• 9.19.2012

  காதலும் கடவுளும்

         மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டிப் புனிதமானது... இது அடிக்கடி நிறைய காதலர்கள் மத்தியில் உச்சரிக்கப்படும் ஒரு வாசகம் தான். காதலர்கள் யாரிடம் கேட்டாலும் எங்களின் காதல் புனிதமானது என்று தான் சொல்கின்றனர். பிறகு சில வருடங்களிலோ,மாதங்களிலோ,வாரங்களிலோ, நாட்களிலோ காதல் தன் புனிதத்தை அவர்களிடன் இழந்துவிடுகிறது. அதே காதலர்களை கேட்டால், காதல் எல்லாம் வெறும் மாயை என்று சொல்கின்றனர்.

        காதலைப் போல் தான் கடவுளும், ஒவ்வொரு மதத்திற்கும், இனத்திற்கும், சாதிக்கும், குழுவிற்கும் கடவுள்கள் நிறைய இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப கடவுளை உருவகித்து கொள்கிறான். பிறகு எதோ ஒரு காரணத்தினால் அந்தக் கடவுளை புறக்கணித்துவிடுகிறான். இந்தப் போக்கு காதலிலும் கடவுள்களிலும் நிகழ்வது தான் ஒரு சமூகத்தின் கட்டமைப்பையே மாற்றுவதாக நான் எண்ணுகிறேன்.
        ஒரு சமூகத்தில் காதல் தான் ஒரு மனிதனுக்கு குடும்பத்தைத் தருகிறது. எனவே ஒரு சமூகம் உருவாக குடும்பம் அவசியமாகிறது. அதேப் போல் மனிதன் வாழ்வதற்கான நம்பிக்கையைத் தருவது கடவுள் தன்மை தான். கடவுள் இல்லை என்று சொல்வோரும் எதையோ நம்பிக் கொண்டு தான் வாழ்கின்றனர்.
        எனவே மனிதன் ஒரு குழுவாக சேர்ந்து வாழ காதலும் கடவுளும் அவனுக்கு அவசியமாகிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சியாக கருதப்படும் கலைகள் அத்தனையிலும் காதலும் கடவுளும் கலந்தே இருந்திருக்கிறது.
        நம்முடைய சிற்பக் கலையின் மிகச் சிறந்த உதாரணமான பதமி, எல்லோரா,மாமல்லபுரம் இன்னும் நிறைய சொல்லிக் கொண்டேப் போகலாம். இது அனைத்திற்கும் மூலம் இந்த காதலும் கடவுளும் தான். இலக்கியங்கள் முதல் கொண்டு அரசியல் சார்ந்த விஷயங்களிலும் இந்த காதலும் கடவுளும் பெரும் பங்கு வகிக்கிறது.
        இன்றும் கூட கடவுள் தன்மையை உள்ளடக்கிய கோயில்களின் பெயரால் சண்டை நிகழ்வதை நாம் பார்க்க முடிகிறது. அதேப் போல் காதலால் பெரிய சாம்ராஜ்யங்கள் உருவாகியும் இருக்கிறது. உருவிழந்தும் இருக்கிறது.
        சரி இது எல்லோரும் அறிந்த ஒன்று தானே இதில் என்ன புது விஷயமிருக்கிறது என்று கேட்கிறீர்களா..?
        ஆம் புதிதாக இதில் ஒன்றுமில்லை. ஆனால் இதில் காலந்தோறும் நிகழும் அறியாமையை நாம் விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால் சமூகத்தின் முன்னேற்றம் காலந்தோறும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது.   
        இங்கு காதலைத் தேர்ந்தெடுக்கவோ, கடவுளைத் தேர்ந்தெடுக்கவோ ஒரு மனிதனுக்கு சுயமாக அறிவுச் சார்ந்த சுதந்திரம் இருப்பதே இல்லை. சங்க இலக்கியங்களைப் புரட்டுகையில் மட்டுமே அந்த சமூகத்தில் கடவுளையும் காதலையும் தேர்ந்தெடுக்க மனிதனுக்கு சுதந்திரம் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. இருப்பினும் அதிலும் சில தடைகள் இருப்பதை அறிய முடிகிறது.
        குறிஞ்சி நிலம் சார்ந்த பெண்ணான வள்ளியை தமிழ்க் கடவுள் என்று போற்றப்படுபவரான முருகர் திருமணம் செய்துக் கொண்டார் என்றொரு புராணம் இங்கிருக்கிறது. இது காதல் என்பதை ஒரு இனம் சார்ந்து மட்டும் பார்க்கக் கூடாது என்று உணர்த்துவதற்காகவே முருகர் படைக்கப்பட்டதாக நான் கருதுகிறேன். சங்கம் மருவிய காலக்கட்டத்தில் தான் நம் தமிழகத்திற்குள் சமயங்களின் தாக்கம் அதிகரித்தது. எனவே இனம் சார்ந்த பிரிவினையுடன், சமயமும் சேர்ந்துக் கொண்டது. அந்த சமயங்கள் இன்று மிகப் பெரும் மதங்களாக உருக் கொண்டு மனித சமுதாயத்தையே அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது.
        கடவுளுக்கும் காதலுக்கும் ஆயிரம் விளக்கம் சொன்னாலும் ஒரு மனிதனால் இன்னும் இந்த இரண்டையும் சுதந்திரமாக உணர முடியவில்லை என்பது தான் உண்மை. ஏனெனில் காதலும் கடவுளும் வேறில்லை என்பதை மனிதன் இன்றும் உணராமலிருப்பதே அதற்கான காரணம்.        குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட கையில் பொம்மைகளை நாம் கொடுப்பது போல் தான். ஆன்மீகத்தில் குழந்தைகளாகிய  நம்மிடம் பல பொம்மைகளை ஆன்மீகவாதிகள் தந்திருக்கிறார்கள். குழந்தைகள் வளர்ந்தவுடன் பொம்மைகளை விடுத்து, வாழ்க்கையைப் புரிந்துக் கொள்ள தன் பொம்மைகளை தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடுகிறது. ஆனால் நாம் இன்னும் அந்தப் பொம்மைகளை வைத்துக் கொண்டு அடித்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் தான் என் பொம்மை தான் பெரிது, சிறந்தது என்று அடித்துக் கொள்ளும். அதேப் போல் தான் நாம் மதத்தின் பெயரால் என் கடவுள் தான் பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே நம் மக்களின் ஆன்மீக மனநிலை இன்னும் குழந்தைப் பருவத்திலிருந்து வளரவில்லை எனபதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
         காதலிலும் உருவங்கள் சார்ந்த வழிபாடு ஆரம்பத்தில் நிகழும். உடல் சார்ந்த ஈர்ப்பு, காமம் சார்ந்த செயல்கள், எல்லாம் காதலில் அடுத்தக் கட்டத்திற்கு மனிதன் பயணிப்பதற்கான ஒரு சிறு தூண்டல் தான். எனவே தான் கோவில்களில் கூட காமம் வழிந்தோடும் சிற்பங்களும், ஓவியங்களும் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
        இருப்பினும் நம் முன்னோர்களின் ( இங்கு நான் முன்னோர்கள் என்று சொல்வது உலக கலைஞர்கள் எல்லோரையும் சேர்த்தே... ஏனெனில் மனித கலாசாரத்தில் மிகவும் பழமையான பாரம்பரியமான கலாசாரத்தை உள்ளடக்கியது நம் பாரதமும், சீனாவும்,கிரேக்கர்களும்,ரோமானியர்களும் தான்.) வழியில் நாம் குழந்தைப் பருவத்திலிருந்து மீளாமல் பொம்மைகளுக்காக கடவுளின் பேரில் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். காதலின் ஆரம்பப் புள்ளியிலிருந்து மீளாமல் காமத்திலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
        இந்த கடவுள், காதல் சார்ந்த தேடல் நம்மிடையே நிகழ்வதை இன்றைய சமூக சூழலும் தடுத்துவிட்டது. இன்று சிறு செய்திக்கெல்லாம் மதக் கலவரம் நிகழ்வதும், காமம் சார்ந்த தவறுகள் பெருகுவதும் இதன் பொருட்டே... காதலையும் கடவுளையும் சரியாக புரிந்துக் கொள்ளாத சமூகம் இப்படிப்பட்ட பிரச்சினைகளால் சிக்கித் தவிப்பதை யாராலும் தடுக்க இயலாது.
        இது பகுத்தறிவற்ற வெறும் இயந்திரங்களாக மட்டுமே கடவுளையும் காதலையும் அணுகும் முறை, இன்று  நம்மிடையே உருவாகியிருப்பதைக் காட்டுகிறது.இது நல்ல சமூகத்திற்கான அடித்தளமாக என்றுமே அமையாது. இதற்கு இன்னொரு காரணம் பெண்ணை சுயமாக நாம் சிந்திக்க விடாமல் செய்தது.
        காதலிலும், கடவுளிலும் சம்பிரதாயங்கள் தொடர்வதற்கும், மாறுவதற்கும் பெண்ணே ஆதி மூலமாக செயல்படுகிறாள். ஆனால் அப்படிப்பட்ட பெண் சுயமாக ஒரு கடவுளை, காதலை தேர்ந்தெடுக்க நம் சமூகத்தில் அவளுக்கு சுதந்திரமில்லை. காரணம் இங்கு மனிதனுக்கே சுதந்திரமில்லை. எனவே தான் இந்த சமூகத்தில் பெண்ணடிமை புரையோடியிருக்கிறது.
        காதலையும் கடவுளையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாத சமூகத்தில் பெண்  மட்டும் அடிமையல்ல அங்கு வீசும் காற்றிலும் அடிமைத் தனம் கலந்திருக்கும். இதற்கு தீர்வுக் கண்ட சமூகமே தன்னிறைவான சமூகமாக மாற்றம் பெறும்.  
                                            
                                            காதலும் கடவுளும் தொடரும்  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே