• 7.23.2012

  உன் காதல் அகராதி
   என் அன்னைக்கு உன்னைப் பிடிக்கவில்லை
  என் தங்கைக்கும் உன்னைப் பிடிக்கவில்லை
  இன்னும் என்னவெல்லாமோ காரணங்கள்
  என்னை நீ மறந்துவிட்டதற்கு சொல்கிறாய்

  நிச்சயம் காலங்காலமாய் ஒரு காதலன்
  ஏற்றுக் கொள்ள வேண்டிய  காரணங்கள் தானிது
  இருப்பினும் இன்று நீ நேசிப்பதாக
  ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாயே
  உன்னுடன் பணிபுரியும் 
  ஒருவனின் அலைப்பேசிக்கு...
  அந்த செய்தி மட்டுமின்றி நீ
  அவனிடம் பேசிய காதல் 
  வசனங்கள் அனைத்தையும்
  பதிவு செய்து என்னிடம் போட்டுக் 
  காட்டும் உன் இன்றைய காதலனையாவது
  பெண்ணே...! உன் அன்னைக்கும்
  தங்கைக்கும் பிடிக்குமா 
  என்று கேட்டுவிட்டாயா...?
  முதலில் கேட்டு விடு...
  ஒரு வேளை அவன் என்னைப்
  போல் ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளத்
  தெரியாதவனாக இருக்கப் போகிறான்
  இல்லை அவன் அன்னைக்கும் தங்கைக்கும்
  உன்னைப் பிடிக்கவில்லை 
  என்று சொல்லிவிடப் போகிறான்.
  பாவம் நீ 
  ஒன்று ஏமாற்றப் போகிறாய்
  இல்லை ஏமாறப் போகிறாய்....
  என்ன செய்வது
  உன் காதல் அகராதியில்
  காதலின் இலக்கணம்
  இப்படித் தான் எழுதப்பட்டிருக்கிறதோ
  என்னவோ...
  தயவு செய்து இனியொரு
  முறை வேறு யாரிடமும்
  காதலிக்கிறேன் என்று 
  சொல்லிவிடாதே பெண்ணே...!
  உன் அன்னைக்கும் தங்கைக்கும்
  உன்னையே பிடிக்காமல் 
  போய்விடப்போகிறது

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே