• 10.16.2012

  கொஞ்சம் தமிழ் கொஞ்சும் காதல் (6)
  எனக்காக காத்துக் கொண்டிருந்த
  உன் விழிகளின் ஏக்கத்தை
  அந்த ஒளிக் கூட என்னிடம்
  சொல்ல முடியாமல் சீக்கிரம்
  கதிரவனை மேற்கு நோக்கி
  அனுப்பிக் கொண்டிருந்தது.
  வான் வெளி யெல்லாம்
  உன் விழிச் சிவப்பினைக்
  களவாடிக் கொண்டிருந்தது.
  உன் மெல்லியக் கைகள்
  பூக்களைக் கோர்த்துக்
  கொண்டிருந்தது.

  பூக்களோ உன் மெல்லிய
  விரல்களின் தீண்டுதலில்
  மெய் மறந்திருந்தது.
  பறிக்காத மலர்களைச் சுற்றித்
  திரியும் வண்டுகளோ
  உன் விரலிடுக்கில் தவழும்
  மலரை சுவைக்க உன்னைச்
  சுற்றிக் கொண்டிருந்தது
  உன் விரல்
  பட்டதால் அதில் தேன்
  மிகுந்திருக்குமென்று எண்ணியதோ
  வண்டு…
  நீயோ அதுப் புரியாமல்
  உன்னை மொய்த்த வண்டை
  விரட்ட உன் வலது கையால்
  முயன்றாய்…
  அந்நேரம்
  உன் கைகளிலிருந்த சில
  மலர்கள் கீழே சிந்தியது
  அதைப் பிடிக்க எண்ணி
  உன் இடது கைகளை
  அசைக்க மீதி மலர்களும்
  கீழே சிந்தியது.
  ஏமாற்றத்துடன் மலர்களை
  எடுக்க கீழே குனிந்தாய்
  அந்நேரம் தான் நான்
  உன்னை நோக்கி வந்தேன்
  அதை எடுக்காதே என்றேன்
  நீயோ என் குரல் கேட்டு
  நிமிர்ந்தாய்
  உன் சிவந்த விழிகள்
  ஆச்சர்யத்தில் மேலும்
  சிவந்தன
  அந்தப் பார்வையில்
  ஏன் என்ற
  கேள்வி இருந்தது
  நான் பதிலேதும்
  சொல்லாமல்
  கீழே குனிந்த உன்னை
  வலக்கரம் பற்றி எழுப்பினேன்.
  என் எதிரே தேவதைப்
  போல் நின்றிருந்த உன்னை
  அந்த மலர்களின் மீது
  நடக்கச் சொன்னேன்…
  நீயோ இதுக்குத் தானா
  என்று முகத்தைத் திருப்பிக்
  கொண்டாய்…
  மலர்களின் மேல் நீ நடக்கத்
  தயங்குகிறாய்…
  ஆனால் அந்த மலர்களோ
  உன்னை சுமக்கவே ஆசைக்
  கொண்டிருக்கிறது.
  நீ அதை சுமக்கும்
  பொழுதெல்லாம் கண்ணீர்
  சிந்துகின்றது
  பாவம் அதன் ஆசையை
  நிறைவேற்றேன்.
  என்றதும்
  உனது பார்வையில் சிந்திய
  குறுநகை இருக்கிறதே
  அந்நொடி உன் கன்னங்கள்
  லேசாக சிவந்திருந்தது.
  அதைக் கண்டிட
  கீழே சிதறிக் கிடந்த
  மலர்களெல்லாம் ஒரு
  முறை எம்பிக் குதித்திருக்கும்
  பொய்யரே …! மலர்கள்
  உங்களிடம் வந்து சொன்னதா…
  என்னை சுமக்க வேண்டுமென்று
  என்றாய் கிண்டலாக
  நானும்
  என்னது சொன்னதா…!
  கண்ணீர் விட்டது…!
  என்றென்
  அழகான கற்பனை தான்
  இந்த கற்பனைவாதிகளை
  காதலிப்பது மிகவும் ஆபத்து
  என்றாய் நீ…
  சரி என்ன செய்யலாம்
  அந்த கற்பனைத் தானே
  உன்னைக் காதலிக்கச் செய்தது
  என்றதும்
  சரி சரி இப்பொழுது இந்த
  மலர்களை என்ன செய்யலாம்
  என்றாய்
  நானோ சிரித்தபடி
  நீ மலர்களை சுமக்க
  அது சம்மதிக்கவில்லை
  மலர்கள் உன்னை
  சுமக்கவோ நீ சம்மதிக்கவில்லை
  சரி நான் உன்னை சுமக்கிறேன்
  என்று அப்படியே அவளை
  இரு கைகளில் தூக்கிக்
  கொண்டு நடக்க
  சீ…! இதுக்கு தான் இத்தனை
  பொய்கள்…! திருடா …!
  என்றாள் என் கையணைப்பில்
  இருந்தவள்
  பாவம்
  கீழே சிந்திய மலர்களோ
  என்னத் திட்டியது என்று
  சொல்லத் தான் முடியவில்லை
   தணிக்கை செய்யப்பட்டுவிட்டது…
  நட்புடன் 
  தமிழ்ராஜா