• 11.13.2011

  கூடங்குளமும் கல்லணையும் அப்துல் கலாம்

   

  அழும் குழந்தைக்கு சாக்லெட் கொடுக்கும் கதை. கூடங்குளத்தில் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தை இப்படித் தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

       நம் கடவுள்களையெல்லாம் விஞ்ஞானியாக பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் பிரபலமாக பேசப்படும் ஒரு படத்தில் வசனம் வருகிறது. ஆனால் இன்றைய சூழலிலோ விஞ்ஞானிகளையெல்லாம் கடவுளாக ஆக்கி விடுவார்கள் போல் இருக்கிறது. தினமலரில் சமீபத்தில் ஒரு கட்டுரையில் ஒரு வாசகர் எழுதியதை படிக்க நேர்ந்தது. அப்துல் கலாமே சொல்லிவிட்டார் இதற்கு பிறகு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது என்ற தொணியில் எழுதியிருந்தார். பாவம் ஒரு விஞ்ஞானியை இந்த அரசியல் என்ன பாடுபடுத்துகிறது.
       அணுசக்தித் துறையில் மிகப் பெரிய சாதனைப் புரிந்த ஒரு மாமனிதர் அப்துல் கலாம். அவர் விதி அரசியலில் தெரியாமல் வந்து சிக்கிக் கொண்டார். அவரை வசைப் பாடுபவர்களை விட, அவரை போற்றி புகழ்கிறவர்களாலேயே அவரைப் பற்றிய தவறான பார்வை மக்கள் மத்தியில் வலுக்கிறது.
       இந்த கூடங்குளம் பற்றி அவரின் கருத்துக்களாக தினமலரில் இருப்பக்க கட்டுரைகள் வெளியானது.அது அணு உலையைப் பற்றி மக்கள் அறிய மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும் அவருக்கு அறிவியல் தெரிந்த அளவிற்கு அரசியல் சூழ்ச்சி புரியவில்லை. அவரை வைத்து அரசியல்கட்சிகள் என்னென்ன சூழ்ச்சி செய்ய நினைக்கிறதோ...
       அவரின் கட்டுரையில் மனிதன் எப்பொழுதும் இயற்கையை எதிர்த்துப் போராடித் தான் வளர்ச்சியடைந்திருக்கிறான் என்று சொல்லியிருந்தார். சிந்திக்க வேண்டிய விஷயம். அதற்கு கரிகாலன் கட்டிய கல்லணையை உதாரணம் சொல்லியிருந்தார்.
  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்  அப்பொருள்
  மெய்ப் பொருள் காண்பதறிவு .
  ஒரு அணை உடைந்தால், எப்பேர்பட்ட சீரழிவு விளையும். அதை நினைத்திருந்தால் மனிதன் முன்னேறியிருக்க முடியாது என்று சொல்லியிருந்ததாக எழுதியிருந்தது.
       மக்களை நோக்கி அவர் முன் வைத்த கேள்விகள் சிந்திக்க வைக்கக் கூடியது. உண்மையில் கரிகாலன் கட்டிய பிறகு நம் தமிழகத்தில் ஏன் அவ்வளவாக அணைக் கட்டப்படவில்லை. ஏரிகள் வெட்டப்படவில்லை. இன்றைய அரசாங்கம் நீர் வளத்திற்கோ, மண் வளத்திற்கோ எதையுமே செய்யவில்லை. அன்று விவசாயத்திற்கும், மக்களின் நீர் ஆதாரத்திற்கும் கட்டப்பட்டது தான் கல்லணை. அதனால் எல்லா மக்களும் பயன் பெற்றார்கள். ஒரு வேளை அவர் சொன்னது போல் அது உடைப்பட்டிருந்தால் கூட,  சிறிது நாட்களில் அந்த இடம் பழைய நிலைமைக்கு திரும்பி, மக்கள் அங்கு குடியேறி வாழ முடியும். ஆனால் அணு உலை அப்படியில்லையே.
       எல்லாவற்றிற்கும் மேல் இன்று உற்பத்தியாகும் மின்சாரம் சரியான முறையில் அரசாங்கத்தால் பயன்படுத்தபடுகிறதா?    இத்தனை ஆண்டுகளில் இல்லாத சூழல் இந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்திற்கு  எப்படி வந்தது. எனக்கு தெரிந்து தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீடு கட்டி மின்சாரம் வாங்குவது என்பது பெரிய பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது. இப்பொழுது பல அடுக்குமாடி கட்டடங்கள் சர்வ சாதாரணமாக மின்சாரத்துடனேயே தன் ஆரம்ப வேலையைத் தொடங்குகிறது. பணம் கொடுத்தால் எந்த இடத்திலும் மின்சாரம் வாங்க முடியும் என்ற சூழல் இன்று நிலவுகிறது.
       மக்களாகிய நம்முடைய மின்சாரம் சில கைகூலிகளால் வீணடிக்கப்படுகிறது.இது அதிகரித்ததனால் தான், மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக் காரணம். முறையில்லாமல் வீடு மட்டுமில்லை, கல்லூரி,அலுவலகம்,தொழிற்சாலை இன்னும் சொல்லிக்  கொண்டேப் போகலாம். இன்னும் கூட நம் தமிழகத்தில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இருக்கிறது. அப்படியிருக்க முறையில்லாமல் இப்படி தன் விருப்பத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்தினால், கூடங்குளம் மட்டுமில்லை , இன்னும் 100 அணு உலைகள் வந்தால் கூட தமிழகத்தின் மின் பற்றாக்குறை தீராது.
       சமைப்பதற்கு முன் எத்தனைப் பேருக்கு சமைக்கிறோம் என்று தெரிந்து சமைக்க வேண்டும். கல்லணைக்கும் கூடங்குளத்திற்கும் சம்மந்தப்படுத்தலாம் ஆனால் அன்றைய மன்னன் தன்னலமற்றவன், இன்றைய மன்னர்கள் தன்னலம் மட்டுமே உடையவர்கள்.
       கூடங்குளத்தில் நடக்கும் போராட்டத்தை வெறும் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டமாக மட்டும் பார்க்காதீர்கள். அது அரசாங்கம் நம் இயற்கை வளத்தின் மீது எந்தளவு அக்கறையோடு இருக்கிறது எனபதை தெரிந்து கொள்ளும் ஒரு அருமையான தருணம்.
       இல்லையெனில் இன்று ஏரிகளில் வீடுகள் பெருகி மழை வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிக்கத் தேவையில்லையே...
       அணு உலைப் பாதுகாப்பு ஒரு பக்கம் இருந்தாலும் , மக்கள் சிந்திக்க வேண்டியது, நம் மண்ணை உபயோகப்படுத்தி உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசாங்கம் சரியான வழியில் பயன்படுத்தி, மக்களாகிய நமக்கு நன்மை செய்யுமா  என்பதை தான்....
       இல்லை பழைய பஞ்சாங்கம் போல் காசை அள்ளிவிட்டெரிபவர்களுக்கு நம் இயற்கை வளத்தை அரசாங்கம் தாரை வார்க்குமென்றால் அணு உலையை திறக்காமல் இருப்பதே மேல்.கத்தியின் ஆபத்து அதைப் பிடித்திருப்பவர்களை பொறுத்து அமைகிறது. அணு உலையின் ஆபத்தும் அதன் பாதுகாப்பும் அதை ஆளும் ஆட்சியாளர்களைப் பொறுத்து அமைகிறது. சுனாமிப் பற்றி முன்னரே பிரதமருக்கு தகவல் சொல்லப்பட்ட பின்னும் நடவடிக்கை எதுவும் எடுக்காத அதே ஆட்சி முறையில் தான் நாம் இருக்கிறோம். இந்த ஆட்சி முறையில் அணு உலை இல்லை, அரிசி உலைக்கு கூட ஆபத்து வரும். இவர்களிடம் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகள் மாட்டிக் கொள்வது தான் வருத்ததிற்குரிய விஷயம்
      

  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே