• 11.18.2012

  உள்ளத்தின் ஆழத்திலிருந்து…
  விழுந்தது மழைத்துளியோ!
  என் காதல் உயிர்த்துளியோ!
  உன் மேனித் தொட்ட துளிகளில்
  என் காதலுமுண்டோ…?

  இந்த பெண்மையின் மனதை
  ஒரு சொல்லினில் அறிய
  நீ முயற்சி செய்கிறாய்
  நீ முயற்சி செய்கிறாய்
  நானும் சொல்லிடுவேனோ…!
  எளிதில் நானும் சொல்லிடுவேனோ…


  கண்ணில் விழுந்தது போதும்
  நெஞ்சில் நுழைந்தது போதும்
  என் உயிரை விழுங்கியது போதும்
  நீ சொல்லிடு பெண்ணே…!
  உன் காதலை
  நீயும் சொல்லிடு பெண்ணே…!

  வயசும் சின்ன வயசு தான்
  மனசும் சின்ன மனசு தான்
  ஆசை நிறைய நிறையத் தான்
  உன்னை பத்தி ஆசை
  நெறய நெறயத் தான்
  எப்படி சொல்லிடுவேனோ
  வாய்த் திறந்து
  எப்படி சொல்லிடுவேனோ...!

  என்னிடம் என்னத் தயக்கமோ
  கண்ணிலே என்ன மயக்கமோ
  பேச்சிலே இன்னும் இறுக்கமோ
  மெளனத்தில் உனக்கு விருப்பமோ
  சொல்லிடு பெண்ணே!
  உனக்கு விருப்பமோ?

  மெளனத்தில் விருப்பமுமில்லை
  உன்னிடம் தயக்கமுமில்லை
  கண்ணிலே மயக்கமுமில்லை
  பெண்மையை நினைக்கையில் அன்பே
  உள்ளமே உளறுது இங்கே
  நீயும் அறிதிடுவாயோ
  என் நிலையை
  நீயும் அறிந்திடுவாயோ...?

  நானும் அறிந்திடுவேனே
  உன்னைப் புரிந்திடுவேனே
  உன் காதலை உணர்ந்திடுவேனே
  இருந்தும் உன் உதட்டினாலே
  ஒரு முறை சொல்லிடு பெண்ணே
  உன் காதலை சொல்லிடு பெண்ணே

  பெண்மையைப் பிரித்துப் பார்க்கிறாய்
  பெண்களில் நானும் ஒருத்தி தான்
  சொல்வதில் எனக்கும் நாணம் தான்
  இருப்பதில் குற்றம் உள்ளதோ
  உதிர்க்கும் வார்த்தை பெரியதோ
  நானும் பேசிடுவேனோ
  வாய் திறந்துப் பேசிடுவேனோ...!

  பூவிடம் பேசி மகிழ்கிறாய்
  நிலவிடம் என் காதல் சொல்கிறாய்
  என் முன் மட்டும் மெளனம் கொள்கிறாய்
  காதலிப்பது என்னைத் தானடி
  பூவும் நிலவும் நடுவிலேனடி
  சொல்லிடு பெண்ணே 
  என்னிடம் சொல்லிடு பெண்ணே...!

  காலங்கள் மாறியப் போதும்
  காவியங்கள் பல தோன்றிய போதும்
  பெண்களை காதலிக்கும் போதும்
  ஆண்கள் இன்னும் மாறவில்லையே
  பெண் மனது புரியவில்லையே
  விரும்பியும் அறியவில்லையே
  நீயும் மறுத்திடுவீரோ அதை
  நீயும் மறைத்திடுவீரோ...?

  மன்னிக்க வேணும்பெண்ணே
  மன்னிக்க வேணும்
  உன்னையறியாமல் பிழை செய்த
  என்னை மன்னிக்க வேணும்
  அதை மீறி தண்டிக்க நினைத்தால்
  சரியான தண்டனையை நீ
  எனக்கு தந்திட வேணும்

  சொல்லிடுவீரோ சொல்லால்
  எனைக் கண்கலங்கச் செய்திடுவீரோ
  மன்னித்திடவோ உன்னிடம்
  இதயத்தை ஏற்றேன்
  தண்டித்திடவோ உன்னிடம்
  இதயத்தை தந்தேன்
  காதலிக்கிறேன் உன்னை
  நான் காதலிக்கிறேன்
  உதட்டளவின் உச்சரிப்பல்ல
  ள்ளத்தின் ஆழத்திலிருந்து…

  நட்புடன் 
  தமிழ்ராஜா