7.21.2012

நட்புடன் மின்மடலில் ஒரு விவாதம் 2 ( ராமர் சீதை காதல் )

கேள்வி : 
எனக்கு நம்ம ஊரு சங் இலக்கியங்கள பத்தி விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட பேசனும்னு ஆசை.........
அவர்கள் பெண்களை சித்திகரிக்கும் விதம்...........சில நேரங்கள்ல சிரிப்பு வரும்.........
எல்லாம் அப்பிடிதன்னு சொல்ல வரல.....ஆனா அடிப்படை கல்வியா இதை தன் கத்து தர்ராங்க!!!!...........................

நம்ம ஊரு சங்க இலக்கியங்கள்.................................
யாது ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
இது தான் நம்ம ஊரு சங்க இலக்கியம் . அது சரி அது என்ன நம்ம ஊரு  சங்க இலக்கியம்...? வேறு ஊரில் வேறு ஏதேனும் சங்க இலக்கியம் இருக்கிறதா...? சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது நம்ம ஊர் மட்டும் தான்.
நீங்க சொல்ற ராமாயணமும்,சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்கள் இல்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
         சங்க இலக்கியங்கள் எது என்று நம்ம ஊரில் நிறைய பேருக்கு தெரியவில்லை. சங்க இலக்கியங்கள் அச்சு அசல் அந்த காலத்தின் வாழ்க்கையை விவரிக்கும் கால கண்ணாடி. எனக்கு தெரிந்து வேறு எந்த மொழியிலும் அப்படி இலக்கியங்கள் இல்லை. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு இவை இரண்டும் தான் சங்க இலக்கியங்கள். இதில் எட்டுத்தொகையில் உள்ள நூல்கள் நாம் இன்று ஆர்கூட் ,இன்னும் சில கம்யூனிடியில் கவிதைகள் எழுதுவது போல ,அன்று வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றிய வெவ்வேறு கவிஞர்களால் எழுதப்பட்டதன் தொகுப்பு தான் எட்டுத் தொகை. உணமையில் பல கவிதைகள் எழுதியவர்களின் பெயர் கூட தெரியாது. கிமு 3ல் இருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரையுள்ள தமிழர்களின் வாழ்க்கைமுறையை எந்த வித தயக்கமுமின்றி வெளிப்படுத்தும் சிறந்த இலக்கியம். சொன்னதில் தவறிருப்பின் திருத்தவும்.
             ஒன்று தெரியுமா? இந்த இலக்கியங்களில் தலைவன்,தலைவி என்று தான் பெயர் குறிப்பிடபடாமல் அக இலக்கியங்களை விளக்குகிறார்கள். எத்தனை உயர்ந்த கலை தெரியுமா அது...
            தோழி எனக்கும் சங்க இலக்கியங்களில் அந்த அளவு பரிட்சயம் இல்லை. ஆனால் ஆர்வம் உண்டு. சங்க இலக்கியங்கள் எல்லாமே வெறும் மனப்பாட முறையிலோ அல்லது வெறும் பொருள் படித்து உணரும் முறையில் மட்டுமே மக்களுக்கு சொல்லித் தரப்பட்டிருக்கிறது. அதன் கவித்துவம் அதில் சீர் கெட்டு விடுகிறது. எனவே அந்த பாடல்களில் உள்ள கவித்துவத்தை நம்மால் அனுபவித்து உணர முடிவதில்லை. இதன் காரணமாகவே அதன் அடி ஆழமான அந்த வாழ்க்கையின் குறியீடுகளை உணர முடியாமல் போய் விடுகிறது. சரி சங்க இலக்கியங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.
               சீதா, கண்ணகி பற்றி இப்பொழுது பார்ப்போம். சீதாவை தீக்குளிக்க சொன்னது ராமன். இந்த அவதார புருஷனை சாடாத பெண்களே இல்லை. ராமன் அவதார புருஷன் இல்லை. ராமன் சாதாரண மனித குணங்கள் உடைய மனித பிறவி. ஒரு படத்தை பார்த்துவிட்டு அவரவர் கருத்துகள் தெரிவிக்கின்றனர். அதை வைத்தே படத்தை பார்க்காமல் அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களையும், கதையையும் விமர்சிக்கும் தவறான முறையே இந்த புரிதலின்மைக்கு காரணம். அறிவியல்,ஆன்மீகம் இந்த அளவு வளர்ந்த இந்த கால கட்டத்திலும் கண்ணுக்கு தெரிந்தே சில கதாநாயகர்களை கடவுளாக கொண்டாடுகிறார்கள். கிட்ட தட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் அப்படி இருந்ததில் தவறே இல்லை.
                உண்மையில் ராமாயனம் மிக அருமையானது. அந்த ராமாயணம் தமிழில் கம்பரால் எழுதப்படும் பொழுது பல திருத்தங்கள் செய்யப்பட்டது. பிற மொழிப் படங்களை தமிழில் எடுக்கும் பொழுது என்ன திருத்தங்கள் நிகழுமோ அந்த திருத்தங்கள் எல்லாம் நடந்தது. ராமாயணம் ஆரியர்கள் திராவிடர்களுக்கிடையே நடந்த இனப் போராட்டத்தின் மறைமுகமான பிரதிபலிப்பு. சமிஸ்கிருத ராமாயணம் அதை சில இடங்களில் நேரடியாகவே பதிவு செய்திருந்தது. அந்த ராமாயணத்தில் இருந்து திராவிடர்களையும் அவர்களின் வாழ்க்கையும் திருத்தி எழுதப்பட்டது தான் கம்பரின் ராமாயணம். திராவிட கலையை தூக்கி நிறுத்தும் முயற்சி அது.
                சீதையை சோதிக்கும் முயற்சியல்ல ராமர் செய்தது. சந்தேகம் இருப்பின் தனியறையில் வைத்து சோதித்திருக்கலாமே... ஒரு வேளை தவறியிருந்தால் ராமருக்கு மட்டுமே அந்த அவமானம் .பலர் முன்னிலையில் சோதிக்க காரணம் என்ன.............? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒரு புத்தகம் எழுதுவதற்கு முன் நாம் பல புத்தகங்கள் படிப்பதில்லை. அதே போல் தான் ராமாயணத்தின் நீயதியை புரிந்துக் கொள்ள சில இலக்கியங்களை படிக்க வேண்டும். இல்லையேல் புரிவது கொஞ்சம் கடினம்.
             
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
        ராமாயணம் ஒரு மனிதனால் எழுதப்பட்டது என்ற முறையில் அதில் நல்ல கலையை மட்டுமே நான் பார்த்ததினால் எனக்கு கிடைத்த சில பதில்கள். இந்த குறளை ஆழமாகப் படித்தால் சில அர்த்தங்கள் விளங்கும். நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி நாம் மறக்கும் செயல். பலர் மனதை புண்படுத்திக் கொண்டிருப்பது.
 
            இந்த செயலைத் தான் சீதை ஒரு முறை தன் வாழ்விலும் செய்தாள். ஒரு கதை என்ற முறையில் இதில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனிதன்மை வாய்ந்தது. அப்படி தனிதன்மை வாய்ந்த ஒரு கதாபாத்திரம் தான் லட்சுமனன். அண்ணன் அண்ணிக்காக தன் அத்தனை சுகஙகளையும் துறந்துவிட்டு வந்தவன். அவனை இந்த சீதையின் தீக்குளிப்பில் இழுக்க காரணமென்ன என்று நினைக்கிறீர்களா...? இருக்கிறது. லட்சுமனம் வந்தால் தான் ராமர் சீதையை எப்பேர்பட்ட அவசொல்லில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் என்று உங்களுக்கு தெரியும்
        ஒரு கணவன், மனைவியை சந்தேகப்பட்டால் ஒரு ஆண்மகன் மட்டுமே அங்கு குறைச் சொல்லப் படுகிறான். ஆனால் ஒரு தாய் தன் மகனை சந்தேகப்பட்டால் ஒட்டு மொத்த பெண்ணினமே இழிவு செய்யப்பட்டதாக ஆகிவிடும். 
        ஆம் சீதை மானுக்காக ராமரை காட்டிற்குள் அனுப்பிக் காத்திருந்த சமயம் , அவள் காவலுக்கு லட்சுமனன் இருந்தான். அப்பொழுது ராமரின் குரலை போல் ஒரு அசுரன் குரல் கொடுக்க அதை கேட்டு லட்சுமனனை பார்த்து வரும்படி கட்டளை யிட்டாள். அவன் செல்லவில்லை என்று தெரிந்ததும் , அவனை சீதை வார்த்தைகளால் காயப்படுத்தினாள். ராமர் இறந்தவுடன்,என்னுடன் சேரத்தான் நீ அவரை பாதுகாக்கச் செல்ல மறுக்கிறாயோ என்று அவள் சொன்னது எப்பேர் பட்ட காயத்தை அவளை அன்னையாக நினைத்திருந்த லட்சுமனனுக்கு ஏற்படுத்தியிருக்கும். 
      அந்த நாவினால் சுட்ட புண்ணை விட இந்த தீயினால் நீ சுடுபடுவது ஒன்றும் காயமில்லை என்பதே ராமருக்கும் சீதைக்கும் இடையிலான விவாதம். மக்களுக்கு தெரிந்ததோ ராமரின் சந்தேகம் மட்டுமே... உண்மையில் சீதையும் ராமரும் மட்டுமே அதன் உணமையை அறிவார்கள். சீதை தான் நாவினால் லட்சுமனனை சுட்டதற்கான தண்டனையாகவே அதனை ஏற்றுக் கொண்டாள். ராமருக்கும் சீதைக்கும் மட்டுமே நடந்த இந்த உள்ளப் போராட்டத்தை வெளியில் இருக்கும் நாம் எப்படி அறிவது. உண்மையில் காதலை அறிவதன் மூலமே அறிய முடியும். உணமையில் இது காதலின் உச்சம்.
       சீதை, ராமர் தன்னை சந்தேகப்பட்டதாகவே நினைக்கவில்லை. அதனால் தான் தீக்குளித்தாள். தன் தவறு அந்த ”தீச்சொற்கள்” என்று அவள் உணர்ந்ததால் தான் ராமர் சொன்னதை ஏற்றுக் கொண்டாள்.இப்பொழுது அந்தக் குறளை மறுபடியும் படித்துப் பாருங்கள். 
 
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. கம்பர் இந்த திருக்குறளை இதில் ஆழமாகச் விளக்குவதாகவே எனக்குத் தோன்றுகிறது. 
சீதையின் காயம் ஆறக் கூடியது. ஆனால் லட்சுமனனின் காயம் ஆறக் கூடியதா....?
கண்ணகி பற்றி அடுத்த மின் மடலில் பார்க்கலாம்.


என்றும் நட்புடன்
தமிழ்ராஜா




வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. //தனிதன்மை வாய்ந்த ஒரு கதாபாத்திரம் தான் லட்சுமனன். அண்ணன் அண்ணிக்காக தன் அத்தனை சுகஙகளையும் துறந்துவிட்டு வந்தவன்//

    ராமனுக்குத்தான் ஆணையிடப்பட்டது வனவாசம். ஆனால் சீதையுடன் சென்றான். தன் அண்ணனுக்காக உடன் சென்ற லட்சுமணன், தனது மனைவியையும் உடன் கொண்டு செல்லாதது ஏன்? எந்த ராமாயணத்திலாவது இதற்கு விளக்கம் கூறப்பட்டுள்ளதா? இந்த நிகழ்வுகூட சீதைக்கு ஒரு சந்தேகத்தைக் கொடுத்திருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. புது விதமான கேள்வி தான். லட்சுமனுடன் ஊர்மிலை ஏன் வரவில்லை.ராமர் சீதையுடன் வந்ததற்கான காரணம் காதல். காதல் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் ஏற்கும் வலிமை மிக்கது. லட்சுமனனுடன் ஊர்மிலை வராததற்கும் காதல் தான் காரணமாகும்

      சீதை தான் காதலிக்கும் ராமனுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பயத்தில் தான் லட்சுமனன் மீது அப்படியொரு வார்த்தையை பிரயோகித்தாள்.
      அது சந்தேகத்தின் நோக்கத்தில் எழுந்தது அல்ல. அதேப் போல் ஊர்மிலை லட்சுமனனுடன் வராததற்கு எனக்குத் தெரிந்தவரையில் காதல் தான். அன்றைய காலக்கட்டத்தில் சீதை ராமன் காதல் தான் மிகப் பெரிய செயலாகப் பார்க்கப்பட்டது.

      இன்னொரு செய்தி ராமாயணம் என்பது நமக்கு ஒரு வரலாற்றை சில கற்பனைகளுடன் சொல்லும் மிகப் பெரிய புராணம். அங்கு கதாப்பாத்திரத்தின் படைப்புக்கு ஒவ்வொரு இடத்திலும் விளக்கம் சொல்லாமல், காட்சிகள் மூலமாகத் தான் மறைப்பொருளாக சொல்லப்பட்டிருக்கிறது.
      சீதை ஒரு வேளை சந்தேகப் பட்டிருந்தால் நிச்சயம் ராமன் சொன்ன செயலை செய்திருக்க முடியாது. தன் சொல் தவறியதால் வந்த செயலுக்கு தான் தீயில் இறங்கினாள் சீதை. அந்த செயலும் காதலால் நிகழ்ந்ததே....
      என்னைப் பொறுத்தவரை இது ஒரு அருமையான காதல் காவியம் தான். காதல் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு சீதை ராமரின் புரிதல் தெரியும்.

      Delete
  2. நியாய மான கேள்விதான், இதற்கு இக் கட்டுரையின் ஆசிரியர் பதில் அளிப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. இதற்கு கட்டுரை ஆசிரியர் அல்ல... ராமாயணம் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts