7.23.2012

உன்னருகில் நானிருக்க மாட்டேன்

 
மறந்துவிட்டாயா பெண்ணே?
என் பெயரின் ஒவ்வொரு
எழுத்தையும் நாளெல்லாம் நீ
வெள்ளைத் தாளில்
எழுதியதையெல்லாம்

உன் மனதை வருடிய
சின்ன சின்ன நிகழ்வுகளையும்
ஒன்று விடாமல் என்னருகில்
அமர்ந்து சொன்னதையெல்லாம்


யாருக்கும் தெரியாமல் நான்
கேட்க முடியாதபடி
என் பெயரை திருட்டுத் தனமாய்
நீ உச்சரித்துக் கொண்டிருக்க...
உன் அம்மாவிடம் பைத்தியமென்று
பெயர் வாங்கியதையும்...
அதை நீ  சின்ன சிரிப்பொன்றை
உதிர்த்தபடி ஏற்றுக் கொண்டதையும்...

நான் பார்க்கவில்லை என்று நினைத்தாயா...?

நான் உன்னருகில் இருக்கும் பொழுது
உன் அன்னையையே  நீ அத்தை என்று
அழைத்ததை காதலல்லாமல் வேறெப்படி
எடுத்துக் கொள்ள முடியும் என்னால்
சொல் பெண்ணே...!

அன்றொரு நாள் என் வயிற்றுவலிக்காக
நீ தயாரித்துத் தந்த எலுமிச்சப் பழச்சாற்றில்
என்ன நினைத்து நீ உப்பைக் கலந்தாயே...
ஆனால் நான் உன்னை மட்டுமே
நினைத்துக் கொண்டு இன்றும்
எலுமிச்சப் பழச்சாற்றில் உப்புக்
கலந்தே குடித்துக் கொண்டிருக்கிறேன்.

யாருக்கும் தெரிய வேண்டாமென்று
என்னை ஒரு முறை அலைப் பேசியில்
அழைத்து உனக்குப் பிடித்தப் பாடலை
என்னுடைய ஒலி நாதமாக வைக்க
சொன்னாயே மறந்துவிட்டாயா...?

உன் அம்மா இல்லையென்றால் என்ன...?
இனி நான் உனக்கு அம்மாவாக இருப்பேன்
என்று அலைப்பேசியில் ஒலித்தது
உன் குரல் தானே பெண்ணே....?

எனக்காக நீ மட்டும் தான் இருக்கிறாய்
என்று என் கைகளைப் பற்றி
கடற்கரையில் என்னுடன்
நடந்த நிமிடங்கள்
நமக்குள் நிகழ்ந்தது தானே...

உன் மனதில் அது
பதியவில்லையென்றாலும்
இந்த பிரபஞ்சத்தின் பெருவெளியில்
எங்கோ ஒரு மூலையில் அது
பதியப்பட்டுத் தானிருக்கிறது.
இல்லையெனில்
எனக்கு நினைவில்லை என்று நீ
சொல்லும் பொழுது உன்னுடனான
அத்தனை நிகழ்வும் எனக்கு
மட்டுமெப்படி பெண்ணே நினைவுக்கு
வரும்.

காலத்தின் பின்குறிப்பில் பதியப்பட்ட
நினைவுகள் இன்று உன் மனக்கண் முன்
வராமல் போகலாம்.
என்றேனும் அது உன் மனக்கண் முன்
வரும் பொழுது
என்னை மறந்துவிட்டாயா என்று
நீ கேட்க ...
அருகில்
நானிருக்க மாட்டேன்
என் நினைவுகள் மட்டும்
பிரபஞ்சத்தின் வெளியில்
சுற்றிக் கொண்டிருக்கும்...
மறந்துவிடாமல் நினைவில்
வைத்துக் கொள்
அந்நொடி
உன்னருகில் நானிருக்க மாட்டேன்

வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

6 comments:

  1. இனிமையான நினைவுகூறல்.

    ReplyDelete
  2. தமிழகம் முழுவதும் நேரடியாக எங்களுடன் இணைந்து பகுதி நேர பதிவர்களாக பணியாற்ற அழைக்கின்றோம்.
    சொடுக்கு

    ReplyDelete
    Replies
    1. அருமையான பணி தான். நிச்சயம் பணியாற்ற வருகிறோம்

      Delete
  3. நண்பரே,
    அருமையான கவிதை. இதை எப்படி உங்களுடைய கவிதை என்று சொல்வது. இதில் உள்ள எழுத்துக்கள் மட்டுமே உங்களுடையது என்று ஒப்புக் கொள்ளலாம். அந்த எழுத்துக்கள் பேசுவது என்னைப் போன்றவர்களது இதய வலியை அல்லவா?. நண்பரே, இந்த வலியை எப்போது எழுதினீர்கள்? வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட விபத்தில், நிஜம் மரணித்து, நிழல் மட்டுமே தொடர்ந்து வாழத் துவங்கிய அந்த வலி நிறைந்த தருணத்திலா?

    ReplyDelete
    Replies
    1. வலிகள் தான் உண்மையில் எழுத வைக்கிறது நண்பரே... இருப்பினும் அந்த வலிகளை அப்படியே பதிவு செய்வதில் எந்த சுவையும் இருக்காது. நீங்கள் சொல்வது போல் இது என் மூலம் வந்த வார்த்தைகள் தானே தவிர..., என் வார்த்தைகள் என்று நான் சொல்ல முடியாதவை. அது போல் தான் நான் உணர்ந்தவைகளும்...என் மூலம் உணரப்பட்டவைகளே தவிர, என் உணர்வுகள் என்று சொல்ல முடியாது.உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts