• 8.04.2012

  சேய் மட்டுமல்ல தாயும் தான்...


  உனக்கென்று ஒர் உயிர்
  இருப்பதை நீ உணர்ந்திருப்பாய்
  ஆனால் இன்னொரு உயிரின்
  சலனத்தை இப்பொழுது மட்டுமே
  நீ உணர்வாய்
  அரிதாய், மெலிதாய்,சிறிதாய்
  உன்னுள் ஓர் உயிர் உன்னைத்
  தாயாக்கத் துடிக்கும்

  மனது இதயத்தில் உள்ளதாய்
  நினைக்க வைக்கும் மூளை
  உன் மனதை மட்டும்
  இப்பொழுது இதயத்துக்கு
  கீழே இருப்பதாக உணர வைக்கும்
  எவ்வளவு கற்பனைகள் உன்
  மனக்கண் முன் வந்தாலும்
  இது வரை பிறந்த உயிரிலிருந்து
  வேறுப்பட்ட உயிராகவே
  வரப் போகும் அந்த மழலையை
  உன் கற்பனைக்குள் அடக்க இயலாது.
  நீ எவ்வளவு கற்பனை செய்தாலும்
  உன்னை  மீறிய கற்பனைத் தான்
  உன் கண் முன்னே
  காட்சியாக தோன்றப் போகிறது.
  சொல்லித் தராத உணர்வுகளுடன்
  தான் அந்த உயிர் உன் கண் முன்
  கை கால்களை அசைத்து உன்னை
  மகிழ்விக்கும்
  அது உனக்கு மட்டும் இன்பமில்லை
  உன்னை சுற்றியிருக்கும் அனைவருக்கும்
  இன்பம்
  இது வரை நீ தாங்கிக் கொள்ள
  முடியாத வலியை நீ தாங்கப்
  போகிறாய்
  உன்னை வலிக்கச் செய்து
  வெளி வரும் வசந்தத்தை
  நீ என்னப் பெயர் சொல்லி
  அழைத்தாலும் ‘ஆனந்தம்
  என்ற பெயரே அதற்கு
  சரியாகப் பொருந்தும்
  இனி உன் ஒவ்வொரு நொடியிலும்
  ஒரு புது உணர்வுப் கலக்கப் போகிறது
  உன் ஆள்காட்டி விரலைப் பற்றிக்
  கொண்டு பூமியையே சுற்றி
  வரலாமென அடம் பிடிக்க
  ஒரு சுகமான ராகம் பிறக்கப்
  போகிறது.
  உன்னை ஒரு நிமிடம் கூட
  இருக்கவிடாமல்
  பொம்மைப் போல இயக்க
  ஓர் இதமான இதயம் வரப் போகிறது
  ஒவ்வொரு நொடியின் நீளமும்
  மிகக் குறைவு என
  உன் பிள்ளையின் அசைவுகளை
  ரசிக்கும் பொழுது உணர்வாய்
  அதன் சின்னஞ்சிறு இதழ்களால்
  நீ பெறப் போகும் முதல் முத்தத்தை
  எண்ணிப் பூரிப்பாய்
  அதன் திறக்கப்படாத
  விழிகளைத் திறக்கும்
  பொழுது அதன் கண் முன்
  விழப் போகும் முதல் காட்சி
  எதுவென சிந்தித்துப் பார்...
  உன் கைகளால் நீ பிசைந்து
  கொடுக்கும் முதல் உணவினை
  உன் மனதுக்குள் தேர்வு செய்து
  ரசித்துப் பார்
  உனக்கு வலிக்கும் என்று
  தெரியாமல் உன் தோளிலும்
  மார்பிலும் தாவி தாவி
  உன் கூந்தலை பற்றி இழுத்து
  உன் கன்னங்களை கிள்ளப்
  போகும் உன் பிள்ளையின்
  குறும்பை ஒவ்வொன்றாக
  எண்ணிப் பார்...
  மொத்தத்தில் இது வரை வாழ்ந்த
  உன்னை அப்படியே மறிக்க வைத்து
  மறுப்பிறப்பெடுக்க 
  வைக்கப் போகும்
  உன் குழந்தை
  உனக்கு சேய் மட்டுமல்ல
  தாயும் தான்...


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே