• 12.15.2011

  எனக்கு உலகமாகவே தெரிகிறாள்


   
  அது ஒரு காதல் தருணம்
  மனம் எங்கிருக்கிறது என
  என் உயிரின் ஒவ்வொரு துளியும்
  ஆராய்ந்துக் கொண்டிருக்க
  அது உன்னிடம் இருப்பதாகவே
  என் உடலில் உள்ள
  கண்ணுக்குத் தெரியாத
  நுண்ணிய அணுக்கள்
  ஒவ்வொன்றும் சத்தம் போட்டு
  சொல்லிக் கொண்டிருந்தன
  என் ஆன்மாவின் இருக்கையான
  இந்த உடலிலும்,உயிரிலும் ஒரே
  சமயத்தில் மின்சாரம் பாய்ந்து
  என் ஒட்டு மொத்த உணர்ச்சியையும்
  உன்னை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தன
  உன்னைப் பார்க்கத் துடிக்கும் உணர்வும்
  உன்னைப் பார்க்க மறுக்கும் உணர்வும்
  எனக்குள்ளேயே என்னை இரண்டாகப்
  பிரித்துப் போட்டு எனக்குள்ளேயே ஒரு
  மிகப் பெரிய யுத்ததை நடத்திக் கொண்டிருந்தது
  உன் ஒற்றைப் பார்வையை சந்திக்கத் தான்
  என் பார்வையின் எந்த வீச்சும் துணியவில்லை
  இந்த பயம் என் உயிரில் வந்ததா
  இல்லை என் ஆன்மாவிலேயே வந்ததா
  இல்லை இது ஒட்டு மொத்த ஆணினத்திற்கே
  பெண்ணினத்தின் மேல் உள்ள பயமா…?
  உன்னிடம் எதனால் எனக்கு பயம்
  வருகிறது
  உன் பார்வையை சந்திப்பதை விட
  மரணத்தைக் கூட எளிதில்
  சந்தித்துவிடலாம் போல்
  இருக்கிறதே
  மரணத்தை காட்டிலும் அவ்வளவு
  கொடுமையானதா உன் பார்வை…?
  உலகத்தில் மிகக் கொடுமையான நொடிகள்
  நம்மை நாமே கேள்விக் கேட்டுக்
  கொண்டு பதிலை நாமே
  உருவாக்கிக் கொள்வது தான்
  அந்த கொடுமையும் உன்னால் என்னுள்
  நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது
  ஒரு வேளை இது மறுபிறப்போ
  ஒரு பெண்ணில் இருந்து இந்த உயிர்
  உருவம் பெற்றது போல்
  உன்னில் இருந்து இந்த உருவம்
  புது உயிர் பெறுமோ
  அந்த உணர்வால் தான் என்னால்
  உன்னை நோக்கி செல்லும் பார்வையை
  தடுக்க இயலவில்லையோ
  என் உயிருக்கு புது உருவம்
  தரப் போகிறாயா?
  இல்லை என் உருவத்தில் உள்ள
  உயிரை எடுக்கப் போகிறாயா…?
  மருத்துவனைக் கண்டு நோயுற்றவன்
  தன் நிலையை சொல்லத்
  தயங்குவது போல்
  உன்னைக் கண்டு என்
  மனநிலையை சொல்லத்
  தயங்கிக் கொண்டிருக்கிறேன்
  எப்படிச் சொல்வதடி உன்னிடம்
  இந்த உலகத்தில்
  நீ மட்டும் தான்
  எனக்குப் பெண்ணாய் தெரிகிறாய்
  ஒரு பெண் மட்டும் தான் 
  எனக்கு உலகமாகவே
  தெரிகிறாள்  என்று  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே