3.07.2012

காதலில் சொதப்புவது எப்படி ? ஆண் பெண் விவாத களம் – சினிமா


                  இது விமர்சனம் அல்ல ஒரு விவாதம்....
     தன்னுடைய பொறியியல் படிப்பைத் துறந்து சினிமாத் துறையில் நுழைந்து ஒரு கவனிக்கத் தக்க ஒரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.
     சித்தார்த், அமலாபால் நடிப்பில் நிரவ் ஷா ஒளிப்பதிவில், தமன் இசையில் ஒரு ரசனையானத் திரைப்படம்.
     காதலில் சொதப்புவது எப்படி ? யூ ட்யூபில் நிறைய முறைப் பார்த்திருக்கிறேன். இருந்தும் இதைத் திரைப்படமாக எடுக்க முடியும் என்பது இயக்குனர் எடுத்தப் பிறகு தான் யோசிக்க முடிகிறது.
     இந்தப் படத்தின் கதை, தலைப்பிலேயே இருக்கிறது. இளைஞர்கள் முதல் கொண்டு வயோதிகர் முதல், காதலில் எப்படி சொதப்பி வாழ்க்கையை சூன்யமாக்கிக் கொள்கிறார்கள் என்பது தான் கதையின் சாராம்சம். இதை எந்தளவு நகைச்சுவைக் கலந்து சொல்ல முடியுமோ அந்தளவு நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
     இந்தப் படத்தில் நகைச்சுவை, காதல் நட்பு எல்லாவற்றையும் மீறி ஒரு நிகழ்வு இயக்குனருக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. அது காதலைப் பற்றிய விவாதம். சித்தார்த் கடற்கரையில் அமர்ந்து பூஜாவுடன் பேசும் காதலைப் பற்றிய விவாதம்.
     பொதுவாக ஒரு பெண்ணோ! ஆணோ! தங்களுடைய காதல் முறிந்துவிட்டால் அழுது புலம்புகின்றனரே ஒழிய அதைப் பற்றி ஆழமாக யோசிப்பதே இல்லை. தன்னுடைய முதல் காதலின் முறிவைச் சொல்லியே இரண்டாவதைப் புதுபித்துக் கொள்ளும் நுணுக்கம் தான் இன்று நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதைத் தாண்டிய காதலைப் பற்றிய விவாதம் ஒரு ஆண் பெண்ணிற்கு இடையில் நட்பு ரீதியாக நடந்ததில்லை.

     உண்மையில் அதற்கு இந்த அவசர சூழலும் விடுவதில்லை. அதற்குள் அந்தப் பெண்ணிற்க்கோ, ஆணிற்க்கோ பழகுவதற்கு இன்னொரு நபர் கிடைத்துவிடுகிறார்கள். எனவே ஓப்பிடு என்ற ஒன்று அவர்களை அறியாமலேயே அவர்களுக்குள் வந்துவிடுகிறது. எனவே காதல் வேறொருவர் மீது சாய்ந்துவிடுகிறது. பிறகு பழைய உறவுப் போல் இதுவும் முறிந்துவிடுமோ என்றப் பயத்தில் ஆணும் சரி, பெண்ணும் சரி ஒரு வித அடிமை மனோபாவத்திலேயே உறவைத் தொடர்கின்றனர். எனவே தான் முக்கால் வாசி திருமணங்கள் இன்று விவாகரத்தில் முடிகிறது.
     இது இன்றைய பிரச்சினை இல்லை. அன்றும் பெண் பார்க்கும் படலத்திலும் அது நிகழ்ந்தது.பெண் பார்க்க வரும் முதல் மாப்பிள்ளை,பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிச் சென்று விட்டால், அடுத்த மாப்பிள்ளை என்ன சொல்லி விடுவானோ என்ற பயம் பெண் வீட்டாருக்கு வந்து விடுகிறது. எனவே அடுத்த மாப்பிள்ளையின் குறைகள் என்னவாக இருந்தாலும் அதை கண்டுக் கொள்ளாமல் பெண்ணை அவனிடம் பலிக் கொடுத்தனர், கொடுத்துக் கொண்டும் இருக்கின்றனர்.
     இந்த வழக்கம் ஒரு காலத்தில் பெண் மேல் திணிக்கப்பட்டது, இன்றோ பெண்களே தங்கள் மேல் துணிச்சலாக திணித்துக் கொள்கிறார்கள். முட்டாள் தனங்களை பெண்கள் மேல் திணித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் சென்று, இன்று பெண்களே தங்கள் மேல் முட்டாள்த் தனங்களை சுதந்திரம் என்றப் பெயரில் திணித்துக் கொள்கின்றனர். குடும்பம் சேர்ந்து முடிவெடுத்த ஒரு கருத்தை பெண் மேல் திணித்த காலம் போய் இன்று பெண்களே அந்த கருத்தை தங்கள் மேல் திணித்துக் கொள்கின்றனர். ஆண்களும் பெண்களும் குடும்பத்திற்க்காக காதலித்தவர்களைபுறகணித்த காலம் போய், இன்று தங்களின் சொந்த வெறுப்பு விருப்புகளுக்காக காதலித்தவர்களைப் புறகணித்துவிட்டு வேறொரு நபரை சார்ந்துவிடுகின்றனர். காதலில் இருபாலினருக்கும் சுயநலம் பெருகியதே இதற்கு காரணம்.
     காதல் என்பது தங்களின் சுயத்தை இழப்பது. அதில் நான் நீ என்ற பேதம் எங்கே வந்தது. அடிமைத் தனம் எங்கே வந்தது. காதல் என்பது கருத்துக்களே இல்லாத ஒரு தளமாகத் தான் இருக்கிறது. அங்கே கருத்து வேறுப்பாடு எங்கே வந்தது. ரசித்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வில் என்றுமே கருத்துக்கள் உருவாவதில்லை. ரசித்து முடிந்த பிறகு தான் அங்கே கருத்துக்கள் உருவாகிறது. ரசிக்கப்பட்ட  பிறகு கருத்து வேறுபாடுகளும் உருவாகிறது.
     அப்படியெனில் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரிடையே கருத்துக்களே உருவாவதில்லை. அந்த காதல் முடிந்தப் பிறகு தான் கருத்துக்களே உருவாகிறது, கருத்து வேறுபாடுகளும் உருவாகிறது. எனவே வாழ்வில் நாம் எப்பொழுதும் காதலித்துக் கொண்டிருக்கிறோமோ எனபதை சிந்திக்க வேண்டும். இல்லையெனில் காதலித்த நினைவுகள் பற்றி மட்டுமே பேசும் ஒரு உயிரற்ற சடலமாக நாம் மாறிவிடுவோம். நம் சமூகமும் இறந்த காலத்தை மட்டுமே சுமக்கும் கல்லரையாக மாறிவிடும். இது சங்க காலத்தில் நடந்த விவாதங்கள் தான்.
     ஆனால் அதற்கான முயற்சியை இயக்குனர் இந்தப் படத்தில் கையாண்டுள்ளார். சித்தார்த்திற்கும் பூஜாவிற்கும் நடக்கும் விவாதம் அதற்கான ஒரு சாட்சி. தன் காதலைத் எந்தவிதப் போலியுமின்றி நடுநிலையாக ஒரு பெண்ணுடன் நட்பு ரீதியிலாக அலசியிருக்கிறார். பூஜாவும் அவருடைய காதலை எந்தவித போலியுமின்றி சித்தார்த்துடன் பகிர்ந்துக் கொள்கிறார். இந்த ஒரு நட்பு ரீதியிலான ஒரு உரையாடல் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் சாத்தியமானால் காதல் தனித் தன்மையுடன் நிச்சயம் விளங்கும். நட்பும் தனித் தன்மையுடன் தப்பிக்கும்.   இல்லையெனில் ஒவ்வொருவரும், நொடிக்கொரு முறை லவ் பிரேக் அப் ஆயிடுச்சு என்று சொல்லி ஆளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கொடிய மிருகங்களிடமே அன்பு செலுத்தும் மனித இனம், தன் சக உயிரான, பெண்ணிடமும், ஆணிடமும் அன்பு செலுத்த முடியவில்லை என்பது தான் வருத்தத்திற்குரிய விஷயம்.
     சிங்கத்திடம் பழகும் பொழுது அதன் மிருகக் குணத்தை தூண்டும் நிகழ்வைத் தவிர்த்து விட்டால் எல்லா நேரங்களிலும் அது ஒரு உயிரினமாகவே நம்மிடம் பழகும். அப்படியிருக்க காதலிப்பவர்கள் ஆணோ பெண்ணோ காதலிப்பவர்களின் மனநிலை அறிந்து, சில விஷயங்களைத் தவிர்த்தால் அந்த உறவு ஆயுள் வரை சாத்தியப்படும். இந்த முறை அம்மாவிடம், சாத்தியப்படுகிறது, அப்பாவிடம் சாத்தியப்படுகிறது ஆனால் ஏன் காதலர்களிடம் சாத்தியப்படவில்லை.
     நான் ஏன் பொறுத்துக் கொள்ள வேண்டும், நான் ஏன் செய்ய வேண்டும். இப்படி நிறைய நான்’” ‘கள் காதலில் மட்டுமே வீரியமாக தலையெடுக்கிறது. காதல் என்பதே இயற்கை நம்மிடையே இருக்கும் நான் என்ற ஆணவத்தை அடக்கி ஆளும் பக்குவத்தை தரும் பாடம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் காதலில் தான் நான் என்ற ஆணவம் மிகுதியாகத் தலைத் தூக்குகிறது. எனவே அதை அடக்கிப் பக்குவப்படுத்தத் தெரியாதவர்கள் அடிமைத்தனம், ஆளுமைத் தனம் என்று சொல்லி விலகி ஓடி விடுகிறார்கள். இறுதியில் தன்னை ஆளும் ஒருத்தரையோ, இல்லை தனக்கு அடிமைப்பட்டிருக்கும் ஒருத்தரையோ தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.
      
     உண்மையில் இன்றைய சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இந்த படம் தெரிகிறது. இருப்பினும் ஒரு ஆணின் பார்வையாகயே இந்தப் படம் செல்கிறது. ஒரு பெண் எப்படி காதலில் சொதப்புகிறாள் என்பதை எப்படித் தெரிந்துக் கொள்வது...? இந்தப் படம் பெண்கள் இப்படி இருக்கிறார்கள், ஆண்களே தெரிந்துக் கொள்ளுங்கள் என்பதாக இருக்கிறது.
     இந்தப் படத்தில் சித்தார்த் பேசும் இடங்களை மட்டும் இயக்குனர் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருக்குமோ என்ற உணர்வு படம் பார்ர்கும் பொழுது தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இன்றைய இளைய தலைமுறையினரின் அச்சு அசல் காதலையும் நட்பையும் பிரதிபலிக்கும் படமாக இதைச் சொல்லலாம். 

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

3 comments:

  1. ஆகா, என்ன அலசல்!
    ரொம்ப பெரீ...ய எக்ஸ்பீரியன்ஸ் போல?

    ReplyDelete
  2. JZ உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  3. காதல் என்பது தங்களின் சுயத்தை இழப்பது. அதில் நான் நீ என்ற பேதம் எங்கே வந்தது. அடிமைத் தனம் எங்கே வந்தது. காதல் என்பது கருத்துக்களே இல்லாத ஒரு தளமாகத் தான் இருக்கிறது. அங்கே கருத்து வேறுப்பாடு எங்கே வந்தது. ரசித்துக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வில் என்றுமே கருத்துக்கள் உருவாவதில்லை. ரசித்து முடிந்த பிறகு தான் அங்கே கருத்துக்கள் உருவாகிறது. ரசிக்கப்பட்ட பிறகு கருத்து வேறுபாடுகளும் உருவாகிறது.
    அப்படியெனில் காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது இருவரிடையே கருத்துக்களே உருவாவதில்லை. அந்த காதல் முடிந்தப் பிறகு தான் கருத்துக்களே உருவாகிறது, கருத்து வேறுபாடுகளும் உருவாகிறது. எனவே வாழ்வில் நாம் எப்பொழுதும் காதலித்துக் கொண்டிருக்கிறோமோ எனபதை சிந்திக்க வேண்டும். இல்லையெனில் காதலித்த நினைவுகள் பற்றி மட்டுமே பேசும் ஒரு உயிரற்ற சடலமாக நாம் மாறிவிடுவோம். நம் சமூகமும் இறந்த காலத்தை மட்டுமே சுமக்கும் கல்லரையாக மாறிவிடும். இது சங்க காலத்தில் நடந்த விவாதங்கள் தான்.

    What a great writing I get excitement when i read this. thanks lot

    ReplyDelete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts