• 8.27.2012

  தமிழ் வலைப்பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவிதைத் துளிகள்

        இன்று தமிழ் வலைப்பதிவர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த சந்திப்பு ஒரு பெரும் விழாவாகவே இனிதே  நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியாத தமிழ் பதிவர்கள் இணையத்தில் இந்த நிகழ்வைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

       இந்த நிகழ்வைப் பற்றி நிறையப் பதிவர்கள் வலைப்பூவில் பதிவிடுவதாக சந்திப்பில் கூறியிருந்தார்கள். எனவே நான் அந்த நிகழ்வின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்யப் போகிறேன். அது பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவிதைத்துளிகளைப் பற்றிய பதிவு.
       காலை பதிவர்கள் அறிமுகம் முடிந்து, மதியஉணவு இடைவெளிக்கு பிறகு மூத்தப் பதிவர்களை கவுரவிக்கும் நிகழ்வுக்கு நடந்தது. அது முடிந்தவுடன்  திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் முன்னிலையில் கவிதைகளைப் பதிவர்கள் வாசித்தார்கள்.
       முதலில் கோவை மு.சரளா சொற்களைப் பற்றிய அழகான ஒரு கவிதையை வாசித்தார். அதில் நான் கவனித்த வரிகள் சொற்களை பதப்படுத்தி வைத்திருக்கிறேன் கரைவதற்குள் எடுத்துக் கொள்ளுங்கள். என்று பதிவர்களிடம் தன் அன்பை சொற்களின் மூலம் பரிமாறினார்.
       பிறகு லதா நந்து அவர்கள் நகம் பற்றிய ஒரு கவிதையை சந்த நயத்துடன் வாசித்தார். அதில் செல்போன் சிம்மை அகற்ற     மெட்டியில் மாட்டும் நூலை அகற்ற, பட்டாசு திரியினை பதமாக கிள்ள
  என்று நகம் பற்றி நுணுக்கமாக ஒரு கவிதையை வாசித்தார்.
       மூன்றாவதாக வசந்த மண்டபம் மகேந்திரன் ( நதிக்கரைத் தாகங்கள்) என்னும் ஒரு தலைப்பில் கவிதை வாசித்தார். தூக்கம் கலைந்து மீண்டும் தூக்கத்துக்குள் ஆழ்ந்தும், புழுதி பறக்கும் பாலைவனத்தில் இல்ல இந்த தாகங்கள் என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.
       அடுத்து கரை சேரா அரசன் (மெளனம்) என்னும் தலைப்பில் ஒவ்வொருத் தருணங்களின் வரும் வலிகளின் மெளனத்தை அழகாக சொன்னார். எனக்கு இடையில் சிலர் பேசிக் கொண்டிருந்ததால் என் காதில் கேட்ட வரிகள் ” “மன்னிப்பின் வலியை மனைவியின் மெளனம்” “
       அடுத்ததாக கவீதை வீதி செளந்தர் ( நிலம் கேட்கும் நிம்மதி) திருத்தியது தலைப்பில் சிறு சந்தேகம் இருக்கிறது. இடையில் சிலப் பேரின் பேச்சுக்கள் அவரின் கவிதை வரிகளை விழுங்கிவிட்டது. நிலங்களெல்லாம் பிளாட்டுகளாக மாறும் அவலத்தை அந்த கவிதை அழகாக சொன்னது. “வீடு விதைக்கிறோம்  எப்படி அறுவடை செய்வது “
       பிறகு விரைவில் மாப்பிள்ளையாகப் போகும் மயிலன வந்தார். அவர் வாசித்த கவிதைக்கு உண்மையில் என்னத் தலைப்பு என்று சொல்ல முடியவில்லை. தன்னுடைய சொந்த வாழ்க்கையின் சில நிகழ்வுகளை ரசிக்கும்படியாக நம் முன் வைத்தார். அதில் “ வாழும் கலையை சொல்லிக் கொடுக்கும் ரவிசங்கரை விட்டு தபூசங்கரிடம் சிக்கிக் கொண்டேன்.” “ என்ற பொருளில் ஒரு வரிகளை என்னால் மறக்க முடியவில்லை. அது மட்டுமின்றி அந்த கவிதையிலேயே பதிவர்களுக்கான திருமண அழைப்பையும் நமக்கு அளித்துவிட்டார். பட்டுக்கோட்டையில் தான் திருமணமாம்.
       அடுத்து ரிஷ்வன் பதிவுகளைப் பற்றியே ஒரு அழகான கவிதையை நம் முன் வாசித்தார். தமிழ்ப் பதிவர்களின் அத்தனை பக்கங்களையும் புரட்டிப் பார்ப்பதாக அந்த கவிதை அமைந்தது. அன்றைய அகநானூறு காதல் ஆதிக் காதல், இன்றைய முகநூல் காதல் நவீனக் காதல் என்று பதிவுகளைப் பற்றிய அவர் கவிதை அருமை.
       திருமதி அகிலா அவர்கள் அடுத்ததாக (எனக்கு 82 உனக்கு 76) என்றத் தலைப்பில் முதியோர்களின் வாழ்க்கைப் பற்றிய வலியான பக்கங்களை நம் முன் வைத்தார். இளவயதில் உன் சேலை முந்தானை என் கையில் ஆனாலும் பம்பரமாய் நீ..... ” “ என்று வரும் வரிகள் அன்பால் என்னை கட்டிப் போடும் வரிகள்
       தீதும் நன்றும் ரமணி அவர்கள் அடுத்ததாக அழகாக கவிதைப் பற்றிய பயத்தைப் போக்கிட ஒரு கவிதைப் படித்தார். அந்த கம்பனோட மகனைப் போல் நாம் மாற மாட்டோமா...? கவிதை நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை அனைவருக்கும் தருவது போல் கவிதை அமைந்தது.
       பிறகு வாங்க பழகலாம் அனந்து நட்பைப் பற்றிய ஒரு அழகான கவிதையை வாசித்தார். இதை ஏற்கனவே அவரின் வலைத்தளத்தில் நான் படித்திருக்கிறேன். ” “ வெட்கத்துடன் உன் திருமண அழைப்பிதழை நீ கொடுத்ததும் தான் நீ பெண்ணென்பதையே நான் உணர்ந்தேன் “ என்ற வரிகளில் ஆண் பெண் நட்பின் மென்மையை உணர முடிந்தது.
       அடுத்து தேவராஜன் அவர்கள் பெற்றவர்களைப் பற்றிய் ஒரு கவிதையை உருக்கமாக வாசித்தார். சுரேகா அவர்கள் எவ்வளவு சொல்லியும் நிகழ்ச்சியில் பேச்சின் சலசலப்பு குறையாததினால் கவிதையை சரியாக கவனிக்க இயலவில்லை.
       அடுத்து சீனி போராட்டத்தைப் பற்றிய ஒரு கவிதையையே வாசித்தார். அவரின் கவிதையில் “போர்களமா வாழ்க்கை பார்க்கலாமே ஒரு கை “ என்ற வரிகளில் மனதி பச் என்று ஒட்டிக் கொண்டது.
       பிறகு முரளிதரன் அவர்கள் ( நானும் நானும்) என்ற தலைப்பில் நமக்குள் போராடிக் கொண்டிருக்கும் இரண்டு நான்களைப் பற்றி கவிதையில் அழகாக விளக்கினார். “ நமக்குள் இருப்பது இரண்டு நான்கள் “ நான்கள் எனக்கு அடங்குவதில்லை.” தெறிக்கும் வரிகள்.
       கேள்வியும் நானே பதிலும் நானே புரட்சி மணி அவர்கள் பெண்ணும் ஆன்மீகமும் என்ற தலைப்பில் இரண்டையும் கவிதையில் அழகாக ஓப்பீடு செய்திருந்தார். “ மண்ணோடு விளையாடுவது விளையாடல்ல    பெண்ணோடு விளையாடுவது விளையாடல்ல  விண்ணோடு விளையாடுவது விளையாடல்ல  உன்னோடு விளையாடுவதே விளையாட்டு “ மனதில் பதிந்த வரிகள். 
       அவருக்குப் பிறகு போளூர் தயாநிதி அவர்கள் பதிவர் சந்திப்பைப் பற்றிய ஒரு கவிதையை வாசித்தார். இறுதியில் நாம் பல விஷயங்களைப் பற்றிச் சொன்னாலும் நாம் அனைவரும் தமிழர் வலைப்பதிவர் சாதி என்று முடித்தார்.
       இவர் முடித்தவுடன் பதிவர்கள் சந்திப்பை பற்றி தன் பாணியில் சுரேகா அவர்கள் இரண்டு வரிகளில் ஒரு கவிதை சொன்னார். 
  “ நாம் கூடிக் கரையும் காகங்கள் அல்ல, நாம் கூடி மழைப் பொழியும் மேகங்கள் “ மறக்க முடியாத சொற்கள்.
       பிறகு கணக்காயர் அவர்கள் பதிவர்கள் பற்றிய சிறு கவிதையை வாசித்தார். அதன் பிறகு மக்கள் சந்தை அருண் சில செய்திகளை நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
       இறுதியாக கேபில் சங்கர் அவர்கள்  (என்டர் கவிதைகள்) என்று சொல்லி ஒரு கவிதை வாசித்தார். என்ன என்ன பிடிக்கும் என்று சொல்லி இறுதியில் காதலில் முடித்தார். ”“எண்ணெய்யில் உருகும் மைசூர் பாக்கு பிடிக்கும் “ என்று ஆரம்பித்த வரிகள் செவிகளைத் தாண்டி நாவினை தீண்டியது.மதியம் பந்தியில் தின்ற மைசூர் பாக்கு நினைவுக்கு வந்தது.
       அவருடன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சி முடிவடைந்தது. இருப்பினும் நிகழ்ச்சியில் தொடர்ந்து மேடை அல்லாமல் பார்வையாளர்கள் இருக்கையிலும் பேச்சொலிக் கேட்டுக் கொண்டே இருந்தது. சுரேகா அவர்கள்  பல முறை சொன்ன பிறகு தான் சிறிது அமைதி நிலவியது. அமைதிக்குப் பின் நமது அழைப்பை ஏற்று வருகை தந்த பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்கள் பேசினார். என்னுடைய பகுதியை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். என்னால் இயன்ற வரை கவனித்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறேன். எதெனும் தவறிஉப்பின் திருத்தவும்
        பதிவர்கள் எல்லோரின் ஒத்துழைப்புடன் உலக தமிழ் வலைப்பதிவர்களின் முதல் மாபெரும் சந்திப்பு வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது.


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே