• 9.06.2012

  ஆண் பெண்ணின் அகப்புறச் சூழல்

   
       எத்தனைத் தான் காலம் மாறினாலும் இன்றும் மனித உழைப்பை உறிஞ்சும் அவலம் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அது காலத்திற்க்கேற்ப கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.
       சமீபத்தில் ஒரு பிரபல நிறுவனத்திற்கு என் நண்பனைக் காணச் செல்ல நேர்ந்தது. மக்களை இணைக்கும் சேவையில் இருக்கும் அந்த பிரமாண்டமான நிறுவனத்தில் வேலை செய்வதையே பெருமையாகக் கருதுபவர்கள் பலர். ஒரளவு படித்த மாணவமாணவிகளையும் உடனே வேலைக்கு அமர்த்தும் நிறுவனமாக அந்த சுத்து வட்டாரத்தையே கவர்ந்து கொண்டிருக்கிறது அது.
       பத்தாவது வரை கூடப் படிக்காத ஆண் பெண்களும் அந்த நிறுவனத்தில் வேலைப் பார்ப்பது மிகச் சுலபம். அதுவும் ஒப்பந்த அடிப்படையில் வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்க்கும் மேல் இருக்கும். காலை, மாலை என்று பணி மாற்ற அடிப்படையில் அங்கு 24 மணி நேரமும் வேலை நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல என்று நீங்கள் நினைக்கலாம்.
       இயந்திரத்தினிடையே எட்டு மணி நேரத்திற்கும் மேல் நிற்பது ஆணுக்கு ஒன்றும் புதிதல்ல...

       ஆனால் இப்பொழுது எல்லாத் துறையிலும் ஆணுக்கு நிகராகப் பெண்களும் வேலைப் பார்ப்பதால், இந்த வேலையை அவர்களும் பார்க்கத் துணிந்துவிட்டார்கள். எனவே சில ஆண்டுகளாகவே அவர்களும் இயந்திரங்களுக்கு இடையே வாழப் பழகிக் கொண்டு வருகிறார்கள். காரணம் 80% அவர்களின் குடும்ப சூழலுக்காகவும், 20% பொழுது போக்குக்காகவும் இந்த வேலையை செய்யத் துணிகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேலைச் செய்யும் இந்த இடத்தில் இவர்களுக்குள்ளான உறவுகள், ஆச்சர்யமும், அதிர்ச்சியும் நிறைந்ததாய் இருக்கிறது.
       இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஒரு பெண்ணிடம் பேசுகையில் அவள் சொன்ன விஷயங்கள் என்னை மிகவும் அவர்களை எண்ணி வருத்தப்பட வைத்துவிட்டது. ஆம் பகல் 6 மணிக்கு சென்று அந்த எந்திரத்தை இயக்க ஆரம்பித்துவிட்டால், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அங்கு பணி நடந்து கொண்டு தான் இருக்கிறது. குறைந்தது 8 மணி நேரமேனும் வேலைப் பார்க்கும் பெண்கள் , இயந்திரங்களின் நடுவே நின்றுவிட்டால் இயற்கை உபாதைகளுக்குக் கூட வேறொருவரின் உதவியைத் தான் நாட வேண்டியிருக்கும். ஏனெனில் தொடர்ச்சியாக இயங்கும் அந்த இயந்திரத்தை விட்டுச் செல்ல வேண்டுமானால் வேறு யாரையேனும் உதவிக்கு நிற்க வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும்.
       இருபாலரும் வேலை செய்யும் அந்தச் சூழலில் பெண்கள் அருகில் இருக்கும் பட்சத்தில் கவலை இல்லை. ஆண்கள் இருந்தால் பெண்களின் பாடு திண்டாட்டம் தான். பெரும்பாலும் பள்ளியை கடந்தோ,அல்லது துறந்தோ வேலைக்கு வரும் பெண்கள் தான் அங்கு அதிகம். எனவே தங்களின் நிலைமையை அதுவும் ஓரளவு தங்களின் வயதுடைய ஆண்களிடம் எப்படிச் சொல்வர். அதற்கான பக்குவம் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் அதுவும் அந்த வயதில் வருவதற்கில்லை. அப்படி வந்தாலும் அதை நட்பு ரீதியிலோ,சகோதரத்துவ முறையிலோ பார்த்து உதவும் மனப்பான்மை ஆண்களிடம் அவ்வளவு எளிதில் வருவதே இல்லை. இருப்பினும் உதவிகள் செய்யப்பட்டுக் கொண்டுத் தானிருக்கிறது.

       இந்த சூழ்நிலையே பெண்களுக்கும் ஆண்களுக்குமான உறவை வளர்க்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் 16ல் இருந்து 20 வயதிற்க்குள் இருக்கும் ஆண்களும் பெண்களும் பழக நேர்கையில் பெரும்பாலும் நிறைய தகாத நட்பு தான் வளர்கிறது.பெண்கள் ஆண்களிடம் நட்புக் கொண்டே ஆக வேண்டிய சூழலில் உள்ளனர். பக்குவப்பட்ட நட்பு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இருக்கும் அந்த சூழலில், வயதின் காரணமாக நிறைய தவறுகள் நடந்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.
       எனக்குத் தெரிந்து அந்தப் பெண் சொன்ன தகவல்கள் மட்டுமின்றி அங்கு வேலை செய்யும் நிறைய ஆண்களிடமும் பேசுகையில் எனக்குத் தெரிந்தது எல்லோருக்குமே நிறைய காதலன், காதலிகள் இருக்கிறார்கள். இந்த உறவு மனதளவில் மட்டுமில்லாமல் இன்றைய நவநாகரிகயுகப்படி கந்தர்வ முறைப்படியும் சேர்ந்துவிடுகின்றனர். வயதிலும் மனதிலும் பக்குவப்படாமலும்,போதிய கல்வியறிவின்மையாலும் தத்தளிக்கும் இவர்களின் கையில் காசு வேறு கிடைத்து விடுவதால், வேலைக்கு சேர்ந்த சிறிது காலத்திற்க்குள் ஆணும் பெண்ணும் சரியோ தவறோ, தனக்கானத் துணையைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள்.

       போதாக் குறைக்கு இவர்கள் வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் தூங்கிக் கொண்டு இருப்பதால், குடும்பத்தாருடனான இவர்களது நெருக்கம் அறவே தளர்ந்துவிடுகிறது. இதுவும் இவர்கள் மனது அலைப் பாய வழி வகுக்கிறது. விழித்திருக்கும் நேரமும் அலைப்பேசியுடனேயே சென்றுவிடுகிறது. இதில் 100ல் 50சதவீத ஆண் பெண் உறவுகள் தற்காலிக தேவைக்காகவோ, பொழுதுப்போக்கிற்காகவோ, ஆதாயம் கருதியோ ஏற்படுகிறது. எனவே இந்த உறவில் ஆணோ, பெண்ணோ தன் தேவை முடிந்தவுடன், உறவை முறித்துக் கொள்வதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இதில் என்ன புதுமை ?இந்த நிகழ்வுகள் இன்று நாடு முழுவதும் நடப்பது தானே என்று நீங்கள் கேட்கலாம்.
       ஆம். நாடு முழுவதும் நடப்பது தான்,இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த இந்த உறவுகள், பெரும்பாலும் ஒரளவு கல்லூரியிலோ, கல்லூரிப் படிப்பு முடிந்து வேலையிலோ நிகழ்ந்துக் கொண்டிருந்தது. இது வரை எல்லோரும் இந்த வாழ்க்கை முறை கணினி சம்பந்தப்பட்ட தகவல் தொழில் நுட்ப பணிகளில் வேலைப் பார்க்கும் பணியாளர்களிடமே இருந்தது என்றிருந்தோம்.
       ஆனால் இது அடி மட்ட தொழிலாளர்கள் வரை சென்றுவிட்ட்து. நாளடைவில் இது ஒட்டு மொத்த தமிழக கலாச்சாரமாகவே மாறும் அபாயமிருக்கிறது.
       நன்கு படித்து நல்ல பணிகளில் உள்ள ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலேயே இன்று பக்குவப்பட்ட நட்புக்கான சாத்தியக் கூறுகள் அரிதாகவே இருக்கிறது. அப்படியிருக்க முறையான கல்வியறிவின்றி, பக்குவபடாத வயதுடனும்,மனதுடனும் கடினமான இயந்திரங்களின் நடுவே வேலைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல நட்பிற்கான சாத்தியக் கூறுகள் இருக்க வாய்ப்பு குறைவே...
       அப்படியே நிகழ்ந்தாலும் அதை தவறாகப் பயன்படுத்தவே அவர்களின் வயதும் மனதும் அந்த சூழலும் தூண்டுகிறது. இதற்கெல்லாம் என்னக் காரணம்? அரசாங்கத்தின் மீது பழிப் போட்டுவிடலாமா?
       எப்படி எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் மீது பழிப் போடுவது.
  ஒரு தாளை நகல் எடுக்கச் செல்லும் இடத்தில் இருக்கும் பெண்மணிகளை நீங்கள் கவனித்ததுண்டா? உட்காருவதற்கு கூட இடம் இல்லாத இட்த்தில் தான் பலர் இப்படிப்பட்ட கடைகளை பெரும் பாலும் நடத்துகிறார்கள். அங்கு கழிவறைக்கான வசதிகள் பெரும் அளவு இருப்பதில்லை. இது நிறைய இடங்களில் பெண்களுக்கான சாபக் கேடு. இன்னும் நம்முடைய சமூக சூழலே பெண்கள் வெளியில் உலவுவதற்கான அத்தியாவசிய தேவைகளை பெற்றிருக்கவில்லை. அப்படியிருக்க பெண்கள் சமூகம் திடீரென வெளியில் வந்ததால் குறிப்பாக நம் தமிழகம் மிகவும் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
       ஏனெனில் நீண்ட காலமாக பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருந்துவிட்டு, திடீரென வெளியில் கல்வி, பணி, சேவையென்று வந்துவிட,அவர்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் வெளிச்சமூகத்தில் இன்றும் பூர்த்திச் செய்யப்படாமலேயே இருக்கிறது. 

       அப்படியிருக்க இந்த பிரச்சினைகளை சந்திக்கும் வேளைகளில் எதிர்பாலரான ஆண்களையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆண்களுக்கும் இது ஒரு புது அனுபவம். பெண்களை வீட்டிற்குள்ளேயே பார்த்துவிட்டு வெளிச்சூழலில் பார்க்க நேரிடும் பொழுது, அவர்களின் சில இயலாமைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறார்கள். எனவே இந்த சூழலுக்கு ஆண்களும் பெண்களும் பழகுவதற்குள்ளேயே நாம் வெளி நாட்டு நிறுவனங்களையெல்லாம் கூவி  அழைத்து விட்டோம்.
       தன்னிலை அறியாத தலைமுறையை வளர்த்துவிட்டோம். இங்கே இப்பொழுது இந்தியர்களும் இல்லை,தமிழர்களும் இல்லை எந்த கலாச்சாரமும் இல்லை. வெறும் பணத்தை எப்படித் தேடிக் கொள்வது என்ற முனைப்பு மட்டும் தான் இருக்கிறது. அதற்கான வழிமுறைகள் மட்டும் தான் சொல்லித் தரப் பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே ஒரு பெண் 50 ஆடவர்களை ஏமாற்றிவிட்டாள், ஒரு ஆண் 10 பெண்களை ஏமாற்றிவிட்டான் எனபதெல்லாம் ஆச்சர்யத்திற்குரிய செய்தியே இல்லை. ஏனெனில் இது பத்திரிக்கை செய்தியாக இல்லாமல் தினமும் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்ந்துக் கொண்டு தானிருக்கிறது. நம் சமூக கட்டமைப்பு சரியானால் ஒழிய இந்த பிரச்சினை தீரப் போவதில்லை.சரியாகுமா...? வழிகள் உண்டு தொடர்ந்துப் பார்ப்போம்


  வாசக நண்பர்களே பதிவு பிடித்திருந்தால்,உங்கள் கருத்துக்களையும் வாக்கையும் அளித்துவிட்டு செல்லலாமே