• 7.29.2012

  என் காதல் காலம்


   
  ஒவ்வொரு மழைக் காலத்திலும் 
  பெய்கிற மழைத் துளிகள் 
  ஒவ்வொரு முறையும்
  புது காதலர்களை முத்தமிட்டுக் 
  கொண்டு தான் இருக்கிறது.
  ஒற்றைக் குடைக்குள் இருவரையும் 
  அணைத்திடும் இந்த மழைக் காலத்திற்கு 
  கார் காலம் என்பதை காட்டிலும் 
  காதல் காலம் என்றே பெயர் 
  சொல்லி அழைக்கலாம்.

  அப்படியொரு ஒரு காதல் 
  காலத்தில் தான் அந்த 
  மழைத்துளியில் நனையும்
  ஒரு பனித்துளியாய் 
  உன்னைக் கண்டேன்
  உன்னைத் தொட்டுக் கொள்ள 
  நினைத்த இந்த மழைத்துளிகள் 
  தூரலாய் வந்து உன் மேனியைத் 
  துளிதுளியாய் நனைத்து
  உன்னை அணுஅனுவாய் ஸ்பரிசித்தன…
  அந்த தீண்டல் போதாத 
  இந்த மழைத்துளிக்கு
  பேராசை வந்து அடை மழையாகி 
  உன்னை அணைக்க ஆசை வந்தது 
  கொஞ்சம் அதிகம் தான்
  என்ன செய்வது அது தான் உன்னைக்
  குடைப் பிடித்துக் கொண்டிருந்த என்னை
  நோக்கி ஓடி வரச் செய்தது.
  உன் ஆடைகளின் அடர்த்தியை லேசாக
  இந்த மழைத்துளி நனைத்திருந்ததால்
  உன் அழகு பிரதேசங்களை
  என் கண்கள் காணுவதை
  என்னால தடுக்க
  இயலவில்லை.
  இந்த மழை தான் எத்தனை
  சகுனித் தனம் செய்கிறது
  உன்னை என்னை நோக்கி
  நகர்த்தி என் மனத்துணிவை
  சோதிக்கப் பார்க்கிறது.
  அது ஏன் மழைக்காலத்தில்
  மட்டும் பெண்கள் இவ்வளவு
  அழகாகத் தெரிகிறார்கள்
  என்று அருகில் இருந்த 
  உன்னிடம் கேட்க நினைத்தேன்
  நீயோ
  இரண்டு கைகளையும் கட்டிக்
  கொண்டு உன் மேனியெழிலை
  மறைத்தபடி குடைக்குள் வந்து
  நனைந்ததற்கு அடையாளமாய்
  துப்பட்டாவை உன் இரண்டு 
  கைகளாலும் பிழிந்து 
  என்னை நனைப்பது போல்
  ஒரு பார்வை பார்த்தாய்
  எந்த குடையை விரித்து அந்த
  பார்வை மழையில் இருந்து நான்
  தப்பிப்பது ... ?
  தெரியாமல் அந்நொடி  கொஞ்சமாய்
  சிரித்து வைத்தேன்.
  நீ மேலும் என்னைப் பார்வையால்
  நனைத்தாய்.
  அன்றைய மழை விட்டு விட்டது
  என் சிரிப்பு மட்டும் உன்னிடம்
  அப்படியே தொடர்கிறது
  உன் பார்வை மழையிலிருந்து
  தப்பிக்க வழித் தெரியாமல்....
  குடை தந்த எனக்கு உன்
  பார்வையில்  நீ மழை தந்தாய்
  மழை தந்த அந்த மேகத்திற்கு
  என் பார்வையில் நான் நன்றி
  சொன்னேன்
  என் காதல் காலத்தை காட்டியதற்கு....


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே