• 8.29.2012

  ரியல் எஸ்டேட் ஓனர்களும் VS பொது மக்களும்        இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் சுவாரசியமான ஒரு விவாதம் நடந்தது. பொது மக்களுக்கும் ரியல் எஸ்டேட் ஓனர்களுக்குமான அருமையான கலந்துரையாடல்.
       பாதியில் இருந்து தான் என்னால் பார்க்க முடிந்தது. பொது மக்கள் எதிரில் அமர்ந்திருந்த ரியல் எஸ்டேட்காரர்களை வறுத்தெடுத்துவிட்டார்கள். நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்களையெல்லாம் சீரழித்தது நீங்கள் தான் என்று ஒட்டு மொத்தமாக அவர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள்.


       அவர்களோ நீங்கள் நிலத்தைத் தருவதால் தான் நாங்கள் வாங்குகிறோம் என்று வாதிட்டார்கள். திரைத்துறையில் இருந்து வந்த ஒரு வசனகர்த்தா மட்டும் மிகவும் காரசாரமாக ரியல் எஸ்டேட் ஓனர்களிடம் விவாதித்தார்.
       அவர் சொன்ன கருத்துக்கள் உண்மையில் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது. விவசாயிகளிடமும், வேறு சில நபர்களிடமும் நிலத்தை வாங்கியவுடன், அதில் வேறு ஒரு இடத்தில் திருட்டுத் தனமாக களவாடிய மணலைக் கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அங்கிருக்கும் உயிரினங்கள் அழிகிறது. மண் வளமும் சீரழிகிறது. இதன் மூலம் நம் நாடு விவசாயத்தின் அழிவுப் பாதையின் விளிம்பில் இருப்பதாக சொல்கிறார்கள் என்றார்.
       இது நமக்கே கண் கூடாகத் தெரிகிறது. விலைவாசி ஏற்றம், வடக் கிழக்கு மாநிலத்தவரின் எதிர்ப்பாராத பெருக்கம் மற்றும் பெருகி வரும் நகரங்கள் இவையெல்லாம் நம் நாட்டின் விவசாயத்தை கொஞ்சகொஞ்சமாக அழித்து, இப்பொழுது அழிவின் விளிம்பில் நம் விவசாயம் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று யோசித்தால், ஒட்டு மொத்த மக்களின் சுயநலமும், பொறுப்பில்லாத அரசாங்கமும் தான்.
       நானே தென் மாவட்டங்களில் மணல் திருட்டை நேரடியாக கண்டிருக்கிறேன். ஒரு முறை அதைத் தடுத்த வன அதிகாரி ஒருவருடன் இன்னொரு வன அதிகாரி வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார். காரணம் அவர் தடுத்தது அவருடைய பகுதியை சேர்ந்தது இல்லையாம். திருடனை விட்டு விட்டு என் எல்லைக்குள் வந்து நீ எப்படி பிடிக்கலாமென்ற ரீதியில் தான் அந்த இரு அதிகாரிகளுக்குமிடையில் பிரச்சினை நடந்தது. இறுதியில் மணல் திருடியவனை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
       இப்படி மணலை எடுத்துக் கொண்டு வந்து விவசாய பூமியில் போட்டு கட்டடங்கள் பல கட்டி பொது மக்களின் பேராசையை தூண்டிவிட்டு, நம் தாயாக உயிராக நினைத்து வந்த மண்ணை சதுர அடிகளில் ஏலம் விட்டு பணம் ஈட்டுகின்றனர். இது எந்த வகையில் நியாயம். இப்படி கட்டப்பட்ட வீடுகள் மட்டும் பல லகரங்களுக்கும் மேல் காலியாகத் தான் உள்ளதாம்.
       ஒரு காலத்தில் நிலம் விவசாயத்திற்கு என்று இருந்தது. பிறகு அதை அசையா சொத்தாக தங்கம் போல் நினைத்து வாங்கினார்கள். இப்பொழுது வாழும் வீட்டை விற்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாங்குவது, மக்களின் பேராசைக்கு அளவே இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது

       என்னிடம் 15 லகரம் இருக்கிறது, ஒருவருக்குப் பணத் தேவை எனக்கு விற்கிறார். நான் வாங்கி வீடு கட்டி மக்களுக்குத் தருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் ஒருவர் சொன்னார்.
       இங்கு என்ன பிரச்சினையென்றால் யாருக்கு எந்தப் பொருள் தேவையோ அந்தப் பொருள் அவர் கையில் கிடைப்பதில்லை. தேவையற்றவர்களின் கைகளில் தான் கிடைக்கிறது. இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை கூட உண்ண முடியாமல் இருப்பவர்கள் லட்சக்கணக்கானப் பேர் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் நிறையப் பேர்களின் வீட்டில் குளிர்ச்சாதனப் பெட்டியில் தான் உணவுகள் பசியாருகின்றன. அந்த உணவு பசித்தவர்களின் வயிற்றை அடைய செய்யும் வழிமுறையை நம் அரசாங்கம் இன்றும் செய்யவில்லை.
       அதேப் போல் தான் ஒருவருக்கு நாலைந்து வீடுகள் என்பது இன்று மிக சகஜமாகிவிட்டது. பலர் ஒதுங்க கூட குடிசையில்லாமல் நம்மிடையே தான் உலவி வருகிறார்கள். முதலில் நாம் சிந்தித்தாக வேண்டும். முதலில் நம் பேராசையை தகர்த்தாலே சமூகம் சீரடையும். ஏனெனில் சென்னையில் வசித்துக் கொண்டு எங்கோ திண்டிவனத்தில் வீடு வாங்கிவிட்டு அதற்கு வாங்கிய கடனை அடைக்கவே கணவனும் மனைவியும் காலம் முழுதும் கடினப்படுவது வாழ்க்கையாகாது. அது வெறும் பிழைப்பு தான்.
       எந்த சேனலைத் திறந்தாலும் பேருந்து நிலையம் அருகில் 1 கிமீ தொலைவில் என்று சொல்லி சின்னத் திரையில் பவனி வரும் ஒரு நடிகரையோ, நடிகையையோ அழைத்து நமக்கு காதில் பூ சுற்றுகிறார்கள். இன்று வாங்குங்கள் நாளை இது பல மடங்கு உங்களுக்கு லாபம் ஈட்டித் தரும் என்ற ஆசை வார்த்தைகள் பலவற்றை அள்ளித் தெளிக்கிறார்கள். மக்களின் ஆசையை பேராசையாக்கிப் பணம் பண்ணுகிறார்கள்.
       மக்களே விழித்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஆனி வேரான விவசாயத்தை அழித்து சில சுயநலக்காரர்கள் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழவே இந்த வியாபாரம் நிகழ்கிறது. உண்மையில் இன்று வாங்கும் வீடு அடுத்த நாளே பன்மடங்கு ஆகி என்ன பயன், உண்ண தரமான காய் கனிகளில்லை, குடிக்க குடிநீரில்லை எல்லாம் மாசு படிந்து இருக்கிறது. இதற்கு காரணம் சரியான கட்டமைப்பில்லாமல் வளர்ந்துக் கொண்டிருக்கும் இந்த ரியல் எஸ்டேட் தொழில் தான்.
       சென்னையின் பரப்பளவின் படி இங்கு 30 லகரத்திற்கு மேல் மக்கள் வாழ்வது ஆரோக்யமற்றது என்று உலக சுகாதார அமைப்பு சொல்வதாக ஒரு செய்தி படித்தேன். அது மட்டுமின்றி இந்தியாவில் குடிநீர் என்று சொல்லும்படி 1 % கூட சுகாதாரமான நீரில்லை என்று சொல்கிறது.
       இந்த நிலையை மாற்றாமல் நாம் நிலத்தையோ! வீட்டையோ வாங்கி என்னப் பயன். ஒரு வேளை வருங்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு வரும் புற்றுநோயையோ, சிறுநீரக செயலிழப்பையோ அல்லது   புதிதாக தோன்றும் நோயையோ குணப்படுத்த உதவும். இந்த நிலையை நாம் தான் நம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்துகிறோம்
  தயவு செய்து நம் தலைமுறைக்கு நல்ல காற்றையும்,நீரையும்,உணவையும் கொடுக்கப் போராடுவோம். சொத்து எனபது ஆரோக்கியம் தான். நம் இந்தியாவின் ஆரோக்கியம் விவசாயம் தான். குடியிருப்பதற்காக வீடு வாங்குங்கள் சொத்திற்காக வீடு வாங்குவதை தவிருங்கள். நம் பிள்ளைகள் தான் நமக்கான சொத்து,அவர்களை ஆரோக்கியமாக வளர்த்தாலே, அவர்கள் உழைப்பின் மூலம் அவர்களே தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளப் போகிறார்கள்.
  இங்கு கவிதை வீதி செளந்தர் அவர்களின் ( நிலம் கேட்கும் நிம்மதி) கவிதையில் ஒரு வரியை சொல்ல நினைக்கிறேன்
  “வீடு விதைக்கிறோம்  எப்படி அறுவடை செய்வது “
    நம் பிள்ளைகளின் மனதில் ஆசையை விதைத்துவிட்டு முதியோர் இல்லத்தில் அமர்ந்துக் கொண்டு அன்பில்லை என்று கூறுவது எந்த வகையிலும் நியாயம் ஆகாது.


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே