• 7.30.2012

  நான் ஈ : ஒரு கலைஞனின் துணிச்சலான முயற்சி

       இந்திய திரையுலகிலேயே முதல் முயற்சி என்று நான் ஈயைச் சொல்லலாம். இது வரை வந்த எந்தத் திரைப்படங்களிலும் இல்லாத அளவு காட்சியமைப்புகளுக்காக 90 நிமிடங்கள் கிராபிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
       ஹாலிவுட்டெல்லாம் பெரிய பெரிய மிருகங்களை வைத்து மிரட்ட ஒரு ஈ யை வைத்து மிரட்டியிருக்கிறார் ராஜ மெளலி.
  நம் இந்திய சினிமாவை இந்தப் படம் மூலம் அடுத்த கட்டத்திற்கு  எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
       இந்த கதையைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஒரு வரியில் சொல்லிவிடலாம். பழி வாங்கும் கதை.
       தன் காதலி மேலுள்ள் ஆசையினால் தன்னைக் கொல்லும் ஒருவனை ஈயாக மறுபிறவி எடுத்து வந்து கொல்லும் கதை தான் நான் ஈ.
       சுதீப்,நாணி, சமந்தா என்ற மூன்றே கதாப்பாத்திரங்களுடன் ஈயையும் சேர்த்து நான்கே கதாபாத்திரங்களில் இயக்குனர் கதையை நகர்த்தியிருக்கிறார்.
       சுதீப் எனக்குத் தெரிந்த அளவில், இவர் இது வரை வில்லனாக வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் அந்த கதாப்பாத்திரத்தை பின்னியெடுத்திருக்கிறார். தேசிய விருதெல்லாம் சிரிக்க வைக்கும் வில்லனுக்கு கொடுக்க மாட்டாங்களா என்று அடுத்த வருடம்  விருது குழுவினர் ரசிகர்களை கேட்க வைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவு சுதீப் இந்த கதையில் பொருத்தமாக நடித்திருக்கிறார். என்ன ஒரு உடல் மொழி....
       நானி என்ன சொல்வது, மனதை வருடுகிறார். டார்ச் வெளிச்சம் மூலம் சமந்தாவிற்கு ஒளியைக் காட்டும் காட்சியில், சமந்தாவிறகு ஒளியைக் காட்டிவிட்டு அவர் நன்கு பிரகாசிக்கிறார். அவ்வளவாக காட்சிகள் இல்லையென்றால் மனதில் நிற்கிறார். 

       சமந்தா சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி, கலை நுணுங்களை நம் கண் முன் கொண்டு வந்து நம்மை பெரிதாக கவர்கிறார். நானியின் காதலை ஏற்றுக் கொண்டதற்கு அர்த்தமாக அவள் உதிர்க்கும் சிரிப்பும், நானியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் சிந்தும் கண்ணீரும் நம்மை உருக்குவது உண்மை. ஒரு ஈ யையே உருக்கியிருக்கு நம்மை உருக்காதா என்று படம் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.
       ஈ... பெரிய பெரிய கதாநாயகர்களுக்கு வரும் ஆரம்பக் காட்சி வரவேற்புப் போல் இந்த ஈக்கும் திரையரங்கில் மிகுந்த வரவேற்பு. அந்த சின்ன இல்லை பெரிய முட்டையை உடைத்து ஈ ஒரு காலை வெளியில் வைத்தவுடன் திரையரங்கமே அதிர்கிறது கைத் தட்டலில்...
       பெரிய பெரிய கதாநாயகர்களை மிஞ்சும் அளவு ஈக்கு கைத் தட்டல் கிடைத்தது திரையுலகில் வரவேற்கத் தக்கது. இந்த முயறசியை முதல் முறை துணிச்சலாக செய்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்
       மற்றபடி இதில் பங்கேற்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியிருக்கிறார்கள்.
       எந்தக் காட்சியையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு பிரமிக்க வைக்கிறது. இறுதிக் கட்டக் காட்சியில் கண்ணாடித் துகள்களுடன் ஈ பறந்து வரும் பொழுது அதன் உருவம் எல்லா கண்ணாடி துகள்களிலும் பிரதிபலிப்பது கற்பனைக்கு தீனி. சம்ந்தாவின் கண்ணீரில் ஈ தன் பெயரை எழுதிக் காட்டிப் புரிய வைப்பது. ஒவ்வொரு முறையும் இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு சுதீப்பை வெறுப்பேற்றுவது.அது மட்டுமின்றி இடைவெளியின் அசத்தலான மிரட்டல், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்
       நெடு நாட்கள் கழித்து திரையரங்கிற்குள் சென்று திருப்தியுடன் வெளிவந்தேன்.  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே