10.13.2011

சமூக ஒழுக்கம்: பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில்.



ஜம்மூ காஷ்மீர் தொடர்பாக,பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்தால் கோபமடைந்த இரு வாலிபர்கள் அவரை அடித்து உதைத்தனர். சுப்ரீம் கோர்ட் சேம்பரிலேயே இந்த சம்பவம் நடந்தது.
பத்திரிக்கையில் ஒரு செய்தி, படித்துவிட்டு மக்கள் உச் கொட்டிவிட்டு சிறிது நாட்களில் மறந்துவிடுவர். ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய தண்டைனையைப் பற்றி கருத்துத் தெரிவித்ததில் நடந்த வன்முறை செயல் இது. தூக்குத் தண்டையை ரத்து செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும் சில இடங்களில் போராட்டம் நிகழ்ந்தது. ஜம்மூவிலும் அதைச் சார்ந்தே போராட்டம் நிகழ்கிறது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஒரு வழக்கறிஞர் மேல் தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.
இதைப் பற்றி விவாதிக்கும் முன் ஒரு சமூகத்திற்கு தண்டனை அவசியம் தானா? அப்படி தண்டனை தர வேண்டுமெனில் அது அந்த சமூகத்தை நெறிப்படுத்தும் வகையில் தானே அமைய வேண்டும். மேலும் மேலும் அந்த சமூகத்தை குற்றங்களின் இருப்பிடமாக ஆக்கும் தண்டனைகள் தேவை தானா?
தனிப்பட்ட ஒரு மனிதனின் கருத்தை பொறுக்க முடியாமல், இரு வாலிபர்கள் கருத்து தெரிவித்தவர் மேல் வன்முறைச் செயலில் ஈடுபட்டது கண்டிக்கத் தக்க செயல் என்று எல்லா தலைவர்களூம் சொல்கிறார்கள். உண்மையில் யாரை கண்டிக்க வேண்டும். அந்த வாலிபர்களும் இந்தியர்கள் தானே?
அப்படியிருக்க யாரைக் கண்டிப்பது? அந்த வாலிபர்க்ளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியரை கண்டிக்கலாமா? இல்லை அவர்களின் பெற்றோர்களையா? நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது இந்த அரசாங்கத்தையே...
ஒழுக்கமற்ற இது போன்ற செயல்கள் கல்வியற்ற சமுதாயத்திலேயே நிகழும். தரமான கல்வி இதுப் போன்ற வாலிபர்களை என்றுமே உருவாக்குவதில்லை. இதுப் போன்ற செயல் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.இந்தியா மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் இதுப் போன்ற செயல்கள் அரங்கேறுவது கல்வியற்ற சமூககத்தின் பிரதிபலிப்பே...
வெறும் புத்தகப் பாடம் மட்டும் நல்ல கல்வியைக் கொடுத்துவிட முடியாது என்று எந்த சமூகம் சிந்திக்கிறதோ, அந்த சமூகமே தண்டனைகளையும் சமூகத்தின் வளர்ச்சிக்கான வழிகளாக மாற்ற முடியும். தண்டனைகள் பற்றி சிந்திக்கும் முன் நாம் முதலில் சிந்திக்க வேண்டியது, நம் நாட்டு கல்வியின் தரமற்ற நிலையையே...
அரசாங்கம் நல்ல கல்வியை கொடுக்கத் தவறியதால் தான். தெருவுக்கு தெரு தேனீர் கடைப் போல் கல்விக் கடைகள் பெருகிவிட்டது.ஒழுக்கமற்ற சமூகத்தின் பிரதிபலிப்பு இது. இதனால் தான் இப்படிப்பட்ட ஒழுக்கமற்ற வாலிபர்கள் இந்த சமூகத்தில் உருவாகிறார்கள். இந்த விசயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவே தெரியவில்லை. அப்படியிருந்திருந்தால் நிறைய தன்னார்வ தொண்டு நிறுவங்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லையே...
ஒரு தண்டனை ஒரு முறைக்கு மேல் ஒரு சமூகத்தில் தரப்படுகிறதென்றால், அந்த சமூகத்தில் ஒழுக்கம் சீர் கெட்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.சமூக ஒழுக்கத்தை தண்டனைகள் மூலம் என்றுமே உருவாக்கிவிட முடியாது. ஏனெனில் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களைவிட, தண்டிக்கப்படாமல் இருக்கும் நிறையப் பேரிடமே சமூக ஒழுக்கம் சீர் கெட்டிருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு நம் பாராளுமன்ற கூட்டத்தையே நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படியிருக்க யாரையாவது தண்டிப்பதன் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா?
நல்ல கல்வியின் மூலமே சிறந்த ஒழுக்கத்தை தந்திட முடியும். ஒரு சமூகத்தின் ஒழுக்கம் மேன்மையடைந்தால், நிச்சயம் அந்த சமூகத்தின் தவறுகள், அங்கு திருத்தப்படும், தண்டிக்கப்படாது.
 2020ல் இந்தியா வல்லரசாகவோ, எதுவாகவோ ஆகட்டும், ஆனால் எப்பொழுது ஒழுக்கமுள்ள சமூகத்தை உடைய நாடாக இந்தியாவை மாற்றுவது...
அரசாங்கம் மட்டுமின்றி மக்களும் சிந்திக்க வேண்டிய விசயம். இந்தியாவின் எல்லா மக்களும் கல்வியில் தன்னிறைவு அடையாதவரை இந்தியா தன்னிறைவு பெறற நாடாகவே இருக்க முடியாது.
”எங்கள் நாட்டில் தண்டனைகளே இல்லை” என்று மார்த்தட்டி நாம் எப்பொழுது சொல்கிறோமோ, அப்பொழுது பெருமைக் கொள்வோம் இந்தியர் என்பதில். அது கனவு தான். வல்லரசு கனவோடு இந்த கனவையும் சேர்த்து காணுவோமே...

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts