேசியவனின் குரல் நிற்கிறது. அரவிந்தன் ஒன்றும் புரியாமல் விழிக்கிறான்.

  அந்த இடத்திலிருந்து வேகமாக நகர்ந்து தன் அறைக்குச் செல்கிறான். சீக்கிரம் இங்க இருந்து கிளம்பணும் என்று சொல்லிக் கொண்டு எல்லாப் பொருள்களையும் எடுக்கிறான். அரவிந்தன் பேசிக் கொண்டே திடீரென்று திரும்ப சுபாவின் நண்பன் அவனை கத்தியால் குத்துகிறான் அது தவறி கையில் பட்டுவிடுகிறது. அரவிந்தன் ஒன்றும் புரியாமல் அவனையே பார்க்க... அவன் மீண்டும் அவனைக் குத்த வருகிறான். அவனுக்கு பின்னே டாங்கிளி நிற்கிறான். அரவிந்தன் அவனை முறைக்க, நண்பன் கிட்டே நெருங்கிக் கொண்டு இருக்கிறான். இவன் ஓடிப் போய் டாங்கிளியை அடிக்க அவனுக்கும் அரவிந்தனுக்கும் லேசாக சண்டை நடக்கிறது. இடையில் டாங்கிளியை தடுக்கிறான் சுபாவின் நண்பன், செய்கையால் தானே அவனைக் கொன்று விடுவதாக சொல்லிவிட்டு, அரவிந்தனை நோக்கிச் செல்கிறான். அரவிந்தன் உடம்பில் எல்லாம் காயம், கிட்டே நெருங்கிக் கொண்டிருக்கும் நண்பன் திடீரென்று கண்களால் செய்கைக் காட்டுகிறான். அரவிந்தன் ஒன்றும் புரியாமல் ஓடுகிறான். அரவிந்தன் பின்னே நண்பனும் ஓடுகிறான். அவர்கள் செய்கைப் புரியாமல் டாங்கிளியும் அவன் பின்னாலேயே ஓடுகிறான். அரவிந்தன் ஓட அவன் பின்னே சுபா நண்பன் ஓட அவர்களை பின் தொடர்ந்து வெகுத்தூரத்தில் டாங்கிளி வருகிறான். அரவிந்தன் ஹோட்டலை விட்டு வெளியே ஓட , சரியாக சிகப்பு வண்ண கார் வருகிறது. அரவிந்தன் வேறு விழியின்றி அதில் ஏறுகிறான். இதைப் பார்த்து அதிர்ச்சியாகி டாங்கிளி அவர்களை வேகமாக துரத்த, சுபா நண்பனும் அந்த காருக்குள் ஏறுகிறான். டாங்கிளி பின்னாலே துரத்திக் கொண்டு வருகிறான். கார் அவனை விட்டு மறைகிறது.

  காருக்குள் அரவிந்தன் அருகில் இருக்கும் நபரைப் பார்ப்பது.அவன் அமைதியாக இருக்கிறான். சுபா நண்பனிடம் ”எப்படி இதெல்லாம் உண்மையிலேயே நீ வசியமாயிட்டன்னு நினைச்சேன். என்று கேட்கிறான். சுபாவின் நன்பன் எனக்கும் கொஞ்சம் வசியம் தெரியும் ஆனா கும்பூல்லாம் தெரியாது.அதனால் தான் அவன்கிட்ட நான் நடிச்சேன். இருந்தாலும் அவன் ரொம்ப டான்ஞ்சர். என்று நண்பன் முடிப்பதற்குள். அருகில் இருக்கும் நபர் யெஸ் என்று ஏதோ சொல்கிறார். அரவிந்தன் விழிக்க நண்பன் அவனுக்குப் புரிய வைக்கிறான். இந்த சீனாவிலேயே மார்ஷியல் ஆர்ட்ஸ் சொல்லிக் கொடுக்கும் சிறந்த பள்ளியின் சிறந்த மாணவன் அவன். அவனை வெல்வது கொஞ்சம் கடினம். என்று நண்பன் சொல்கிறான். அதற்குள் அரவிந்தன் கைகளில் இருந்து ரத்தம் கசிய லேசாக முனகுகிறான் அரவிந்தன். வெயிட் ஃபார் 10 மினிட் என்று சொல்கிறார் அந்த நபர்.

  பரிசோதனை கூடம் ஒரு நாற்காலியில் சுபா அமர்ந்திருக்கிறாள்.அவளைச் சுற்றி சில டாக்டர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவளிடம் மரபணு டி.என்.ஏ ஆராய்ச்சியைப் பற்றிக் கேட்கின்றனர். அவள் சொல்ல மறுக்கிறாள். அவளுடைய நண்பனை அவளுக்கு எதிரே காட்டுகிறார்கள். டாங்கிளி எதிரில் நிற்கிறான். அவள் முகத்தில் பதட்டம். நாட் ஒன்லி திஸ் என்றும் இன்னும் ரெண்டு பேர் சாக இந்தியாவுல இருந்து இங்க வந்திருக்கானுங்க என்றும் சொல்கிறான். அரவிந்தன் தாமு பிளட் என்று சொல்லி சிரிக்கிறான். அவள் மனம் அரவிந்தன் என்று சொல்கிறது.

  கையில் அரவிந்தனுக்கு மருந்துப் போடுகிறார்கள். கைக்கு மருந்து போடும் நபரிடம் அரவிந்தன் என்னை எதுக்கு காப்பாத்துனீங்க என்று ஆங்கிலத்தில் பேச அவனுக்குப் புரியவில்லை. விழிக்கிறான். சுபாவின் நண்பன் அதை சீன மொழியில் சொல்கிறான். அவன் சொல்வதற்குள் அரவிந்தன் என்ன இங்கிலிஷ் கூட தெரியாதா... புல்லட் ரயிலெல்லாம் விடறீங்க இங்க்லீஷ் தெரியாதா? என்று கேட்டுவிட்டு லேசாக சிரிக்கிறான். அதற்குள் அங்கு ஒரு சிரிப்பு சத்தம் கேட்கிறது. அரவிந்தன் மட்டுமின்றி சுபாவின் நண்பனும் பார்க்கிறான். ஒரு பெரியவர் வருகிறார். ஆங்கிலம் தெரியாததனால் தான் நாங்க இந்தளவு வளர்ந்திருக்கோம். அது தெரிஞ்சி கொண்டாடற நீங்க எந்தளவு வளர்ந்திருக்கீங்க...?என்று சீன மொழியில் சொல்கிறார். அதை சுபாவின் நண்பன் தமிழில் அரவிந்தனுக்கு சொல்கிறான்
   அரவிந்தன் முகம் மாறுகிறது. எங்க வளரவிடறீங்க, என்று அரவிந்தன் சொல்கிறான். அதை சுபாவின் நண்பன் சீன மொழியில் சொல்கிறான் மீண்டும் சிரிக்கிறார். எந்த நாடு தான் பக்கத்து நாட்டை வளர விட்டிருக்கு... ஆனா ஒண்ணு புரிஞ்சிக்குங்க உலகத்தின் மிக தொன்மையான மொழிகளில் சீன மொழியும் ஒன்று. ஆனால் உங்கள் நாட்டில் இரண்டு மொழிகள் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பயன்படுத்த முடியவில்லை. இரண்டிற்கும் நடுவில் சண்டையிட்டு அதை வேறொருவன் பயன்படுத்துகிறான். எங்கள் நாட்டில் அப்படியில்லை.
  எங்கள் வரலாறு எங்களால் எழுதப்படுகிறது. உங்கள் வரலாறு பெரும்பாலும் வெளிநாட்டவரால் தான் எழுதப்படுகிறது. தொழில்நுட்பத்திற்கு மொழிகள் தேவையில்லை. பெரும்பாலும் நாம் இயற்கையின் மெளன மொழியில் இருந்து தான் விஞ்ஞானத்தை வளர்த்திருக்கிறோம். அந்த விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்களும் இந்தியர்களும்  முன்னேறியிருந்தார்கள். ஆனால் இப்பொழுது சீனாவின் நிலையெங்கே இந்தியாவின் நிலையெங்கே... மொழிப்பற்று மட்டும் போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அப்பொழுது அரவிந்தன் தலை லேசாக கவிழ்ந்திருந்தது. அதை கவனித்த பெரியவர்.
  அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் இந்தியாவில் பிறக்க வேண்டும் என்று எங்களின் மிகப் பெரிய தத்துவஞானி கன்ஃபூசியஸே சொல்லியிருக்கிறார்
  இப்பொழுது அதுவல்ல பிரச்சினை. டாங்கிளி... என்று முடிக்கிறார்
  அரவிந்தன் அவரை உற்று நோக்குகிறான்.
  1600 ஆண்டுகளுக்கு முன் உங்கள் நாட்டிலிருந்து எங்களுக்கு நல்லது செய்ய ஒரு ஞானி வந்தார் தாமு. அப்படியொரு சூழல் மீண்டும் நிகழும் என்று எங்களின் ஆழ் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. அப்படியிருக்கத் தான் எங்கள் நாட்டின் மிகப் பெரிய கொடிய சக்தி டாங்கிளி உருவில் மறுபடியும் விழித்தெழுந்திருக்கிறது. அதற்கு நீங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறீர்கள். என்றதும், அதை மொழிப் பெயர்த்து நண்பன் சொல்கிறான். அதற்கு அரவிந்தன் வியப்பால் ” “நான் என்ன செய்ய முடியும்” “ அவன் பார்த்தாலே எல்லோரும் அடிச்சிக்கிறாங்க என்று சொல்கிறான்.
  பெரியவர் அருகில் இருப்பவனை காட்டி ஏன் இவர் அதற்கு வசியப்படவில்லையே ... என்றதும். மன உறுதியுடையவனை எந்த வசியமும் ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் நீங்கள் கொஞ்சம் எங்களுக்கு ஓத்துழைக்க வேண்டும் என்கிறார்கள். சரியென்று தலையாட்டுகிறான்.

  காரில் இவர்களை அழைத்து வந்தவன் அரவிந்தனிடம் ஒரு மொபலைக் கொடுகிறான். அது சுபாவினுடையது என்பது தெரிந்ததும் அதைப் பார்க்கிறான்.இறுதியாக பதிவு செய்யப்பட்ட படக்காட்சியைப் பார்க்கிறான். பிறகு இன்னும் சிலப் படக்காட்சிகளைப் பார்க்கிறான். அதில் ஏற்கனவே நீங்கல் படத்தில் பார்த்ததுப் போல் சுபா அரவிந்தன் பற்றி பேசிய காட்சிகள் ஓடுகிறது.அவள் தனனைக் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்துக் கொள்கிறான். இந்த இடத்தில் பாடல் எனக்கு இங்கு தேவையில்லை. உங்களுக்குத் தேவைப்பட்டால் மனதில் ஓட்டிக் கொள்ளுங்கள். 

  பரிசோதனைக் கூடத்தில் இருக்கும் குழந்தைகள் உடம்பெல்லாம் புள்ளியாக ஆகிவிடுகிறது. அவர்களை அந்த மலைக் குகையின் வாசலில் கொண்டுப் போய் போட்டுவிட்டு வர சொல்கிறான் டாங்கிளியின் தலைவன். டாங்கிளி அந்த நேரம் வருகிறான். அவர்கள் தப்பித்துவிட்டதாகச் சொல்கிறான்.அதை வேறு அறையில் இருக்கும் சுபா கேட்டு மகிழ்கிறாள். சுபாவிடம் ஏதோ கேட்கிறார்கள் அவளும் மனமின்றி சொல்கிறாள். அவளை மரபணு ஆராய்ச்சியை தொடர சொல்கின்றனர்.

  அரவிந்தனுக்கு அந்தப் பள்ளியைச் சுற்றிக் காட்டுகின்றனர். எல்லா இடங்களிலும் போதிதர்மனை கடவுளாகப் பார்க்கின்றனர். அருகில் இருக்கும் சுபாவின் நண்பனிடம் சொல்கிறான். இப்படிபட்ட கலையை விட்டுட்டு இன்னைக்கு சக்கரை, பிபின்னு சே! அவமானமா இருக்கு என்று சொல்கிறான்.

  அதைக் கேட்ட அந்தப் பெரியவர் சிரிக்கிறார். கும்பூ சொல்லிக் கொடுக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அரவிந்தனைப் போய் அங்கே நிற்க சொல்கிறார். அவன் தயங்குகிறான்.
  பெரியவர் இங்க எதுக்கு வந்த... என்று கேட்கிறார். சுபா, டாங்கிளி என்று அடுக்கிக் கொண்டே போக...
  உன்னுடைய மரபணுவை தூண்டினால் போதி தர்மன் திறமைகள் வரக் கூடும். போதிதர்மனைத் திறமையானவனாக தூண்டியது எது? இயற்கையும் அதை பின்பற்றி அவர் செய்த பயிற்சியும்...
  கையைக் காட்டி போகச் சொல்கிறார். அரவிந்தன் போய் நின்று கற்றுக் கொள்கிறான்.மற்றவர்கள் 10 வருடங்கள் கற்றதை உன்னால் பத்து நாட்களில் கற்றுக் கொள்ள முடியும் என்று பெரியவர் சொல்கிறார். அரவிந்தன் கண்கள் சிவக்கிறது.

  பரிசோதனைக் கூடத்தில் டாங்கிளியை தலைவன் திட்டுகிறான்.அரவிந்தன் உன்னுடைய குருவின் பாதுகாப்பில் இருக்கிறான். அவனை கொன்றுவிடு இல்லையேல் நமக்கு ஆபத்து என்கிறான். அவனை அப்படியே பார்க்கிறான் டாங்கிளி.

  மலைக் குகை முன்னாடி ஊரேக் கூடி வேடிக்கைப் பார்க்கிறது. இரண்டு குழந்தைகளைச் சுற்றி அனைவரும் வாயையும் மூக்கையும் பொத்தியபடி செல்கின்றனர். சிறிது நேரத்தில் கூட்டம் பயத்தில் கலைகிறது.
  அந்த குழந்தைகள் அங்கேயே இருக்கிறார்கள். இரவாகிறது.ஒரு உருவம் வந்து அந்த குழந்தைகளைத் தூக்கிச் செல்கிறது.

  அரவிந்தன் முன் அந்த குழந்தைகளைப் போடுகிறார்கள். அவன் பார்த்து அதிர்கிறான். அந்தப் பெரியவர் உன்னை நான் ஏன் காப்பாற்றினேன் என்றுத் தெரியுமா? இந்த நோயை குணப்படுத்த உன்னால் தான் முடியும் என்று சொல்கிறார். அவன் விழிக்கிறான். முடியாது என்கிறான்.
  அந்தப் பெரியவர் உங்க திறமை உங்களுக்கேத் தெரியலை அது தான் உங்க குறை. உன்னால் முடியும் என்று சொல்லி சில முலிகைகளைக் கொடுக்கிறான். இன்னும் ஒரு மூலப்பொருளை உன்னால் மட்டும் தான் எடுக்க முடியும். இந்த குழந்தைகள் மட்டுமில்லை. உன் நாட்டையும் நீ தான் காப்பாற்ற முடியும் என்று சொல்கிறார்.

  பாடல் ஆரம்பிக்கிறது.
  அரவிந்தன் கும்பூ பயிற்சி எடுக்கும் காட்சிகள். அந்த கிராமத்திற்கு பக்கமாக அரவிந்தன் ஏதோ முலிகைத் தேடிச் செலவது. அப்பொழுது அந்த கிராமத்தவர்களை அவனைப் பார்த்து இவனும் குகைக்குள் இருக்கும் மனிதர்களின் கூட்டாளி என நினைத்து துரத்துகிறார்கள். அந்த குழந்தைகளுக்கு மருந்துப் போடப்படுகிறது. பாடல் முடிவடைகிறது.

  பெரியவர் அரவிந்தன் எல்லோரும் அந்த குழந்தைகளைச் சுற்றி இருக்கிறார்கள். பெரியவர் ” “இன்னும் 1 மணி நேரத்திற்குள் இந்த குழந்தைக்கு இந்த மருந்தில் கலக்க வேண்டிய ஒரு கலவையை கலந்துக் கொடுக்கவில்லையென்றால் அவ்வளவு தான் “ என்று சொல்கிறார். 

  வேறு வழியில்லை அவர்களின் இடத்தில் தான் அது கிடைக்கும். அங்கு நான் போக வேண்டுமென்று சொல்லியபடி அந்த குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு சுபாவின் நண்பனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு அரவிந்தன் செல்கிறான்.

  சுபா, தன்னுடைய கையை வெட்டிக் கொண்ட நண்பன் இருக்கும் இடத்தை எப்படியோ தேடிக் கண்டுபிடித்துவிடுகிறாள். அவனிடம் இந்த இடத்தில் ஏதேனும் எதிரிகள் வந்தால் இந்த இடத்தையே அழித்துவிட ஒரு தொழில்நுடபம் இருக்கிறது. அதை நாம் இயக்கிவிட்டால் இந்த இடமும் அழிந்துவிடும். எந்த பிரச்சினையும் இல்லை. இந்த இடமே வெடித்து சாம்பலாகிவிடும். நாம் அழிந்தாலும் பரவாயில்லை என்றபடி அவனிடம் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு இரண்டு பேரை கடந்து அந்த இடத்திற்கு சென்று அதை இயக்கிவிடுகிறாள். சிறிது நேரத்திற்க்கெல்லாம் எல்லா இடத்திலும் ஒரு அலாரம் சத்தம் கேட்கிறது. டாங்கிளி அதிர்கிறான். அவனின் தலைவன் நோ...என்று கத்திக் கொண்டு எல்லோரையும் அழைக்கிறான். இனி அதை முடக்க முடியாது. வேறு வழியில்லை நாம் இந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்ப வேண்டும் என்று அவசரப்படுத்துகிறான். இவன் பணியாட்கள் சுபாவையும், அவள் நண்பனையும் அழைத்து வருகிறார்கள். டாங்கிளி தலைவனைப் பார்க்கிறான். தலைவன் இவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். என்று அந்த இடத்தை விட்டு செல்கிறார்கள்.

  இவர்கள் வெளியில் வந்து குகையை கடந்து கிராமத்தை நோக்கிச் செல்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு அரவிந்தனும் நண்பனும் இருக்கிறார்கள். சுபாவும், நண்பனில் ஒருவன் மட்டும் போவதையும் பார்க்கிறார்கள். இருந்தும் அமைதியாக அவர்கள் செல்லும் வரை காத்திருந்து செல்பவர்களில் ஒரு டாக்டரை மட்டும் கடத்தி, பரிசோதனைக் கூடத்திற்குள் கொண்டு செல்கிறார்கள். அந்த டாக்டரை மிரட்டி மருந்தை குழந்தைக்குப் போடச் சொல்கிறார்கள். அவன் மருந்தை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே வேறொருவன் அவனை சுட்டுவிட்டு ஓடி விடுகிறான். அந்த டாக்டர் சொன்ன பாதியை வைத்து மருந்தை தேடுகிறார்கள். நண்பன் ஒரு மருந்தை எடுத்து குழந்தையை பரிசொதிக்கிறான். லேசான மாற்றம் தெரிகிறது. அரவிந்தன் அவனை வைத்தியம் செய்துக்கொண்டிருக்குமாறு சொல்லிவிட்டு, அவர்கள் சென்ற திசையை நோக்கி ஓடுகிறான்.

  குகையில் இருந்து வருபவர்களை கிராமமக்கள் துரத்துகிறார்கள். உடனே டாங்கிளியும் அவர்கள் ஆட்களும் துப்பாக்கியாலும், ஆயுதங்களாலும் அவர்களைத் தாக்குகிறார்கள். இதைப் பார்க்க முடியாத சுபா கத்துகிறாள். அவளை டாங்கிளி பார்க்கிறான். அவள் துப்பாக்கியை வாங்கி அவன் நண்பனை சுட முயல்கிறாள். அவன் நண்பன் அவளை கண்டு பயந்து ஓடுகிறான். சரியாக அவனுக்கு குறி வைக்கிறாள். அவன் கத்திக் கொண்டே ஓடுகிறான். திடீரென நகர்கிறான். துப்பாக்கி முனையில் அரவிந்தன் நிற்கிறான். அவன் கண்கள் அவளைப் பார்க்கிறது. அவள் மனது குழம்புகிறது. துப்பாக்கியை டாங்கிளியை நோக்கி திருப்புகிறாள். பின் அவனும் பார்க்கிறான். துப்பாக்கியை கிழேப் போடுகிறாள்.

  டாங்கிளி அதை எடுக்கப் போக, அரவிந்தனுக்கும் அவனுக்கும் சண்டை நிகழ்கிறது.இதற்கு நடுவில் கிராம வாசிகளை டாங்கிளியின் ஆட்கள் தாக்குகிறார்கள். அரவிந்தனுக்கும் டாங்கிளிக்கும் சண்டை தீவிரமாகிறது. டாங்கிளி குகைக்குள் ஓடுகிறான். அரவிந்தனும் அவனைப் பின் தொடர்கிறான். எல்லோரும் அந்த குகையையேப் பார்க்கிறார்கள். நீண்ட நேரமாக எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருக்கிறது. 

  திடீரென டாங்கிளி வெளியே வருகிறான். சுபா முகம் அதிர்ச்சியாகிறது. அரவிந்தன் என்று துடிக்கிறாள். கிராம வாசிகள் எல்லோரும் திரும்பவும் நமக்காக ஒரு இந்தியன் உயிரை விட்டு விட்டானா ?என்றபடி கவலையுடன் பார்க்கிறார்கள். இவர்களை தாக்கும் டாங்கிளியின் ஆட்களும் அதிர்ச்சியாகப் பார்க்கிறார்கள்.

  சுபா அரவிந்தன் வந்துவிட மாட்டானா என்று குகையின் வாசலையேப் பார்க்கிறாள். கிராம வாசிகளும் அங்கையே பார்க்கிறார்கள். திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்கிறது. டாங்கிளியின் பார்வையால் அவனுடைய தலைவனையே ஒருவன் சுட்டுக் கொன்று விடுகிறான். டாங்கிளி ஒவ்வொருவரையும் பார்க்கிறான். எல்லோரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கினறனர்.
  சுபா, கிராம வாசிகள் அதனை ஆச்சர்யமாக்ப் பார்க்கிறார்கள். எல்லோரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு மடிகின்றனர். திடீரென குகைகுள் பிரம்மாண்டமான வெளிச்சம் குண்டு வெடிக்கும் சத்தம். அந்த வெளிச்சத்தில் இருந்து அரவிந்தன் வெளியே வருகிறான். அவன் அருகில் இருந்து சுபா நண்பன் விலகி நிற்கிறான்.
  அரவிந்தன் டாங்கிளியை பார்க்கிறான். டாங்கிளி அவனையேப் பார்க்கிறான். அப்படியே தரையில் விழுந்து வணங்குகிறான். வணங்கியன் தரையில் இருக்கும் துப்பாக்கியை எடுத்து தன்னையே சுட்டுக் கொண்டு மடிகிறான். எல்லோரும் ஆச்சர்யமாக் அரவிந்தனையே பார்க்கிறார்கள். அவன் பின்னேயிருந்து இரண்டு பக்கமும் இருந்து இரு குழந்தைகள் வெளியே வருகிறார்கள். ஓடி வந்து தன் தாய்மார்களைக் கட்டிக் கொள்கிறார்கள். கிராமவாசிகள் அத்தனைப் பேரும் அரவிந்தனை வணங்குகிறார்கள்.

  சுபா பிரம்மிப்பாய் பார்க்கிறாள். அவள் சொன்ன விஷயங்கள் மனதில் ஓடுகிறது. போதி தர்மனின் மரபணுவை தூண்டினால் பழைய திறமைகளை வெளிக் கொண்டு வரலாம்.”  “ யோசித்தபடியே அவனருகில் சென்று அவனை பிரம்மிப்பாக பார்க்கிறாள்.
   எப்படி...?
  நீ என் கிட்ட செயறகையா சில விஷயங்களை தூண்டி விட நினைச்ச...
  ஆனா நீ தூண்டிவிட்ட இயற்கையான காதல் தான் எனக்குள்ள இருக்குற எல்லா திறமையையும் தூண்டிவிட்டுருச்சு...
  என் காதலை முட்டாள் தனமுன்னு சொல்லிட்ட ஆனா அது தான் இயல்பு டீ.என்று சொல்லும் பொழுது சுபா அவனை அணைத்துக் கொள்கிறாள்.
  என்னுடையது தான் பைத்தியக்காரத்தனம். என்று சொல்லி முடிகிறாள். நம் முன்னோர்களின் மரபணுவை தூண்டறதை விட அவர்கள் காலத்திய இயல்பான வாழ்க்கைமுறையை கடைப்பிடிசசா போதும் என்று சுபா  சொல்லிக் கொண்டிருக்க...
  பெரியவர் வருகிறார். அரவிந்தன் அவருக்கு வணக்கம் சொல்கிறான். இந்த முறை நாங்கள் உங்களை, உங்கள் நாட்டிற்கு செல்ல தடுக்கப் போவதில்லை என்று சொல்கிறார்.எல்லோரும் சிரிக்கின்றனர்.
                            
                               முற்றும்  
                                                      என் கற்பனையில்...