8.06.2012

அன்றைய மகாபாரதமும் இன்றைய யுகபாரதமும் (1)


     மகாபாரதம் இந்தியாவின் மிகத் தொன்மையான புராண நூல்,இதிகாசம், சமயம் சார்ந்த நூல் இன்னும் மேலோட்டமாக நிறைய விளக்கங்களை இதற்கு அளிக்கலாம். உலகத்தில் உள்ள அனைத்துப் புராண நூல்களை இதற்கு முன் வைத்தாலும் மகாபாரதத்திற்கு ஈடாகாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே....
     இன்றும் மகாபாரதத்தைப் பற்றி செய்திகளும், அதில் வரும் கதாப்பாத்திரங்களை வைத்து நிறைய கருத்துரையாடல்களும் சமூகத்தில் நிகழ்ந்த வண்ணம் தானிருக்கிறது. இந்துக்களின் சமய நூலான பகவத் கீதையின் பிறப்பிடம் இந்த மகாபாரதம் தான்.அது மட்டுமின்றி இது நடந்தக் காலக்கட்டம் பற்றிய விவரங்களை எந்த ஆய்வாளர்களாலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்பதும் உண்மை. இதன் காலக்கட்டத்தை கணிப்பதில் ஒவ்வொரு வரலாற்று ஆய்வாளர்களிடம் குழப்பம் தான் நிலவுகிறது. புராண நூல்கள் சொல்வது என்னவெனில் துவாபர யுகம் தான் மகாபாரதம் நிகழ்ந்ததற்கான காலம். சில ஆயிரம் ஆண்டுகள் முன் இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
     இப்படி சொல்லிக் கொண்டுப் போக மகாபாரதத்தில்  வரலாற்று உண்மைகளும், கருத்துகளும், கலை அம்சம் பொருந்திய நிகழ்வுகளும் நிறையவே இருக்கிறது. இருப்பினும் இந்தக் கட்டுரை இதன் மீது போர்த்தப்பட்ட சமயப் பெருமைகளையெல்லாம் தூக்கிவிட்டு ஒரு கலைப் படைப்பாக மனிதர்களின் அச்சு அசலான வாழ்க்கையின் பதிவாகப் பார்ப்பதே இதன் நோக்கம்.
     ஆம் மகாபாரதம் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் கடவுளை, வழிப்பாட்டு முறைகளை, மற்றும் அவர்களின் கலாசார முறையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு பெரும் புராணம். அது மட்டுமின்றி இதில் சொல்லப்படாத மனித சிக்கல்களே இல்லை என்று தான் பல அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். இன்றளவும் மனிதன் சந்திக்கக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஆழமாக உள்வாங்கியவர்கள் நன்கு உணர்வார்கள்.
     இதில் வரும் கதாப்பாத்திரங்களின் படைப்பு அந்தக் கால மக்களின் வாழ்க்கைமுறையை மட்டுமின்றி இன்றைய நவீனயுகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையையும் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.
     அப்படிப்பட்ட பிரம்மாண்டமான கதாப்பாத்திரப் படைப்பை தன் எழுத்தின் மூலம் மகாபாரதத்தில் உருவாக்கிய வியாச முனிவரின் ஞானத்தை நினைக்கையில் பிரமிக்கத் தோன்றுகிறது.அது மட்டுமின்றி இன்று இந்துக்களெல்லாம் போற்றும் பகவத் கீதையும் வியாசரின் கை வண்ணமே...போர்க்களத்தில் கண்ணனுக்கும் அர்சுனனுக்கும் இடையிலான விவாதம் தான் நாம் போற்றும் பகவத் கீதை. இது வியாசரின் கற்பனையில் உருவானதே, இப்படியொரு காட்சியை போர்க்களத்தில் உருவாக்கி உலக மக்களெல்லாம் பின்பற்றக் கூடிய நெறி முறைகளை சொன்னது ஒரு கலைஞனே... கடவுளல்ல...

     ஆனால் பகவத் கீதையைப் பற்றி நினைக்கும் பொழுது வியாச முனிவரைப் பற்றி நினைக்காமல் நாம் கண்ணனைப் பற்றியல்லவா நினைக்கிறோம். இதுவே மனித சமூகத்தின் அறிவீனம். இன்றும் அந்த அறிவீனம் தொடர்கிறது. ஒரு திரைப்படத்தில் வரும் கதாப்பாத்திரம் செய்யும் செயல் இயக்குனரின் கற்பனைப் படைப்பே... ஆனால் நமக்கோ அந்த செயலை செய்யும் கதாப்பாத்திரம் கதாநாயகனாகத் தோன்றி மனதில் நின்று விடுகிறது. எனவே அன்றைய அறிவீனம் கண்ணனை கடவுளாக்கியது. இன்றைய அறிவீனம் கதாநாயகர்களை கடவுளாக்கத் துடிக்கிறது. அன்றும் இன்றும் ஓரே அறிவீனம் தான்.
     கண்ணன் ஒரு கதாப்பாத்திரம். கடவுள் அல்ல...அந்தக் கதாப்பாத்திரத்தைக் கொண்டாடுங்கள்  பின்பற்றுங்கள். அதை விடுத்து மக்கள் அந்த கதாப்பாத்திரத்தை வழிபடுவது அதன் சாரத்தை நாம் கீழ்மைப்படுத்துவதற்குச் சமமாகும். அன்று எப்படி கதாப்பாத்திரங்களை கொண்டாடினார்களோ அதையே இன்றைய நவீன மக்களும் தொடர்வது தான் மிகப் பெரிய அவலம்.
      மக்கள் அன்று செய்த செயலையே இன்றும் செய்துக் கொண்டிருப்பது யுகங்கள் எத்தனை மாறினாலும் அது மக்களின் மனநிலையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை எனபதை தெளிவாக நமக்குச் சொல்கிறது.
     நமக்குள் நடக்கும் அகம் புறம் சார்ந்த அந்தரங்க சிக்கல்களை கதாப்பாத்திரங்கள் மூலம் விளக்கி அதை தீர்ப்பதற்கான தேடலில் நம்மை ஈடுபட வைப்பதே ஒரு கலையின் நோக்கம். அந்த நோக்கம் மகாபாரதத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அன்றைய கலைஞனின் சமூக அக்கறை, கற்பனைத் திறன் அவனுடைய படைப்பை ,கதாப்பாத்திரத்தை காலங்கள் கடந்தும் இன்று வரை மக்களின் மனங்களில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய கலைஞனோ வெறும் பொருளுக்காகவும், பணத்திற்காகவும் சமூக அக்கறையின்றி கற்பனையை விற்பதால், அவனுடைய படைப்பு புற்றீசல் போல் தோன்றியவுடன் மறைந்துவிடுகிறது.
     ஆனால் காலந்தோறும் நாம் படைப்பின் நோக்கத்தை விட்டுவிட்டு கதாப்பாத்திரங்களைக் கொண்டாடுவதிலேயே மூழ்கிப் போகிறோம். இதன் காரணமாக வாழ்க்கையின் ஆழமானப் பொருளை உணராமல் யுகயுகமாக மனித உருவில் பொம்மைகளாகவே வாழ்ந்துக் கொண்டு வருகிறோம்.
     இந்த நிலையை நாம் ஒரு பண்டிகை நாளன்று திரையரங்கிற்குச் சென்றால் காணலாம். கடவுள் என்று சொல்லும் அன்றைய காலக்கட்ட கதாநாய்கர்களை விட்டு விட்டு இன்றைய கதாநாயகர்களை வழிபட்டு அவர்களை கடவுளாக்கும் கலாச்சாரம் பெருகி வருவதை காண முடியும்.
      உலக சமயங்கள் உருவான கதைகள் இந்தப் புள்ளியில் இருந்து தான் தோன்றியது என்பதை நமக்கு இது சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது.
      காலந்தோறும் நடந்து வரும் கதாப்பாத்திரத்தின் கொண்டாடங்களை விட்டு விட்டு அதன் மூலம் உணர்த்தும் வாழ்க்கைக்கான தேடல்களை நாம் இந்த கட்டுரை மூலம் தொடர்ந்துப் பார்ப்போம். இது ஒரு விவாதக் களம் தான். எனவே இந்த விவாதத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். தவறிருப்பின் தவறாமல் திருத்தவும்.



வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே

4 comments:

  1. காலந்தோறும் நாம் படைப்பின் நோக்கத்தை விட்டுவிட்டு கதாப்பாத்திரங்களைக் கொண்டாடுவதிலேயே மூழ்கிப் போகிறோம். இதன் காரணமாக வாழ்க்கையின் ஆழமானப் பொருளை உணராமல் யுகயுகமாக மனித உருவில் பொம்மைகளாகவே வாழ்ந்துக் கொண்டு வருகிறோம்.
    மிகச் சரியான உண்மையே நல்ல பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சசிகலா அவர்களே...

      Delete
  2. படைப்பை போற்றுபவர்கள், படைத்தவனை யோசிப்பதில்லை...
    (சிலருக்கு) ஏற மட்டும் தான் ஏணி... பிறகு எட்டி உதைப்பது தான் வேலை... (எல்லாவற்றையும்)

    ரசிகராக இருப்பது அவரவர் விருப்பம்... வெறியராக இருந்தால் என்ன செய்வது... ?

    எல்லாவற்றிக்கும் காரணம் : அறியாமை... தன்னைத்தான் உணராமை...

    நல்ல அலசல்... தொடர வாழ்த்துக்கள்... நன்றி…(TM. 5)


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு மிக்க நன்றி...

      Delete

உங்களின் கருத்துக்களே எனது படைப்புக்கு உரம்

Popular Posts