ஐந்து ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு நான் சென்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த முறை மட்டும் தான் நிறைய ஆசைகளுடன் சென்று குறைந்தப் புத்தகங்களுடன் திரும்பினேன்.என்னை கல்லூரி நாட்களுக்குப் பிறகு எந்த பொருளும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் புத்தக கண்காட்சி என்றால் மட்டும் நான் பைத்தியமாகிவிடுவேன். எல்லாப் புத்தகங்களையும் வாங்கிவிடும் பேராசை என்றுமே எனக்கு உண்டு.
ஒவ்வொரு முறை புத்தகக் கண்காட்சி நடக்கும் பொழுதும் குறைந்தது மூன்று நாட்களாவது நான் அங்கு சென்று புத்தகங்களுடன் செலவிடுவது வழக்கம். இந்த வருடமும் மூன்று முறை அங்கு செல்ல நேர்ந்தது. ஆனால் மூன்று முறையும் என்னுடன் ஒவ்வொரு நண்பர் வந்தார்கள். ஏனெனில் எனக்குப் புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் என்னை துணைக்கு அழைத்துக் கொண்டு இரண்டு முறை ஒரு நண்பரும், ஒரு முறை இன்னொரு நண்பரும் புத்தகங்கள் வாங்க சென்றார்கள்.
அதில் இரண்டு முறை என்னை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்ற நண்பனின் நிலை தான் பரிதாபம். ஒவ்வொரு ஸ்டாலில் இருந்தும் என்னை கிளப்ப மிகவும் சிரமப்பட்டான். அவனுக்கு பொன்னியின் செல்வன் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் இந்த வருடம் ஏற்பட்டுவிட்டது. எனவே ஒவ்வொரு கடையாக பொன்னியின் செல்வனைப் பார்த்துக் கொண்டு வந்தான். இந்த வருடம் போன வருடத்தை விட நிறைய கடையில் பொன்னியின் செல்வனைப் பார்க்க முடிந்தது. அதுவும் ஆனந்த விகடன், இந்த வருடம் ஓவியர் மணியனின் ஓவியங்கள் அடங்கிய பொன்னியின் செல்வனை வெளியிடப் போவதாக சொன்னதும் அதற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இதை சிலப் பதிப்பங்களும் செய்தது அந்த புத்தகக் கண்காட்சியில் தெரிந்தது. ஆனந்த விகடன் அல்லாத சிலப் பதிப்பகங்களும் ஓவியங்கள் அடங்கிய பொன்னியின் செல்வன் பிரதியை வைத்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு இடையில் லியோ டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் பிரம்மாண்டமாக காட்சித் தந்தது.
என்னுடைய நண்பன் பொன்னியின் செல்வனின் ஒரு பாகத்தை எடுத்து இடையில் ஒரு பக்கத்தை திறந்து “ அவன் புரவி மீதேறி எதிரே என்று படித்தான். படித்துவிட்டு ” “புரவி “ என்று என்னைப் பார்த்தான். நான் குதிரை என்றேன். திரும்பவும் ஒரிரு வரிகள் படித்துவிட்டு என்னைப் பார்த்து
“ டேய் இது மாதிரி தானே கதை முழுக்க இருக்கும், ரொம்ப இலக்கியத் தமிழ்ல இருக்கப் போகுதுடா...”, என்று கேட்டான். நான் படிக்க படிக்க உனக்கு பழகிடும்டா முதல்ல வாங்கு என்றதும். அங்கிருந்த ஒரு பெண் சாண்டில்யனின் யவன ராணியை அவனுக்கு காட்டிவிட்டாள். அவன் அதைப் பற்றி கேட்க, அதனுடைய முழுக் கதையையும் ஒரிரு வரிகளில் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். என் நண்பன் அவள் சொன்னவிதத்தில் ஆழ்ந்து கல்கியையும், சாண்டில்யனையும் மாறி மாறிப் படிக்க ஆரம்பித்துவிட்டு பொன்னியின் செல்வனையும், யவன ராணியையும் எடுத்துக் கொண்டான். மீண்டும் சாண்டில்யனின் கடல் புறாவைக் காட்டி நல்லா இருக்குமாடா என்று கேட்டான். நான் என்ன சொல்வது, ராஜேஷ்க் குமாரின் திரில்லர் நாவல்கள் போல் இருக்குமா என்று அவன் எதிர்ப்பார்ப்பது எனக்கு மட்டும் தானே தெரியும். இது வரை ராஜேஷ் குமார் நாவல்களைத் தவிர வேறு கதையை அவன் படித்ததில்லை. எனவே அவன் வெகு கவனமாக இருந்தான்.
முதலில் பொன்னியின் செல்வனையும், யவன ராணியையும் முடி பிறகு கடல் புறாவைப் படிக்கலாம் என்றேன். அவன் அதையும் வாங்கிக் கொண்டான். பிறகு அந்த புத்தகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தான்.
நான் எடுத்துப் பார்க்கும் புத்தகங்களைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டு வந்தான். ஜெயமோகனின் ” “காடு” “ நாவலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எப்படி இருக்கும்டா? என்றான். நான் கடவுள், அங்காடித் தெரு படங்களுக்கெல்லாம் வசனம் எழுதியவருடைய புத்தகம் இது என்றேன். விறுவிறுன்னு போகுமா ? என்றான். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. இருப்பினும் ஒரு 9 வருடங்களுக்கு முன் என்னுடைய மனநிலையும் அப்படித் தான் இருந்தது என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நண்பனின் கேள்விகளையும் தாண்டி இந்த வருடமும் என் கண்களில் பட்டு நான் வாங்க இயலாத புத்தகங்கள்
காடு, விஷ்ணுப்புரம் – ஜெயமோகன்.
உபபாண்டவம் , யாமம், சிறிது வெளிச்சம் -- எஸ். ராமகிருஷ்ணன்
மோகமுள்,அம்மா வந்தாள், மரப்பசு – தி. ஜானகிராமன்
துறவாடைக்குள் மலர்ந்த காதல் மனம், அந்தக் கதவு மூடப்படுவதில்லை – பிரபஞ்சன்,
தேவகானம் - அப்துல் ரகுமான்.
குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் , ஜே.ஜே.சிலக் குறிப்புகள்-சுந்தரராமசாமி
அகநானூறு, சிலப்பதிகாரம், 401 கவிதைகள், இரண்டாவது காதல்- சுஜாதா
காதல் வெண்ணிலா, உடையார் - பாலக்குமாரன்
கன்னி – பிரான்சிஸ் கிருபா
ஒரு முறை தான் பூக்கும் – ஸ்டெல்லா புருஸ்
அன்னா கரினினாவின் காதல் கதை – லியோ டால்ஸ்டாய்.
காவல் கோட்டம் – சு. வெங்கடேஷன்.
உடலின் கதவு – குட்டி ரேவதி.
உடலின் கதவு – குட்டி ரேவதி.
இன்னும் நிறையப் புத்தகங்கள் இருக்கிறது.என் நண்பன் அதற்கு மேல் பொறுமையாக இல்லாததால் அவனுக்காக அடுத்த வருடம் இன்னும் வாங்க வேண்டிய புத்தகங்களை கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
இன்னொரு விஷயம் நான் வாங்கியப் புத்தகத்தைப் பற்றி உங்களுக்கு சொல்லவில்லையே. அது எப்படிச் சொல்வது, நீங்கள் அதை கேட்டுவிட்டீர்கள் என்றால் நான் என்ன செய்வது...?
வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே
வாங்க வேண்டியதே இவ்வளவு புத்தகங்கள் என்றால்... வாங்கியது எவ்வளவு இருக்கும்....?
ReplyDeleteவாங்கியது மிகவும் குறைவு தான். அதை தான் முதலிலேயே எழுதியிருக்கிறேனே...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me
ReplyDelete