இதோ மேலுள்ள படங்களில் நம் அரசாங்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்க்கலாம். கீழே படிக்க என் முட்டாள் தனத்தைப் பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் அரசாங்கம் நடத்தும் சீட்டு கம்பெனியாகத் தான் எனக்குத் தெரிகிறது. 600 ரூபாய் கொடுத்தால் மாதம் முழுவதும் விருப்பம் போல் மாநகர பேருந்தில் பயணம் செய்யலாம் என்பது நவம்பர் 18ற்கு முன் இருந்த சட்டம்.
பயணிகள் அனைவரும் 17ந்தேதி வரை அந்த பயணச்சீட்டை 600 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டார்கள். 18ந்தேதி காலையில் தினசரிகளிலும்,தொலைக்காட்சி செய்திகளிலும், பேருந்து கட்டணம் ஏறி விட்டது என்ற அறிவிப்பு வருகிறது.
3 ரூபாய் கொடுத்த இடத்திற்கு 5 ரூபாய். இன்னும் நிறைய பயணச்சீட்டின் விலையில் மாற்றம். 600 ரூபாய் கொடுத்த அனைவரும் 20ந்தேதிக்குள் 400 ரூபாய் கட்டி புதுப்பித்துக் கொள்ளவும், பயணச்சீட்டின் விலை 1000 ரூபாய் ஆகிவிட்டது என்று அறிக்கை வருகிறது.
ஒரு பொருளை 15ந்தேதி வாங்கிவிட்டு 18ந்தேதி அதன் விலை ஏறிவிடுகிறது. 18ந்தேதிக்கு பிறகு வாங்குபவர்களுக்குத் தான் அந்த விலைப் பொருந்துமே தவிர அதற்கு முன் வாங்கியவர்களின் தலையில் அதைக் கட்டுவது எந்த வகை நியாயம். இது பகல் கொள்ளையல்லவா?
ஏற்றுவது என்று முடிவு செய்திருந்தால், பயணச்சிட்டை ஏற்றிய பிறகு கொடுத்திருக்கலாமே, அது வரை யாருக்கும் விலை ஏறுகிறது என்று கொடுக்காமல் நிறுத்தியிருக்கலாமே... விலை 1000 ரூபாய் என்று தெரிந்திருந்தால் சக்தி உள்ளவர்கள் வாங்கியிருப்பார்கள், இல்லாதவர்கள் வாங்காமல் விட்டிருப்பார்கள்.அது தானே சரியான நிர்வாகம்.
இதன் மூலம் பாதிக்கபடுகிறவர்கள் யார்? மாத வருமானத்தை சரியாக திட்டமிட்டு நடத்தும் நடுத்தரக் குடும்பங்கள் அல்லவா?
இது அரசாங்க நிர்வாகம் அல்லவே, தனியார் நிறுவனத்தையும் விஞ்சும் கொள்ளைக்காரத்தனம் அல்லவா? தமிழக மக்கள் ஒரு நல்ல நிர்வாக திறமை மிக்க ஒரு முதல்வர் தான் நம்மை ஆள்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தனர். அந்த கனவை எல்லாம் சில மாதங்களில் தன் முட்டாள்த் தனத்தினால் தவிடு பொடியாக்கிவிட்டதுப் போல் தான் தெரிகிறது நடக்கும் ஆட்சியின் செயல்கள்.
மீண்டும் 400 கட்ட வேண்டும் என்று சென்றால் 340 கொடுங்கள் போதும் என்று போக்குவரத்து துறையில் சொல்கிறார்கள். அங்கிருந்த ஒவ்வொருவரின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளில் சில” “ விலை வாசியை ஏற்றினால் தான் ஆட்சி நடத்த முடியும் என்றால் நானே முதல்வர் ஆகலாமே, அவர் தேவையில்லையே , இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தானே. இதில் என்ன நிர்வாகத் திறமை இருக்கிறது. அரசு நடத்த முடியவில்லையென்றால் எங்களிடம் பிச்சைக் கேட்டிருக்கலாம். இன்னும் நிறைய எழுத முடியாத அளவில் இருந்தது.
எனக்கு வயிற்றெரிச்சலை விட அவமானம் தான் மிகுதியாக இருந்தது. நியாயமல்லாத ஒரு முறைக்கு நானும் உடந்தையாக 340 கட்டும் இளிச்சவாயனாகவே என்னை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன். எப்படித் தட்டிக் கேட்பது என்றும் எனக்குப் புரியவில்லை.ஒரு தமிழனாக தலைநிமிர்ந்து அந்நொடி என்னால் நிற்க முடியவில்லை.
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
ஒரு வேண்டுகோள்.....
ReplyDeleteஎன்னைப்போன்று பலரும் பின்னூட்டங்கள் எழுதுவதற்கு ஆவலாய் இருக்க வாய்ப்புகள் உண்டு.... ஏன் அதை "proof reading" பார்த்துவிட்டுதான் வெளியிடப்படவேண்டும் என்றபடி அமைத்துள்ளாய்???
பின்னூட்டம் பிடிகாவிடில், அதை உன்னால் அழிக்க முடியுமே!!!!
@Karthikeyan.B
ReplyDeleteநண்பரே இது எனக்கு உண்மையில் இத்தனை நாள் தோன்றவில்லை. நிச்சயம் அதையே செய்கிறேன்.