• 9.12.2012

  சீக்கிரம் பொழுது சாய்ந்தது  இந்த அரச மரத்தடியில்

  இன்று மட்டும் ஏனோ

  அம்மன் குடிவந்தது

  நீ அமர்ந்ததைப் பார்த்தால்

  எனக்கு வேறொன்றும் சொல்லத்

  தோன்றவில்லை…

  என்று எனக்காக காத்திருந்த

  உன்னிடம் சொன்னேன்

  முறைப்பாக இருந்த உன்னை

  என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது

  அம்மனுக்கு கோபம் வந்தால்

  இந்த அடியேன் என்னாவது

  பார்வையாலையே எரித்துவிடுவாய்

  போல் இருக்கிறதே– என்றேன்

  சற்று உன் முகம் சாந்தமானது

  அம்மனுக்குப் பூ எங்கே?

  என்று என்னை மடக்கினாய்—

  மன்னித்துவிடு! உன் கூந்தலில்

  எந்தப் பூவும் இடம் பெறமறுக்கிறது…

  கோபத்தை மறந்து என் இதழ்களையே

  கண் இமைக்காமல் ஆச்சரியத்தில் பார்த்து

  ஏன்?  என்றாய்—

  என்னை பொறாமைத் தீயில்

  தள்ள நினைக்காதே அதிஷ்டக்காரனே!

  அவளைப் பார்த்து பொறாமை

  கொள்ள எங்களுக்கு மனமில்லை

  என்று கெஞ்சுகிறது அத்தனைப்பூக்களும்….

  என்றதும்

  உன் முகம் மாறிய நளினங்களை

  எந்தப் புகைப்படக் கருவியில்

  நான் பதிவு செய்ய – என்

  மனத் திரையைத் தவிர…

  மேலும் கேட்டாய்—- சரி

  அது என்ன அதிஷ்டக்காரன்?

  உனக்கு சொந்தம் அல்லவா!

  அதனால் சொல்லியிருக்கும்

  என்றேன்….கிண்டலான

  ஒரு பார்வை பார்த்தாய்

  வேறு என்ன சொன்னது?

  இருந்தாலும் பாவம் நீ

  என்று மேலும்

  சொல்லாமல் நிறுத்தினேன்.

  ஏன்? நிறுத்துவிட்டாய்

  சொல் ஏன் பாவம் நீ

  என்ன சொன்னது?

  என்று ஆர்வத்தோடு நீ கேட்க…

  லேசான தயக்கத்துடன்

  பூக்கள் நாங்கள் எங்கள்

  அழகை மறைப்பதில்லை

  உன்னவளோ ஆடைகொண்டு

  அவள் அழகை மறைத்துவிடுகிறாள்

  பாவம் தானே நீ என்றது -என்றேன்

  நொடியில் உன் முகத்தில்

  மின்னிய அந்த ஒளிச் சிதறலில்

  நான் எரிந்து போகாதது ஆச்சரியமே!

  திருடா! என்று என் தலையினை

  பிடித்துக் கொண்டாய் …

  என் தலை எழுத்து அன்று

  சீக்கிரம் பொழுது சாய்ந்தது
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே