• 1.30.2013

  விஸ்வரூபம் : சமூக அறியாமையின் எதிர்ப்பு குரல்
           இந்தப் படத்தை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவன் தன் சமூகத்தைச் சார்ந்தவனின் அறியாமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராடுகிறான். இதில் நாடு, மதம், இனம் தாண்டிய பார்வை இந்தப் படத்தில் தெரிவது தெளிவு. இதில் தமிழகம், இந்திய முஸ்லீம்கள் பற்றிய கருத்துக்கள் எதுவும் இல்லை என்று நான் சொல்லிக் கொண்டு இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கப் போவதே இல்லை.

           இது ஒரு சமூகத்தின் அறியாமை பற்றிய படமே… அந்த அறியாமை ஒரு கலாசாரமாக மாறும் அபாயத்தை தான் இந்த படம் தெளிவாகப் பேசுகிறது. முக்கியமாகப் பார்த்தால் இது இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு கலைஞன் எடுத்திருந்தால் இன்னும் இந்தக் கருத்து வலிமையாக சொல்லப்பட்டிருக்கலாம் என்பதே என் ஆதங்கம்.காரணம் கமலுக்கும் இந்தப் படத்திற்கும் வந்த எதிர்ப்பே..இருப்பினும் படத்தை பார்க்கையில் சில விஷயங்களெல்லாம் கமலுக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தோன்றுகிறது.
           மலாலயா என்ற ஒரு சிறுமி படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக அவளை சுட்ட ஒருவனின் அறியாமையைத் தான் இந்தப் படம் தெளிவாக விளக்குகிறது. மலாலயாப் போல் ஆப்கானிஸ்தானில் எத்தனை மலாலயாவின் அறிவு சீரழிக்கப்படுகிறது என்பதையும் இந்தப் படம் நமக்கு மறைமுகமாகச் சொல்கிறது. என்ன இந்தப் படத்தில் அவர்கள் சிறுவர்களாகக் காட்டப்படுவார்கள்.
          ஒரு ஆப்கான் தீவிரவாதி உமர் (ராகுல் போஸ்) அவன் உதவியாளன் சலீம் மற்றும் அவர்கள் குழு சேர்ந்து நியூயார்க் நகரில் ஒரு வெடிவிபத்து நடத்த திட்டமிடுகின்றனர். அதுவும் ஜப்பானில்   நடந்த அணு ஆயுத தாக்குதல் போல் ஒன்று. விஸ்வநாதன் விஸ்(கமல்) ஒரு நடனம் சொல்லித் தரும் கலைஞர். தன் மனைவி நிருபமா( பூஜா) ஒரு மருத்துவர்( அணுக்கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்).இவர் அமெரிக்காவில் படிப்பதற்காக தன்னை விட வயது அதிகம் உள்ள கமலை திருமணம் செய்து கொள்கிறார். நிருபமாவுக்கு கமலிடம் சற்றுக் கூட விருப்பமே இல்லை. எனவே தான் பணி புரியும் நிறுவனத்தின் தலைவருடன் அவளுக்கு காதல் நிகழ்கிறது. எனவே கமலிடம் எப்படியும் விவாகரத்து பெற்று விட முயல்கிறார். அதற்காக ஒரு துப்பறியும் ஆளை வைத்து கமலை வேவு பார்க்க அனுப்புகிறார். அங்கே தான் ஒரு திருப்பம் நிகழ்கிறது. கமலைத் தேடி வந்தவன் ஆப்கான் தீவிரவாதியிடம் மாட்டிக் கொல்லப்படுகிறான். அதன் பிறகு கமல் ஒரு இஸ்லாமியர் என்று தெரிய வருகிறது.
       கதை அதன் வேறு ஒரு பரிமாணத்தை அடைகிறது. கமல் ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடத்தில் இருப்பதாக காட்சிகள் நகர்கிறது. அங்கு காஷ்மீரை சேர்ந்தவனாக உமருக்கு அறிமுகமாகி அங்கேயே இருந்து அவர்களுடன் பயிற்சியில் ஈடுபடுகிறார். அவர்களின் நிலையை காட்சிப்படுத்திய விதம் உலகச் சினிமாவின் தரம். இதற்கு முன் இதுப் போன்ற காட்சியமைப்பினை பேபல் படத்தில் பார்க்க முடிந்தது. அதுவும் பதுங்கு குழியினை நான் பார்த்தது இதுவே முதல் முறை. உண்மையில் ஆப்கானிஸ்தானின் போர்த் தந்திரம் போற்றக் கூடியது தான். எத்தனை புதிய தொழில்நுட்பம் வந்தாலும் எளிதில் தெரிந்து கொள்ளும் திறன் அவர்களில் எல்லாருக்கும் இருப்பது, ஒரு கருவியை கண்டுபிடிப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவர்கள் மட்டும் ஜப்பானைப் போல் நாங்கள் இனி போர் செய்யப் போவதில்லை என்று தங்கள் மூளையை தொழில் மற்றும் சமூக வளர்ச்சியில் பயன்படுத்தினால், உண்மையில் அப்பொழுதும் உலகம் இவர்களை கண்டு அஞ்சும். காரணம் அத்தனை திறமைசாலிகள் இவர்கள் என்று இந்த காட்சியமைப்பு நம்மை சிந்திக்க வைக்கும். தமிழனுக்கல்ல, இந்தியாவிற்கே முதல் முறையாக ஆப்கான் மேல் ஒரு ஆழமான பார்வையை இந்தப் படம் ஏற்படுத்தும். 
         கதை ஆப்கானுக்கு சென்று திரும்பி அமெரிக்காவிற்கு வருகிறது.ஆப்கானில் அவர்களுடன் கமல் தங்குகிறார். அவர்களின் தாக்குதல் பற்றி அறிகிறார்.எனவே அதை தடுக்க அமெரிக்காவில் நடனகலைஞர் போல் வேடமணிந்து திவீரவாதிகளின் சதிகளை அறிகிறார். இதில் கமலுக்கு மேலதிகாரியாக இயக்குனர் சேகர்கபூர்.அவருக்கு உதவிச் செய்ய ஆண்ட்ரியா. இப்படி ஒரு கூட்டமே அமெரிக்காவில் மாறு வேடத்தில் அலைகிறது. உமரின் இந்த அணு ஆயுத தாக்குதலை கமல்,சேகர்கபூர்,பூஜா,ஆண்ட்ரியா, எஃப்.பி.ஐ. சேர்ந்து எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே மீதி கதை.
         ஒரு மனிதனாக ஆப்கான் மீதுள்ள கமலுக்கான அக்கறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதில் நிறைய இடங்களில் அமெரிக்கர்களின் சூழ்ச்சியை கமல் நாசூக்காக கிண்டல் செய்வது எத்தனைப் பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. இதுப் போல் தான் உலகத்தில் எல்லோரையும் விட ஆப்கானியர்கள் ஆங்கிலத்தை மட்டுமின்றி எந்த மொழியையும் திறமையுடன் பேசுவதில் வல்லவர்கள் என்பதை ஒரு காட்சி நமக்கு மறைமுகமாக வலியுறுத்துகிறது.இதுவும் எளிதில் புரியுமா என்பது சந்தேகமே…?
          உமரின் மகன் ஒரு இடத்தில் கமலின் முன் ஆங்கிலம் பேசும் பொழுது அவர் தனது மனைவியைத் திட்டும் காட்சி. ஆப்கானியப் பெண்கள் மீதுள்ள அடக்குமுறையை மட்டுமின்றி ஆப்கானியப் பெண்கள் எத்தனை திறமையானவர்கள் என்பதையும் நமக்கு வெளிப்படுத்துவதாக உள்ளது. டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று சொல்லும் மகனிடம் தந்தை கோபப்படும் பொழுது, அவர்களின் அறியாமை அப்படியே நமக்கு படம்பிடித்துக் காட்டப்படுகிறது.
         ஒரு குறிப்பிட்ட இடத்தில் உமரே கமலிடம் என் மகனை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கலாம் என்று கண்கலங்குவதும், அதற்கு கமல் ஜியாத் அழக் கூடாது என்று சொல்வதும் நம்மை திவீரவாதத்தை நோக்கி சிந்திக்க வைக்கும் காட்சிகள். இந்த இடத்தில் தான் கமல் ஆப்கான் மக்களின் வலியினை மிக ஆழமாக சொல்ல விழைகிறார். அதாவதுஎல்லாம் அல்லாவுக்காகத் தான் செய்றோம் என்று சொல்வது.  தன் தாயையும் தந்தையையும் கொன்றவர்களை பழி வாங்கும் எண்ணம் ஒரு சாதாரண மகனுக்கு இருப்பது போல் தான் ஆப்கான் மக்களுக்கும் இருக்கிறது. எனவே திவீரவாதம் என்பது அறியாமை தான் என்பதை இந்த காட்சி மூலம் சொல்ல முயன்றிருக்கிறார். இருப்பினும் அந்த பழி வாங்கும் எண்ணத்தை அடுத்த தலைமுறையின் மேல் திணித்துக் கொண்டே செல்வதினால் எந்த பயனும் இல்லை என்பதை காட்சிகளின் மூலம் பார்க்கும் ரசிகனுக்கு புரிய வைக்கும் முயற்சியே இதில் நிகழ்ந்திருக்கிறது.
          பெட்ரோல் பைப் போட்டால் அமெரிக்கன் கூட அல்லா யு அகபர்னு சொல்வான் என்று சொல்ல எத்தனை துணிச்சல் வேண்டும். அமெரிக்கர்களை பற்றி இப்படி தரக் குறைவாக விமர்சிக்க, அதுவும் குறிப்பாக இந்தப் படத்தில் செய்ய தனி துணிச்சல் வேண்டும். உண்மையில் இது அமெரிக்கர்கள் எதிர்க்க வேண்டிய படம். ஏனெனில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் காலகட்டத்து காட்சிகள் திரையில் விரியும் பொழுது, அவரின் பொம்மை உருவத்தை சுடுவது போன்ற காட்சியமைப்புகள் நம்மை யோசிக்கவே செய்யும்.
         முதல் காட்சியிலேயே தன் பிராமண மனைவிக்கு கோழி ரொம்ப பிடிக்கும் என்று மைக்ரோ ஓவனில் இருந்து கோழியை வேக வைத்து எடுக்கும் காட்சி, சைவ பிராமணர்களை முகம் சுளிக்க வைக்குமா…? தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக போலிகளின் முகத்திரையை கிழிக்கும். இப்படி சமூகத்தில் நிகழும் பலரின் போலி முகத் திரையை இந்தப் படத்தின் மூலம் ஒரு கலைஞனாக கமல் கிழித்தெறிந்திருக்கிறார்.
          தொழில் நுட்ப ரீதியில் படத்தின் தரத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கதையில் கமலுடன் அடுல் திவாரியும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இசை சங்கர்-ஏசாந்-லாய் (சங்கர் மகாதேவன்) (ஏசான் நூராணி) (லாய் மெண்டோன்ஸா). படத்தின் பின்னணி இசைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இன்னும் உலகத் தரத்திற்கு இணையாக செய்திருக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. படத் தொகுப்பு பற்றி சொல்லத் தேவையில்லை. காட்சிகள் கண் முன் நகரும் வேகத்திலேயே அது நமக்குத் தெளிவாக தெரிகிறது. மகேஷ் நாராயணன் புதிதாக தெரிகிறார் தமிழுக்கு…
        படத்தின் உயிரான ஒளிப்பதிவு தான் இங்கே இன்று இந்தப் படத்தைப் பற்றி நம்மை பிரம்மிப்பாகப் பேச வைத்திருக்கிறது. சிறப்பு ஒலி அருமை. என்ன 3டி ஆரோ ஒலியில் தான் கேட்க முடியவில்லை.குறிப்பாக கமல் தன் முடியை கத்தரித்துவிட்டு மாடிப்படிகளில் இருந்து இறங்கி வரும் காட்சியை அவருடைய மனைவி நிருபமா பார்த்து பிரமிப்பது நம்மையும் அதே உணர்வுக்கு தள்ளுகிறது. இப்படி கதையில் நம்மை பிரமிக்க வைக்க ஏகப்பட்ட இடங்கள் இருக்கிறது.
         இந்தப் படத்தை பார்ப்பவர்கள் அனைவருமே ஆப்கான் இஸ்லாமியர்களின் அமைதியான வாழ்விற்காக வேண்டுவார்கள்.அது மட்டுமின்றி அங்கு வாழும் பெண்கள், குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்கான கேள்விகளை எழுப்பிய முதல் இந்தியப் படம் இதுவென சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்க இந்தப் படத்தை பார்க்காமலே இதைப் பற்றி கருத்து சொல்வதும் இதை எதிர்ப்பதும்,நம் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. இன்று இந்தப் படத்திற்கான தடையை நீக்கியிருக்கிறார்கள். எனவே இந்தப் படத்தை பார்த்து பிறகு கருத்து சொல்வது சால சிறந்தது. ஒரு நடுநிலையாக இந்தப் படம் என்னை எப்படி பாதித்தது என்பதை இங்கெ எழுதிவிட்டேன். ஒரு  வேளை இந்தப் படத்திற்கு இப்படி எதுவும் எதிர்ப்பலைகள் வராமல் இருந்திருந்தால், இது வெறும் ஏ செண்டர் என்று சொல்லப்படும் ரசிகர்களை மட்டுமே ஈர்த்திருக்கும்.


         ஆனால் தற்பொழுது இது பி,சி வரை ஈர்த்திருக்கிறது. இருப்பினும் இது பி.சி செண்டரில் ஓடுவது என்பது கேள்விக்குறியே…? இதில் திரைக்கதையில் கமல் அவர்கள் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று என்னுடைய சின்ன கருத்து. அதை சமாளிக்கத் தானோ படம் நிறைவடைந்த பின்னரும், சில காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து நமக்கு விளக்கப்படுகிறது. அது மட்டுமின்றி தொடரும் எனவும் போடப்படுகிறது. நிறைய கேள்விகளுக்கு விடையில்லை. விஸ்வரூபம் உண்மையில் விஸ்வரூபம் தான்.ஆனால் அந்த ரூபம்  எத்தனைப் பேருக்குத் சரியாகத் தெரியும் என்பது தான் கேள்விக்குறியே… ெரிந்தால் அு உண்மையில் விஸ்வூபம் ான்.


  நட்புடன் 
  தமிழ்ராஜா