• 12.08.2011

  திரைவிமர்சனம்: போராளி இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்

   

       இரத்த உறவுகள் எல்லாம் வெறும் பேச்சு தான். நட்பு ஒன்று மட்டும் தான் வாழ்க்கைக்கு என்றும் துணை நிற்கும் என்பதை இரத்தம் கலந்த திரைக்கதையோடு சொல்லும் படம் போராளி.

  சுப்ரமணியபுரம், நாடோடிகளுக்கு பிறகு சசிக்குமார்,சமுத்ரகனியின் வெற்றிக் கூட்டணியில் மறுபடியும் ஒரு நட்புக்கான திரைப்படம். இதில் ஈசனை நான் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் திரைக்கதை வேறாயிற்றே...
       நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கிற்குள் இது மாதிரியான படங்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்ததைப் பார்க்க முடிந்தது.
       திரையின் முதல் காட்சியிலேயே சசிக்குமாரின் போராளிக்கான விளக்கம் கைத்தட்டல் பெறுகிறது. அடுத்தடுத்து சசிக்குமாரும், நரேஷும் திருச்சூரில் இருந்து தப்பி சென்னைக்கு வருகிறார்கள். அங்கே கஞ்சாகருப்பு தங்கியிருக்கும் குடியிருப்பில் தங்குகிறார்கள். அந்த குடியிருப்பில் வசிக்கும் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றயும் இயக்குனர் அழகாக சொல்லியிருக்கிறார்.
       வீட்டுச் சொந்தக்காரர் கு.ஞானசம்மந்தம்,அவரது மனைவி,பெண். மற்றும் காந்தி, சாந்தி என்று சந்த நயத்துடன் படவாகோபி தம்பதியினரின் நயமில்லாத வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். குடிக்காரனின் அலட்டல். சசிக்குமார், நரேஷ் தங்கியிருக்கும் அறைக்கு எதிரே இருக்கும் அழகு சிலையாக சுவாதி வருகிறார். அவளுக்கு ஒரு தங்கை, பாட்டியென விரிகிறது சொந்தம். ஆனால் அவர்கள் யாரும் ரத்த சம்மந்தமில்லாத உறவுகள் என்று சுவாதி சொல்கையில் சசிக்குமார் அதற்கு சொல்லும் ஆறுதல் கைத்தட்டல் வாங்குகிறது. சிலோன் பரோட்டா, நரேஷின் மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறி, இடையிடையில் திருக்குறள் என்று நிறைய இடங்களில் திரையரங்கில் கைத்தட்டலின் சத்தத்தினால் அடுத்து வரும் வசனங்களை கவனிக்க முடியாமல் போகிறது.

       அதுவும் சசிக்குமாருக்கும் சுவாதிக்கும் இடையிலான காதல் காட்சியில் சுவாதியின் நடிப்பு அசத்தல். தமிழ் சினிமா ஏன் இன்னும் இவரை நிறைய பயன்படுத்தவில்லை என்பது புரியவில்லை.
       இதற்கு இடையில் நரேஷும் சசிக்குமாரும் வேலைப்பார்க்கும் பெட்ரோல் பங்கில் நிவேதாவின் அழகான சென்னைத் தமிழ் வார்த்தைகளின் அறிமுகம். அந்தளவு இல்லையென்றாலும், அந்த சென்னைத் தமிழுக்குப் பிறகு அவள் பெயர் தமிழ்ச்செல்வி என்று சசிக்குமார் சொல்கையில் கொஞ்சம் சிரிக்கலாம். மொக்கை கவிதைகளுடன் தமிழைக் கொண்டு தமிழ்ச்செல்வியை மடக்க நிறைய முயற்சிகள் எடுக்கும் நரேஷின் நடிப்பில் கொஞ்சம் செயறகை. மொழியினால் இருக்கலாம்.  அறிமுகம் என்று சொல்லாத அளவு நடிப்பில் எதார்த்தத்தை காட்டியிருக்கிறார் நிவேதா.
       இந்த கதாப்பாத்திரங்களிடையே இவர்கள் இருவரும் புதுவிதமான முயற்சிகளை செய்து நிறைய சாதிக்கின்றனர். உதவிகளும் செய்கின்றனர். நிவேதாவுக்கு அவளின் அக்கா கணவரிடம் ஏற்படும் பிரச்சினைகள், சசிக்குமார் டீ வாங்கிக் கொடுக்கும் ஒரு நபர் என்று உதவிகளாலும், நச் வசனங்களாலும், முதல் பாதி வேகம். அந்த வேகம் இவர்களை ஒரு கூட்டம் வந்து பைத்தியம் என்று சொல்வதோடு இடைவேளையில் நிற்கிறது.
      
       இரண்டாவது பாதியில் மூச்சு முட்ட ரத்த கரையை நம் மனதில் துடைத்துக் கொள்ளும் அளவிற்கு ஏற்படுத்திவிடுகின்றனர். நல்ல வேளை சூரி வந்து நம்மை நிறைய இடங்களில் காபாற்றுகிறார்.  “நாங்கள்ல்லாம் அப்பவே அப்படி, இப்ப சொல்லவா வேணும் “ அவரின் கிராமத்து அலட்டலில் சசிக்குமாரின் சித்தி, (பெண் பித்தன் )சசிக்குமாரின் தந்தை,அவரின் மகன், மாமன் இவர்களின் வில்லத்தனம் கொஞ்சம் மறைவது ஆறுதல். மற்றபடி இரண்டாவது பாதி சொத்துப்பிரச்சினைத் தான் கதையை முழுதும் ஆக்கிரமித்துவிடுகிறது. இறுதியில் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து துவம்சம் செய்கின்றனர் சசிக்குமாரும் நரேஷும்.
       இதற்கு இடையில் வந்து போகும் வசுந்தரா சில நேரங்களே திரையில் வந்தாலும் மனதில் அழுத்தமாக பதிகிறார். சசிக்குமாரை ஏமாற்றும் அவர்களின் குடும்பத்திடம் இருந்து காப்பாற்றும் ஒரு விசுவாசியின் மகளாக வருகிறார். இவர் வில்லன்களின் ஆட்களை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் கண்களை அகல விரிக்க வைக்கிறது. என்ன ஒரு ஆவேசம். வசுந்தரா பேராண்மையில் இத்தனை அழகாகவா இருந்தீர்கள்  என்று கேட்கும் அளவு அவரின் வீரம் இதில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு கமர்சியலுக்கான கலவையில் போராளி நிச்சயம் தூள். வெற்றி கலவை தான்.
      
  இருப்பினும் சுப்ரமணியபுரம்,நாடோடிகளை ஒப்பிடுகையில் போராளி இன்னும் கொஞ்சம் போராடியிருக்கலாம்
  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே